கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை






    நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி இமய மலைக்கு செல்லும் பழக்கமுடையவர் . முன்பெல்லாம் இவர் ஒரு ஸ்டண்ட் -க்குக்காக செய்கிறார்  என்றே நினைத்திருந்தேன். ஆனால், முதல் முறை இமயத்தைப் பார்த்தபின்,  என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். இன்று வரை இமயம் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.  அப்பெரிய இயற்கையின் முன் ஆணவம் அழிந்து நான் சிறு துளியாய் உணர்கிறேன். 



    இந்த முறை இப்பயணம் பெரிதும் திட்டமிடப் படாதது.  அலுவலகத்தில் இரண்டு ப்ராஜெக்ட்-களுக்கு இடையில் ஒரு சிறு இடைவெளி கிடைத்தது. மேலும், விடுமுறையும் இருக்கிறது என்பதால் ஒரு தனிப் பயணம். தேதிகள் சரியாகப் பொருந்தியதால்தான் நான் இந்த இடத்தை தேர்வு செய்தேன்.  அது தவிர உண்மையிலேயே அணினி பற்றி இந்த பயணத்தின் போதுதான் தெரிந்துகொண்டேன்.

        அருணாச்சலில் மூன்று மலை நகரங்கள் முக்கியமானவை . ஒன்று எல்லோருக்கும் தெரிந்த தவாங் (Tawang). இதுதான் சீனாவுடன் பிரச்சனையில் இருக்கும் பகுதி. இது வடமேற்கு அருணாச்சலில் உள்ளது. அடுத்து வடக்கு  மத்தியில் உள்ள மேச்சுக்கா (Mechuka).  அணினி என்பது அருணாச்சலின் கிழக்குக் கோடியில் உள்ள ஒரு சிறு ஊர் அல்லது கிராமம் (மொத்த மக்கட் தொகை 2000 பேர்!) 

        நான் சென்ற இந்த எட்டு நாள் பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள், Chalohappo என்னும் ஒரு பயண நிறுவனம். மிக genuine ஆக ஒருங்கிணைத்து இருந்தார்கள். மொத்தம் எங்கள் குழுவில் என்னையும் சேர்த்து ஏழு பேர்.

         பயணம் தொடங்குவதும், முடிவதும் கிழக்கு அஸ்ஸாமில் உள்ள திப்ருகார் (Dibrugarh) என்னும் நகரத்தில். அஸ்ஸாமில் உள்ள திக்பாய் (Digboi) எண்ணெய் வயல்கள் பற்றிப் படித்தது ஞாபகம் இருக்கிறதா?  அது திப்ருகார் நகரத்தில் இருந்து 80கிமீ தொலைவில் உள்ளது. 

        சென்னையில் இருந்து கொல்கத்தா வழியாக திப்ருகாருக்கு விமானம் ஏறினேன். அன்று இரவு அங்கு தங்கி அடுத்தநாள் மதியம் எங்கள் குழுவுடன் இணைந்து கொள்வதுதான் திட்டம். 

         பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்திருக்கும் திப்ருகார் ஒரு வளமான நகரம். ஆனால் அதே சமயம் அடிக்கடி கோரதாண்டவமாடும் பிரம்மபுத்திராவின் வெள்ளத்தாலும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு நகரமும் கூட.   வெப்ப மண்டலக் காடுகளுக்கேயான மா, வாழை, தேக்கு, வாகை போன்ற மரங்கள் அடர் பச்சை இலைகளுடன் காட்சியளிக்கின்றன . கேரளாவையோ , கொங்கனிக் கடற்கரை நகரத்தையோ பார்ப்பது போன்ற உணர்வு . 



        அஸ்ஸாம் பல்வேறு இனங்கள் சேர்ந்து வாழும் ஒரு மாநிலம் . அஸ்ஸாம் என்றவுடன் எல்லோரும் மஞ்சள் நிறத்தில், மூக்கு சிறியதாக  இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். திராவிடக் கருப்பில் , ஆனால் மங்கோலிய முகத்துடன் இருப்பவர்கள்,  கருப்பாக மூக்கு பெரிதாக இருக்கும் மக்கள் என்று பல்வேறு இன மக்களை திப்ருகாரில் பார்க்க முடிகிறது.


    மறுநாள் மதியம் 2 மணிக்குள் எங்கள் குழுவில் எல்லோரையும் சேர்த்துக்கொண்டு திப்ருகார்- இல் இருந்து  அருணாச்சலில் இருக்கும் ரோயிங் (Roing) என்னும் ஊருக்கு  கிளம்பினோம்.  

        Chalohoppo நிறுவனம் எங்கள் பயணத்தின் கேப்டனாக  நிக் (Nick Doley) -ஐ அனுப்பி இருந்தது. நிக்  ஒரு விபரமான இளைஞன், 29 வயது. அஸ்ஸாமில் உள்ள ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன். எந்த தலைப்பு கொடுத்தாலும் sensible ஆக பேசக்கூடிய ஒரு அரிதான பிறவி.  எங்களுக்காக கொடுக்கப்பட்ட Force Travelers வேன் ஓட்டுநராக ஆஷிக் என்று ஒரு திறமையான இளைஞன். 

