பயணங்கள் தொடர்கின்றன - 3 : தஞ்சை
இரண்டு நாட்கள் தஞ்சை மாவட்ட பயணம் . ஆ.. ஊ என்று தஞ்சை பெரியகோவிலைப் பற்றி பீலா விடும் யுடியூப் வீடியோக்கள் என்னை எப்போதும் ஈர்த்ததில்லை. சமஸ் எழுதிய 'சாப்பாட்டு புராணம்' புத்தகம்தான் எனக்கு இந்த பயண ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஒரு Culinary Tour போவதற்காகவே பலமுறை திட்டமிட்டும் கூட போக முடியாமல் தடை பட்டிருந்த இடம் இது. ஆதலால் இந்த முறையும், நம்பிக்கை இல்லாமல்தான் பயணச்சீட்டை ரயிலில் முன் பதிவு செய்திருந்தேன்.
பொதுவாக நாங்கள் எங்கள் பயணத் திட்டங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தையும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவோம். ஆனால் இந்த முறை 2 நாட்கள் முன்பு வரை ஹோட்டல் முன் பதிவு செய்யவில்லை. , போகும் இடம், நேரம் எதுவென்று எல்லாம் முடிவு செய்யவே இல்லை. எல்லாமே கடைசி நேர முடிவுகள்தான். ஆனாலும் இந்தப் பயணம் மனம் நிறைவாக இருந்தது.
ஒரு முக்கியமான விஷயம், தஞ்சை மாவட்ட கோவில்களைப் பார்க்க வேண்டும் என்றால், தங்குவதற்கு சரியான இடம் கும்பகோணம்தான். பல கோவில்கள் 30-40 கிமீ சுற்றளவுக்குள் வந்துவிடும்.
நாங்கள் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை ஐந்தரை மணிக்கே கும்பகோணம் வந்து விட்டோம். கும்பகோணத்திலேயே இரண்டு நாட்களுக்கு டாக்ஸி அமர்த்தி இருந்தோம்.
டிரைவர் விஸ்வா, காலையில் காபி குடிப்பதற்காக 'வெங்கட் ரமணாவில்' நிறுத்தினார். கும்பகோணத்தில் பெரிய ஹோட்டல்களில் எல்லாம் பசும்பால் காப்பிதான் போல... நன்றாக இருந்தது என்று சொல்லலாம் அவ்வளவுதான். மற்றபடி, மதுரை வடக்கு ஆவணி மூல வீதி 'மீனாக்ஷி' பசும் பால் காப்பியின் சுவையைக் கொண்டு வர கும்பகோணம் இன்னும் ரொம்ப தூரம் போகணும்.
கும்பகோணத்தில் ஹோட்டல் முன் பதிவு செய்யும்போது .agoda.com இல் Hotel INDeco Swamimalai இல் ஒரு offer கிடைத்தது;5 பேர் தங்குவதற்கு 2 நாட்களுக்கு 2 ரூம் மொத்தம் 7600 ரூபாய் மட்டும்தான். இதன் பழைய பெயர் "ஸ்டெர்லிங் - சுவாமிமலை" என்று சொன்னால் சிலருக்குத் தெரிந்து இருக்கலாம்.
இந்த ஹோட்டலே ஒரு சுற்றுலா இடம்தான். தென்னை, பலா, வாழை , பாக்கு உள்ளிட்ட மரங்களுக்கிடையில், இந்த ஹோட்டல் உள்ளது. பழைய பொருட்கள் பலவற்றைக்கொண்ட மியூசியம் உள்ளே இருக்கிறது. 4 பழைய கார்கள் காட்சிக்கு உள்ளன. பழைய பிளைமவுத் (1928 மாடல் ), ஒரு ஆஸ்டின் ( காரை ஸ்டார்ட் செய்ய காருக்கு முன்னால் ஒரு handle இருக்கும், பார்த்திருக்கீங்களா?), ஒரு மோரிஸ் மற்றும் கொஞ்சம் புதிய பிளைமவுத் (1950 மாடல்), இதனுடன் ஒரு கை ரிக்சாவும் காட்சிக்கு உள்ளது. வெளி நாட்டுக்காரர்கள், கழுத்தில் போட்ட மலையைக் கழற்றாமல் அதில் உட்கார்ந்தும், இழுப்பது போலவும் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.
