அண்ணே, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் !
ஆறுமுகம் புதிதாக எங்கள் வீட்டில் ( ரூமில்) சேர்ந்திருந்தான். நான், தனா , கேங்கோ மூன்று பேரும் இரண்டாம் வருடம் பொறியியல் படித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு ஹாஸ்டல் இன்னும் கிடைக்கவில்லை. ஆறுமுகம் முதல் வருடம் சேர்ந்திருந்தான். கேங்கோவின் மாமாதான் ஆறுமுகத்தை ரூமில் சேர்க்க பரிந்துரைத்திருந்தார் . ஆனால் எங்கள் யாருக்கும் விருப்பமில்லை.எப்படியும் அவன் வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து தனியே போய் விடுவான் என்று நாங்கள் நினைக்க, அவனோ அண்ணன் அண்ணன் என்று எங்கள் மேல் பாசமாக இருந்தான். அவனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. மேற்கத்திய பாணி கழிப்பறையை முதல் முதலாகப் பார்க்கிறான். (நாங்கள் எல்லாம் ஆங்கிலப் படங்களில் பார்த்திருந்தோம்!) "அண்ணே இதில எப்படி ஏறி உக்கார்றது?" கேங்கோ அவனுக்கு ஒரு டெமோ செய்து காட்ட வேண்டியிருந்தது. சிரிக்காமல் கிண்டல் செய்வதில் தனாவை மிஞ்ச ஆள் இல்லை.அவன் இப்போது, அவனுடைய form -க்கு வந்து விட்டிருந்தான். "அண்ணே இது என்ன Fair & Lovely ? - ன்னு போட்டிருக்கு " " அதுவா அது தலை முடிக்குப் போடறது ?" "அப்படியான்னே?" ...