        குழுவில் என்னைத் தவிர ராஜஸ்தானில் இருந்து ஒரு தம்பதியர், மணாலியில் இருந்து ஒரு தம்பதியர், பெங்களூரில் இருந்து இரு பெண்கள் என்று ஏழு பேர்.  எங்கள் குழுவில் எல்லோருமே தொடர்ந்து பயணிப்பவர்கள். அண்டார்டிகா அமேசான் காடுகள், மங்கோலியா  உட்பட எந்த இடத்தை சொன்னாலும் யாரவது நான் அங்கு போய் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட குழு அது.

 



செல்லும் வழியெங்கும் இரு புறமும் தேயிலைத் தோட்டங்கள் அல்லது நெல் வயல்கள். ஊட்டி போல மலைச் சரிவில் அல்லாமல் சம வெளியில் கூட தேயிலை தோட்டங்கள் உள்ளன. சாலை பெரும்பாலும் நேர் ரோடுதான். அஸ்ஸாம் தவிர வடகிழக்கில் எல்லாமே வளைத்து வளைந்து செல்லும் சாலைகள்தானாம்.





        இங்கெல்லாம் 4:30 மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கி 5 மணிக்கெல்லாம் இரவு வந்து விடுகிறது.   போகும் வழியில்தான் பிரம்மபுத்திராவின் துணை ஆறான லோஹித் குறுக்கிடுகிறது.  அதன் மேல் 9.15 கிமீ தூரத்திற்கு கட்டபப்ட்டுள்ள பாலம்தான் இந்தியாவின் மிகப் பெரிய சாலைப் பாலம். அங்கே நிறுத்தி சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். 



லோஹித்  சென்று சேர்வது பிரம்மபுத்திராவில். அஸ்ஸாமில் சில இடங்களில் 20 கிமீ வரை அகலமாக பிரம்மபுத்திரா செல்லுமாம்.



அடர் நீல நிற தொடுவானம், பெரிய ஆரவாரமில்லாமல் ஆனால் மிகுந்த வெள்ளப்பெருக்குடன் செல்லும் நதி.  இவ்வளவு அகலமான ஆற்றை நான் இப்போதுதான் பார்க்கிறேன். எப்போதாவது ஒரு முறை அமேசான் ஆற்றைக் காணும் வரை இந்த பிரம்மாண்டம் கண்ணில் நின்று கொண்டே இருக்கும்.


அன்று இரவு ரோயிங் நகரத்தில் தங்குவதற்கு ஏற்பாடு. இந்த சிறு நகரமும் சமவெளியில்தான் உள்ளது. மொத்த மக்கட் தொகை 11000 பேர்.  அதி மற்றும் மிஷ்மி என  இரண்டு பழங்குடி இன  மக்கள் இங்கே அதிகமாக வாழ்கின்றனர். 


தரமான இரவு உணவு.  வடகிழக்கில் நாங்கள் தங்கிய, சாப்பிட்ட எல்லா ஹோட்டல்களிலும் உணவை உடனுக்கு உடன் தயார் செய்து கொடுக்கிறார்கள். பன்றி இறைச்சி உண்பவர்கள் நம்பி சாப்பிடலாம் என்று எங்கள் குழு நண்பர்கள் சொன்னார்கள், சாப்பிட்டார்கள். ஆனால், நான் இந்த பயணம் முழுவதும் சைவ உணவு மட்டுமே உண்டேன் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். 



ரோயிங் -இல் காலை எழுந்து ஒரு சிறு நடை.  தெருமுனை  கேண்டீன் ஒன்றில் டீ.  அந்த டீ கடையில் "அதி" இனக்குழு மாணவர்கள்  யூனியன் ஒன்றின் காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. இனத்தின் அடிப்படையில் மாணவர் சங்கங்கள் இருந்தாலும் இந்த இரண்டு இனங்களுக்கிடையே சண்டை சச்சரவுகள் இல்லை என்று நிக் சொன்னான்.


 முதல் நாள் பெய்த மழையில் குளமாக இருந்த வாலிபால் மைதானத்திலும் அதிகாலையில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

    காலை உணவு முடித்த பின் அணினி நோக்கி  கிளம்ப வேண்டும்.மழை நன்றாகப் பெய்துகொண்டிருந்தது. என்ன ஒரு அழகு என்றால் எங்கள் பயணத்தில் மழை இல்லாத நாளே இல்லை. ஆனால் எங்குமே எந்த ஒரு பார்க்கவேண்டிய இடத்தைத் தவற  விடவும் இல்லை.

        இன்று சம வெளியில் இருந்து மலை ஏற வேண்டும். ரோயிங் - இல் எங்களுடன் Chalohoppo  குழுவின் தோபோ  சேர்ந்து கொண்டான். 


     ரோயிங் நகரத்தில் இருந்து அணினி என்பது 223 கிமீ தான். ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் இருக்கும் ரோயிங் -இல் இருந்து 8500 அடி உயரத்தில் உள்ள மயோதியா கணவாய் (Miodia Pass ) வரை சென்று அடுத்த புறத்தில் மலை இறங்கவேண்டும். இறங்கியபின் "இத்தூன்"  ஆற்றைக் கடந்து மீண்டும் 6500 அடி உயரமுள்ள அணினி -க்கு மலை ஏற வேண்டும்.