![]() |
1928 மாடல் பிளைமவுத் |
![]() |
அந்த பெரிய ஹோட்டல் வளாகத்துக்குள்ளேயே , மான்கள், வான் கோழிகள், கோழிகள், வாத்துகள், மாடுகள் இவையெல்லாம் வளர்க்கப்படுகின்றன. மயில்கள் அவ்வப்போது வந்து போகின்றன.
அடையார் ஆல மரத்தின் கிளையில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு ஆல மரம் ஒன்றும் (நன்றாகவே) வளர்ந்து நிற்கிறது.
இது தவிர ஒரு நீச்சல் குளமும் உள்ளது. முதலில் நீச்சல் குளத்தைப் பார்த்துவிட்டு தண்ணீர் சுத்தமாக இல்லை என்று நினைத்தேன். 'Natural Effect' கிடைப்பதற்காக பச்சை நிற 'டைல்ஸ்' போட்டிருக்கிறார்கள் என்று மகிழ்நன் சொன்னான்.
நான் கோவில்கள் பற்றி தல புராணம் எழுதப் போவதில்லை.... அது என்னுடைய ஆர்வமும் இல்லை.. அதனால் சுருக்கமாக எழுதுகிறேன்.
இந்த முறை விக்கிபீடியா எல்லாம் பார்க்காமல் வெறும் போட்டோவில் பார்த்ததை மட்டும் வைத்து, நாங்கள் அறியாமலேயே , தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ப்ரகதீஸ்வரர் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய மூன்று கோயில்களை முடிவு செய்து இருந்தோம் . அங்கு போன பிறகுதான் அவைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை தெரிய வந்தது. இந்த மூன்றுமே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியமான இடங்களின் பட்டியலில் உள்ளது.
இக்கோவில்கள் 11 -12 ஆம் நூற்றாண்டில் முறையே முதலாம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் , இரண்டாம் ராஜராஜ சோழன் ஆகியோரால் கட்டப்பட்டது. மற்ற பழைய கோவில்களைப்போல இல்லாமல், இவரு மிகப்பெரிய திறந்த வெளியை கோவில்களுக்குள் கொண்டுள்ளன. செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில்களின் விமானத்துக்கு ( கோபுரத்திற்கு அல்ல) முக்கியத்துவம் கொடுத்து கல்லால் செய்துள்ளனர்.
(கோபுரம் என்பது கோவில் நுழைவாயில், விமானம் என்பது கோவில் கருவறையின் மேலே உள்ள 'tower')
![]() |
பொன் மாலைப் பொழுதில் தஞ்சை கோவில் |
பழைய இந்துக்கோவில்கள் அனைத்திலும், மிகப்பெரிய விமானத்தைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில்தான். பலரும் சொல்வது போல் இது ஒரு "Engineering Wonder" தான். அது என்னவென்று நீங்கள் இன்டர்நெட்டில் தேடினாலே கொட்டும். உதாரணத்திற்கு மட்டும் சில...
இந்தக்கோவில் கடினமான கிரானைட் கற்களால் கட்டப்பட்டது ... ஆனால் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த ஒரு கிரானைட் குவாரியும் கிடையாது.
13 அடுக்குகளால் ஆன விமானத்தின் உட்புறம் உள்ளீடற்று 'hollow' ஆக உள்ளது
ராஜா ராஜ சோழனின் சிறப்புகளில் ஒன்று, "Documentation" பற்றிய அவனுடைய அறிவுத்தெளிவு ; தன் காலத்திய நிகழ்வுகளைத் தானே கல்வெட்டுக்களாகப் பதிவு செய்திருப்பது!
இன்னொரு விஷயம், தஞ்சை கோவிலில் நீங்கள் பார்க்கும் எல்லாமே ராஜ ராஜ சோழன் கட்டியது இல்லை. உதாரணமாக நீங்கள் இப்போது பார்க்கும் நந்தி, மற்றும் கோவிலில் பக்கவாட்டில் உள்ள முருகன், அம்மன் கோவில்கள் எல்லாமே பிற்காலத்தில், நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை.
