லடாக் பயணம் - 1. லே (Leh)
ஆள் அரவமே இல்லாமல் உங்களுக்கே உங்களுக்கான மிக நீண்ட பெருவெளி, உங்கள் வெறுங்கண்ணால் எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பார்க்கலாம். ஒவ்வொரு 2கிமீ தொலைவுக்கும் மாறிக்கொண்டே இருக்கும் நிலவெளிகள், மலைகளின் நிறங்கள். வழியில் எப்போதோ எங்கோ ஒரு கிராமம், அதில் நான்கு வீடுகள், கொஞ்சம் புல்வெளி, அதனுடன் 100 ஆடுகள். நான்கைந்து ஏணியை சேர்த்துப்போட்டால் தொட்டுவிடலாம் போல வானம். சிந்துவும், சான்ஸ்காரும், நுப்ராவும், சோயாக்கும் நுரை பொங்க பாய்ந்தோடும் லடாக்கில் பெரும்பகுதி பாலை வானம். எங்கோ எப்போதோ தென்படும் சில புல் பூண்டுகள், மிக அரிதாக வயல்கள். மரங்கள் என்பதைப் பார்ப்பதே மிக மிக அரிது . ஆனால் இயற்கையின் அமைப்பில் மருதமும் முல்லையும் தான் அழகா என்ன? அமைதியான லடாக் கவின் கொஞ்சும் பாலைவனம்! லடாக் செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. சென்று வந்த பின் இப்போது நினைத்தாலும் கூட கனவு ப...