லடாக் பயணம் - 1. லே (Leh)
ஆள் அரவமே இல்லாமல் உங்களுக்கே உங்களுக்கான மிக நீண்ட பெருவெளி, உங்கள் வெறுங்கண்ணால் எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பார்க்கலாம். ஒவ்வொரு 2கிமீ தொலைவுக்கும் மாறிக்கொண்டே இருக்கும் நிலவெளிகள், மலைகளின் நிறங்கள். வழியில் எப்போதோ எங்கோ ஒரு கிராமம், அதில் நான்கு வீடுகள், கொஞ்சம் புல்வெளி, அதனுடன் 100 ஆடுகள். நான்கைந்து ஏணியை சேர்த்துப்போட்டால் தொட்டுவிடலாம் போல வானம்.

சிந்துவும், சான்ஸ்காரும், நுப்ராவும், சோயாக்கும் நுரை பொங்க பாய்ந்தோடும் லடாக்கில் பெரும்பகுதி பாலை வானம். எங்கோ எப்போதோ தென்படும் சில புல் பூண்டுகள், மிக அரிதாக வயல்கள். மரங்கள் என்பதைப் பார்ப்பதே மிக மிக அரிது .
ஆனால் இயற்கையின் அமைப்பில் மருதமும் முல்லையும் தான் அழகா என்ன? அமைதியான லடாக் கவின் கொஞ்சும் பாலைவனம்!
லடாக் செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. சென்று வந்த பின் இப்போது நினைத்தாலும் கூட கனவு போலவே இருக்கிறது.
தமிழ் நாட்டில் பாதி அளவு இருக்கும் லடாக் யூனியன் பிரதேசத்தின் மொத்த மக்கட்தொகை வெறும் 3 லட்சம் தான். அதாவது, சென்னை மாநகராட்சியின் ஒரு வார்டு மக்கட்தொகையை விடவும் குறைவு!
முஸ்லிம்கள் 46%, பௌத்தர்கள் 39%. அவர்களில் பெரும்பாலோனோர் 'லே' நகரத்திலும் கார்கிலும் வாழ்கிறார்கள்.
![]() |
| Leh from higher Altitude |
இப்போதும் group tour தான். Thrillophilia என்னும் நிறுவனம் சுற்றுலா ஏற்பாடுகள் செய்து கொடுத்தது. மொத்தம் 7 இரவு 8 நாட்கள் என்ற package. அதில் முதல் நாளும் கடைசி நாளும் விமான நிலையத்தில் இருந்து கூட்டி வருவதும், கொண்டு விடுதலும் மட்டுமே. தங்குமிடம், போக்குவரத்து தவிர எல்லா நாளும் காலை உணவும் இரவு உணவும் கொடுத்து விடுகிறார்கள்.
லடாக் உயரம் அதிகமான இடம் என்பதால் நம்மை அந்த சூழலுக்கு பழக்கப்படுத்திக்கொள்ள (Acclimitization), ஒரு நாள் முன்னமே அங்கு சென்று சேர்வது நல்லது என்று சொன்னார்கள். அதை அனுசரித்தே நான் முதல் நாளே லடாக்-இன் தலைநகரான லே (Leh) சென்று விட்டேன்.