கங்கை கொண்ட சோழபுரம் பிரகாரமும், தாராசுரம் கோவிலின் வெளிப்புற கோபுரமும் இடிந்து போய் உள்ளன. படையெடுப்போ , இயற்கை சீற்றமோ காரணமாக இருக்கலாம்.
![]() |
கங்கைகொண்ட சோழபுரம் |
இம்மூன்று கோவில்களிலும், என்னைக் கவர்ந்தது தாராசுரம்தான். கும்பகோணத்தில் தவற விடக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்று (இன்னொன்று பின்னால் வருகிறது). முக்கியமாக ரதம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள அகர மண்டபம், நம் ஊரில் உள்ள கோவில்களில் இருந்து மிகவும் வேறுபட்டுத் தெரிகிறது. காலை அல்லது மாலை இளவெயில் நேரத்தில் , திறந்த வெளிப் பிரகாரம் சந்தோஷ் சிவனின் ஒளிப்படமாக ஒளிர்கிறது.
![]() |
தாராசுரம் கோவில் ரத வடிவ மண்டபம் |
கும்பகோணத்தில் தவற விடக்கூடாத அந்த இன்னோர் இடம் "மங்களாம்பிகை காபி அண்ட் டிபன் சென்டர்". அப்போதும் இப்போதும் எப்போதும் நான் "சரவண பவன்/ ஹாட் சிப்ஸ் / சங்கீதா " போன்ற உணவகங்களை நாடுவதே இல்லை. நீங்கள் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, வடக்கு தெருவில் உள்ள இந்த உணவகத்தில் சாப்பிடும்போது நான் சொல்ல வருவது என்னவென்று உங்களுக்குப் புரியும் . முக்கியமாக, மதிய உணவு சாப்பிடும்போது உங்கள் நாக்கு MSG (அஜினமோட்டோ) சேர்க்காத இந்த உணவை சுலபமாகக் கண்டு கொள்ளும்.
நாங்கள் சென்ற போது காலையில் ஞாயிற்றுக்கிழமை - ஸ்பெஷல் 'கொஸ்து' இருந்தது. சாம்பாருக்குப் பதிலாக இதைக் கொடுத்தார்கள்.இதை சாப்பிடுவதற்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்.வியாழக்கிழமை ஸ்பெஷல் 'கடப்பா' வாம். ஞாபகம் இருக்கட்டும்
நான் review - வில் வாசித்த அரிசி உப்புமா இருக்கிறதா என்று கேட்டேன். அது மாலையில் மட்டும்தானாம்.
இது தவிர, கும்பேஸ்வரர் கோவில் , சுவாமிமலை மற்றும் பட்டீஸ்வரம் கோவில்களிலும் அட்டெண்டன்ஸ் போட்டோம்.
சொல்ல மறந்துட்டேனே ... சுவாமி மலை போனால் மதிய சாப்பாட்டுக்கு மறக்காம மாமி மெஸ் போங்க, மங்களாம்பிகா டேஸ்டுக்கு பக்கத்தில உங்களைக் கொண்டுபோய்விடும்.
ஏமாற்றம் என்னவென்றால் சமஸ் எழுதிய சாப்பாட்டு புராணத்தில் கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸ்-இன் ' பூரி - பாஸந்தி ' பற்றி எழுதியிருப்பார். நாங்கள் போன போது பாஸந்தி தீர்ந்து விட்டது. எங்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் வந்த ஒரு கஸ்டமர், பாஸந்தியில்லை என்றதும் படு கடுப்புடன் கிளம்பிப் போனார்.
அடுத்த முறை கும்பகோணம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், இப்போது தவறவிட்ட கடப்பா, அரிசி உப்புமா, பூரி-பாஸந்தி எல்லாவற்றையும் பட்டியலில் முதலில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படிசெல்லும்போது கட்டாயம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(பயணங்கள் தொடரும்)
Comments
Post a Comment