சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா
இந்த முறை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் லதா (இயற்பெயர் : கனக லதா) எழுதிய சிறுகதைகள் தொகுப்பு "சீனலட்சுமி" வாங்கினேன்.
நான் அங்கிருந்த 2000- 2008 கால கட்டத்தில், எனக்கு சிங்கப்பூர் எழுத்தாளர்கள் அறிமுகமாகி இருக்கவில்லை . அல்லது நானே தொடக்க கால வாசகன்தானே, அதனால் எனக்குத் தெரியவில்லை. லதா ஒரு குறிப்பிடும்படியான தமிழ் எழுத்தாளர் என்பது அவரது கதைகளைப் படித்த பின்தான் தெரிகிறது.
இந்தக் கதைகள் சிங்கப்பூரின் வெவ்வேறு காலங்களில் உள்ள சில களங்களைத் தொட்டுச் செல்கிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல் கதை சொல்லும் நேர்த்தி நம்மை உண்மைக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது. இங்கு சில கதைகளை மட்டுமே நான் பேசி இருக்கிறேன்.
முதல் கதையே உபின் தீவில் (புலாவ் உபின்) மின்சாரம் வருவதற்கு முன்பிருந்த காலத்து நிலையை சித்தரிக்கிறது. இன்று ஒருநாள் picnic போகும் இடமாக அறியப்படும் அத்தீவில் தமிழ் குடும்பங்கள் இருந்திருக்கின்றன (இன்னும் இருக்கின்றார்களா?) என்பதே வியப்பாக இருக்கிறது. இந்த கதையில் வரும் தாத்தாவை பல பேர் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம்.
"இளவெய்யில்" நவீன சிங்கப்பூரின் வளர்ந்து வரும் மத்திய வர்க்க குடும்பத்தின் பெண் சந்திக்கும் உளச்சிக்கல்களை முன்வைத்து எழுதப்பட்டது . குடும்பம், குழந்தை, வேலை என்று எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற சிக்கல்களுடன் "stress buster" ஆக வரும் அலைபேசி விளையாட்டுகள் வேறு புதிய பிரச்சினைகளாக உள்ளது .
"சிலந்தி" ஒரு முக்கியமான கதை. முதலில் சிங்கப்பூர் ராணுவம் ஒரு போரில் ஈடுபட்டது என்பதே புதிய செய்தி எனக்கு. 1963- 65 களில் ஒன்றிணைந்த மலேசியா -வுக்கும் இந்தோனேஷியா-வுக்கும் நடந்த போரில் சிங்கப்பூர் ராணுவமும் பங்கெடுத்தது. தனிப்பட்ட வன்மம் எந்த அளவுக்கும் போகும் என்று சிலந்தி பேசுகிறது.
"சீன லட்சுமியின் வரிசை" - இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் ஜப்பானியர்களின் கொடுமையினால் சிங்கப்பூர் சீனக்குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அப்போது பல சீனக்குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் தமிழர்களால் தத்தெடுக்கப் பட்டனர். இப்போதும் சிங்கப்போரில் சீன முகத்தோடு சேலை கட்டி, பொட்டு வைத்து சுத்தமாகத் தமிழ் பேசும் பெண்களைக் காண முடியும். எனக்குத் தெரிந்தே ஒருவர் இருந்தார். மற்ற தமிழர்கள் மறந்து விட்ட மரபுகள் சடங்குகள் எல்லாவற்றையும் அவர் விடாமல் கடைபிடிப்பார், எல்லோருக்கும் சொல்லுவார்.
அப்படிப்பட்ட ஒரு பெண்தான் "சீனலட்சுமி". இந்தக்கதை அவர்களின் அடையாளச் சிக்கல்களைத் தொட்டுச் செல்கிறது. தமிழர்கள் அவர்களைச் சீனர்களாகப் பார்ப்பதும், சீனர்கள் அவர்களை இந்தியர்களாகப் பார்ப்பதும் , இந்தியாவில் ஆங்கிலோஇந்தியர்கள் இன்றும் எதிர் கொள்ளும் பிரச்சினை போன்றவை.
வரிசையில் நிற்பதில் மன நிறைவு காணும் வித்தியாசமான பாத்திரம் சீன லட்சுமி. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிறந்த அவர் முதன் முதலாக பொதுத் தேர்தலில் ஓட்டு போட வரிசையில் நிற்கிறார்.
சிங்கப்பூரில் பலர் நெடு நாட்களாக ஓட்டு போட்டதே இல்லை என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஒட்டு போடுவது கட்டாயமாக்கப்பட்ட நாட்டில் இது எப்படி சாத்தியம் என்றுதானே கேட்கிறீர்கள். பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் தொடங்கிய காலத்தில் இருந்தே போட்டி என்று ஒன்று இருந்ததே இல்லை!
"தேக்காவில் ஒரு பாலம் இருந்தது" - இந்திய தேசிய ராணுவம் பற்றிய ஒரு விமர்சனப்பார்வை ஆனால் நேர்மையான பார்வை. "சயாம் மரண ரயில்" -சண்முகமோ, ப.சிங்காரமோ சொல்லாத விஷயத்தை லதா சொல்கிறார். அவை என்.என்.பிள்ளை சொல்லும் INA பற்றிய எதிர்மறை உண்மைகள் போன்றவை (நன்றி: முன்சுவடுகள் - ஜெயமோகன்).
இந்திய தேசிய ராணுவத்தில் சேர வீடு வாசலைத் துறந்து விட்டு இளம் தமிழ்ப் பெண்கள் வருகிறார்கள். அவர்களுக்கு சமையலறையில் வேலை கொடுக்கப்படுகிறது. ஒரு நாள் அவர்கள் பரிமாறும் வேலைக்கு அனுப்பப் படுகிறார்கள். இவர்கள் பரிமாறுவதை மற்றவர்கள் விரும்பவில்லை, சிலர் சாப்பிடாமல் செல்கிறார்கள், சிலர் தாங்களே போட்டுக்கொண்டு சாப்பிடுகிறார்கள்.
இந்தத் தீண்டாமையுடன் உள்ளரசியலும் தலை விரித்தாடுகிறது. சாப்பாடு மிகக்குறைவாகக் கொடுக்கப்படுகிறது. மருத்துவப் பிரிவில் வேலை பார்த்தாலும், காயம் பட்டால் மருந்து போடுவதற்கு அப்பெண்களுக்கு அனுமதியில்லை.
கடும் மனஉளைச்சலை எதிர்கொள்ளும் பெண்கள் அங்கிருந்து என்ன செய்தார்கள் என்பதுதான் கதை.
பல தகவல்கள் நமக்குத் புதிதாக இருக்கின்றன. பல ஆங்கிலேய கால சிங்கப்பூர் தமிழர்களிடம் ஈ.வே.ரா.பெரியாரின் செல்வாக்கு தெரிகிறது.சிங்கப்பூரர்கள் அனைவரும் தமிழிலோ அல்லது மொழி பெயர்ப்பு இருந்தால் மொழி பெயர்ப்பிலோ வாசிக்க வேண்டிய சிறுகதைகள் இவை .
Comments
Post a Comment