முதல் நாள் இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லாமல் விமானப் பயணம் செய்ததால் அன்று மாலை கடும் தலைவலி. லே மார்க்கெட் பகுதியில் ஒரு டாக்டர் இருந்தார். அவரிடம் சென்று ஒரு சிறு ஆலோசனை. BP நார்மல் என்றாலும் , SPO2 -86% தான் இருந்தது, அந்த 11500 அடி உயரத்தில், அது நார்மல்தான் என்று சொன்னார். வலி நிவாரணி மட்டும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
![]() |
| Leh Market |
வெளி மாநிலத்தின் postpaid mobile connection மட்டுமே லடாக்கில் வேலை செய்யும் என்று சொன்னார்கள். ஆனால் என்னுடைய postpaid வோடபோன் சுத்தமாக எடுக்கவில்லை. இன்னும் 8 நாட்களை ஓட்டவேண்டும். அங்கேயே Prepaid ஏர்டெல் சிம் ஒன்று வாங்கிக்கொண்டேன், அது லடாக்கில் மட்டுமே வேலை செய்யும். அது சரியான முடிவு. உடனே வேலை செய்யத் தொடங்கியது. எங்கெல்லாம் கொஞ்சம் மக்கள் கூட்டமாக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் ஒரு ஏர்டெல் டவர் இருக்கிறது. நல்ல coverage உம் உள்ளது
![]() |
| Thukpa |
அப்படியே இரவு உணவை அங்கிருந்த Tibetan Restaurant - இல் எடுத்துக்கொண்டேன். Thukpa என்னும் அந்த உணவும், அடுத்த நாள் நான் சாப்பிட்ட Thenthuk என்பதும் சூப் + நூடுல்ஸ் தான்.
![]() |
| Thenthuk |
நிறைய காய்கறிகள், கொஞ்சம் இறைச்சி, தெளிவான சூப்புடன் நூல் போன்ற நூடுல்ஸ் என்பது Thukpa. கொஞ்சம் கெட்டியான சூப்புடன் பட்டையான நூடுல்ஸ் போட்டிருந்தால் Thenthuk.
அடுத்தநாள் காலை தலைவலி கொஞ்சம் குறைந்திருந்தது . சும்மா இருக்க மனம் இல்லாமல் Hall of Fame என்னும் ராணுவத்தின் நினைவுச் சின்னம் மற்றும் கண்காட்சிக்கு சென்றேன். அடுத்த நாளும் இதே இடத்திற்கு மறுபடி எங்களைக் கூட்டி வருவார்கள் என்று எனக்குத் தெரியாது. இந்தியா செய்த 1962, 1965, 1971 மற்றும் கார்கில் போர் பற்றிய தகவல்களை ஆங்கிலத்தில் பேனர்களாக வைத்திருந்தார்கள். அது தவிர சில விளக்கங்களை ராணுவ அதிகாரிகள் ஹிந்தியில் மிக சப்தமாக விளக்கினார். அவருடைய உணர்வு மட்டுமே எனக்குப் புரிந்தது. மிக நன்று. அது தவிர அன்றும் கொஞ்சம் ஓய்வுதான்.
மதியம் என்னுடைய அறை நண்பர் வந்துவிட்டார். அவர் கொச்சியில் இருந்து வருகிறார். எங்கள் குழுவில் மொத்தம் 6 பேர். கணவன், மனைவி மகன் என்று ஒரு குடும்பம் அஸ்ஸாமில் இருந்து சேர்ந்து கொண்டது. பெங்களூரில் வேலை பார்க்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த DRDO விஞ்ஞானி ஒருவரும் எங்கள் குழுவில் இருந்தார்.
![]() |
| Hall of Fame |
Thrillophilia -வின் Ground Operator ஜியா உல் ஹஸ்ஸன் எங்களுக்கு இந்த பயணம் பற்றி ஒரு அறிமுக விளக்கம் கொடுத்தார்.
"இது ஒரு இன்பச் சுற்றுலா அல்ல. சாகசப் பயணம். அதிக உயரங்களில் ஆக்ஸிஜன் தேவைப்படும். அதை நாங்கள் செல்லும் வண்டியிலேயே கொண்டு வருவார்கள். கார் ஓட்டுநர் அதை எப்படிக்கொடுக்க வேண்டும் என்பதற்கு பயிற்சி பெற்றிருப்பார். எல்லா இடத்திலும் எல்லா உணவும் கிடைக்காது ( சில இடங்களில் உணவே கிடைக்காது என்பது பிறகு தெரிந்தது!). தங்கும் இடங்களில் அதிக வசதியை எதிர் பார்க்கக் கூடாது. HomeStay , கூடாரம், ப்ளைவுட் காட்டேஜ் என ஊரின் வசதிக்கேற்பஇருக்கலாம். சில இடங்களில் உலர் கழிப்பறைகள் இருக்கும்" என்றெல்லாம் சொல்லி எங்களை தயார்படுத்தினார் ( சிலரை பயமுறுத்தினார்!)