        சராசரியாக மணிக்கு 25கிமீ வேகம்தான் சாத்தியப்படும். இத்தனைக்கும் மீண்டும் மலை ஏறும்போது இருக்கும் சாலை நன்றாகவே உள்ளது. Border Roads Oragainzation தான் இந்த சாலைகளை அமைத்து, பராமரிக்கவும் செய்கிறது. 

        நாங்கள் காலை 10 மணிக்கு கிளம்பி விட்டோம் என்றாலும், மழை பெய்துகொண்டே இருந்தது.  

      அருணாச்சல் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 80% காடுகளாகும். அவற்றில் அதிக நிலபரப்பு "மிக அடர்ந்த காடுகளின்" வகையில் வருகிறது. மலை முழுவதும், சாலைகளின் இருபுறமும் வளர்ந்து நிற்பது நெடிதுயர்ந்த மரங்கள். மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில்  நாம் பார்க்கும் மரங்களை விட பல மடங்கு உயர்ந்தவை.  

        பொதுவாக பைன் மரங்களோ  அல்லது யூகலிப்டஸ் மரங்களோ அதன் கீழ் மற்ற தாவரங்களை வளர விட மாட்டா.  ஆனால்  அருணாச்சலில்  நாங்கள் பார்த்தது வெப்ப மண்டல் காடுகள் (Tropical Forests ). அதனால், பெரிய மரத்தின் கீழ் வளரும் தாவரங்களும் மிக அதிகம்.  எங்கும் இடைவெளியைக் காண முடியாது. 

        மலையில் உயரமாக வளரும் காட்டு வாழை மரங்களை பார்த்தோம். ஆனால் விதைகள் பெரிதாக இருப்பதால் அதன் காயையோ , கனியையோ மக்கள் சாப்பிடுவதில்லையாம். அவற்றைப் பன்றிக்கு உணவாக கொடுக்கிறார்கள் என்று நிக் சொன்னான். ஆனால், அவர்களும் நம்மைப் போலவே வாழைத்தண்டு, வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

        மழையின் ஊடே, அடர்ந்த காட்டின் மலைகளில் பயணம்.  சாலை நன்றாக இருந்ததால் மயோதியா கணவாய் வரை வேகமாக வந்து விட்டோம். சிறிது தூரத்தில் ஓரிரு சாலையோர உணவகங்கள். அந்த மதிய நேரத்திலும் வெப்பநிலை 12 டிகிரி ஆக இருந்தது. குளிருக்கு நான் இன்னும் பழகி இருக்கவில்லை.

         இன்னும் 4 மணி நேரத்திற்கு எங்கும் நிறுத்த வழியில்லை என்பதால் அங்கேயே மதிய உணவை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். சிறிய உணவகம், சோறு, பருப்பு, முட்டை, கோழி,பன்றி உள்ளிட்ட எல்லாம் கிடைக்கிறது. அடுப்புக் கூடத்தில் உள்ள கணப்பு அடுப்பைச் சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டோம்.  வட  கிழக்கில்,முதன்மை உணவு அரிசிதான் . எங்குமே ரொட்டி பிரதானமாக பரிமாறப்படவில்லை. 



                 சோறு, பருப்பு மற்றும் ஒரு காய் சேர்த்து நூறு ரூபாய். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால் எல்லாம் சுடச் சுட கிடைக்கிறது. கணப்பு அடுப்பைச் சுற்றி கூட்டமாக இருந்தால் ஒரு இரும்பு வாளியில் தீக் கங்குகளைக் கொண்டு வந்து குளிர் காயக் கொடுக்கிறார். மற்றவர்கள் அதைச் சுற்றி உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.

    இதன் பின் மலையின் மறுபுறம் இறங்க வேண்டும்.  இறங்கிய பின் வரும் வழியில் "இத்தூண்" ஆற்றின் பாலத்தில் சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம் .  அருணாச்சல்லில் பருவ மழைக்காலம் என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரை. ஆனால் இந்த வருடம் சற்றே நீடித்த பருவமழை. ஆற்றில் ஓரளவு தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. 



மறுபடி மலையில் ஏறி, எங்கள் விடுதி சென்று சேர 8 மணி ஆகி விட்டது. 

        இன்று முழுவதும் பயணித்துக் கொண்டே இருந்தாலும் ஒன்றும் களைப்பாக இல்லை. சாப்பாடு முன்னரே ஆர்டர் செய்து விட்டதால் தயாராக இருந்தது. சாப்பிட்டு படுத்து விட்டோம்.  அதிகநேரம் தூங்கலாம், ஏனென்றால் நாளை அணினி உள்ளூர் மட்டும்தான்.


- தொடர்வோம் 



Comments

Popular posts from this blog

வியட்நாம் பயணம் - Ha Noi மற்றும் Nin Binh

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

வியட்நாம் பயணம் - Ha Long Bay