மாலை மழை லேசாக தூறிக்கொண்டிருக்க மெதுவாக ஒரு நடை சென்றோம்.
![]() |
| சிந்துவில் கலக்கும் சன்ஸ்கார் நதி |
அடுத்த நாள் திட்டம் லே நகரத்தின் பக்கத்தில் உள்ள சில இடங்களைப் பார்த்து வருவது, அதில் மிக முக்கியமான ஒன்று சன்ஸ்கர் (Zanskar) நதி சிந்துவில் சங்கமம் ஆகும் இடம். சன்ஸ்கர் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிப் பாயும் ஒரு நதி (நைல் நதி போல!). இந்தியாவில் வடகிழக்கில் உற்பத்தியாகும் ஆறுகள் எல்லாமே பிரம்மபுத்திராவில் கலப்பது போல இந்தியாவின் வட உச்சியில் உற்பத்தியாகும் எல்லா நதிகளும் சென்று சேர்வது சிந்துவில்தான்.
இரண்டு மலைகளுக்கு இடையே இருந்து சன்ஸ்கர் நதி வருகிறது.நாங்கள் சென்றபோது சிந்து நல்ல அடர் பழுப்பு நிறத்திலும் சன்ஸ்கர் கொஞ்சம் வெளிறிய நிறத்திலும் இருந்தது. இந்த நிறம் கால நிலைக்கேற்ப மாறும், சில நேரங்களில் நீல நிறமாகத் தெரியும், சில பழைய படங்களில் அப்படிதான் தோற்றமளிக்கிறது. உயரத்தில் இருந்து கீழே இரண்டு நதிகள் ஒன்று சேர்வதைப் பார்ப்பது ஒரு பேரனுபவம்.
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் எப்போதும் இரண்டு அல்ல - இன்னொரு பெரிய ஒன்றாக இருக்கலாம் என்ற தத்துவம் - ஆறுகளின் சங்கமம்.
சன்ஸ்கர் ஆறு குளிர் காலத்தில் உறைந்து விடும். வெப்பநிலை -30C முதல் -40சி வரை அப்போது செல்லுமாம்.Chadar Trek என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ட்ரெக்கிங் இந்த உறைந்த ஆற்றின் மேல் நடந்து செல்வது.
அதன் பின் ஆறுகளின் அருகே சென்றோம். நம்மையெல்லாம் சட்டை செய்யாமல் ஆறு தன்போக்கில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. லடாக் என்பது பாலைவனம், மழை கிடையாது. ஆனால் மலையிலே பனி உருகி உருவாகும் ஆறுகள் அவ்வளவு நீரை சுமந்து செல்கின்றன. அமைதியாக சங்கமத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.
சிலர் River -Rafting செல்ல தயாராகினர். எங்கள் குழு அதெற்கெல்லாம் சரிப்படாது என்பது முதலிலேயே தெரிந்து விட்டது.
அடுத்த இடம் ,திரும்பி வரும் வழியில் உள்ள சீக்கியர்களின் குருத்வாரா. ராணுவத்தில் உள்ள சீக்கியர்கள் இதை நிர்வகிக்கிறார்கள். தலையில் ஒரு கைகுட்டையைக் கட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். உள்ளே பஜனை பாடல்களை ஒரு குழு இசைக்கருவிகள் எல்லாம் வைத்துப் பாடிக்கொண்டிருந்தது. சீக்கியர்களுக்கு சிலை வழிபாடு இல்லை என்பது தெரிந்த விஷயமே.
சிறிது நேரம் அங்கே அமர்ந்து இருந்தோம். மணி ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவுதான் குருத்வாராவில் கொடுக்கிறார்களே, அங்கேயே சாப்பிட்டோம். ரொட்டி, சோறு, பருப்பு, காய் இதனுடன் ஒரு இனிப்பும். எதுவும் அளவு கிடையாது. குருத்வாரா உள்ளே வராதவர்களுக்கு கூட வெளியே பிஸ்கட், பூந்தி, டீ என்று கிடைக்கிறது. பெரிய பதவிகளில் இருக்கும் சீக்கியர்கள் கூட எச்சில் தட்டுக்களை கழுவும் பணியைச் செய்கிறார்கள். நாம் சாப்பிட்ட தட்டை வாங்கி கழுவுவதும் புண்ணியம் என்று நினைக்கிறார்கள் போல!
அங்கிருந்து கிளம்பி சாந்தி ஸ்தூபா சென்றோம். கிட்டத்தட்ட 12000 அடி உயரத்தில் இருக்கும் இந்த அமைதி கோவில் (Peace Pagoda) 1991இல் ஜப்பானிய நிதி உதவியுடன், லடாக்கி பௌத்தர்களால் கட்டப்பட்டது. மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் அரசும் இதற்கு உதவி இருக்கிறார்கள். உயரத்தில் அமைந்துள்ள ஸ்தூபிக்கு செல்வதற்கு சரியான சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பார்த்தால் லே நகரம் மொத்தமும் அதன் மலைகளின் பின்ணணியில் தெரிகிறது.
![]() |
| View From Shanti Stupa |
லடாக் - பிரதேசத்தின் தனித்துவம் என்னவென்றால் அதன் உயரம் அதிகம் என்ற படியால் நெடுந்தொலைவிற்கு நம்மால் பார்க்க முடியும். வானம் பக்கத்தில் இருப்பது போல் தோன்றும். நிறைய போட்டோக்களில் வானம் ஒரு background ஆக இருப்பதை பார்க்கலாம்.
![]() |
| Leh Palace |
அதன் பின் லே நகரத்தில் உள்ள அரண்மனை சென்றோம். 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை, திபெத்திய கட்டடக் கலையின் உன்னதம். 9 மாடி கொண்டது இந்த அரண்மனை. திடமான பாறைகள் மேல் செங்கல், மரம் இவற்றால் கட்டப்பட்டது. தரைத்தளத்தில் சுவர்கள் மட்டும் 2 முதல் 3 மீட்டர் தடிமன் கொண்டது என்பதால் 9 மாடிகளையும் தாங்கி காலத்தைக் கடந்து நிற்கிறது. ஆனால் 5- 7 வது மாடிகளில் இருந்த ஓவியங்கள் மங்கிப் போய்விட்டன அல்லது அழிந்துவிட்டன.
![]() |
| Leh View from Palace |
அரண்மனையின் மேல் தளங்களில் இருந்து பார்த்தால் லே நகரம் முழுவதும் அதன் பின்னணியில் உள்ள நீல நிற மலைத்தொடர்களுடன் தெரிகிறது.
![]() |
| Leh Monastry on top of the Hill |
கீழே அரண்மனை வாசலுக்குப் பக்கத்திலேயே மேலே செல்லும் பாதை ஒன்று நம்மை புத்த மடாலயத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆர்வக்கோளாறான சில இளம் ரத்தங்கள் மட்டும் அதில் ஏறுகின்றன.
ஒவ்வோர் இடத்திலும் ஏறி இறங்கி மிகுந்த களைப்பாக இருந்தது. அன்றைய இடங்கள் அவ்வளவுதான்.
![]() |
| Leh Marker Road |
எங்களை லே மார்க்கட் வீதியில் இறக்கி விட்டார்கள். நான் ஒரு தெர்மல் பேன்ட்டும், தலைக்குல்லாய் ஒன்றும் வாங்கிக்கொண்டேன். வாங்காமல் போய் இருந்தால் சிரமப்பட்டிருப்பேன். 8 மணி வரை அங்கு சுற்றிவிட்டு அறைக்குத் திரும்பினோம்.
நாளை அறையைக் காலி செய்துவிட்டு நுப்ரா சமவெளிக்கு கிளம்ப வேண்டும்.
- தொடர்ந்து பார்க்கலாம்












.jpg)





Comments
Post a Comment