கவி (Gavi ) ஒரு தனிப்பயணம் - 2
![]() |
| Gavi Resrvoir View 2026 June |
Solo trip என்று நான் இந்தப் பயணத்தைக் குறிப்பிட்டாலும், பயணத்தில் பேசுவதற்கு ஆள் கிடைக்காமல் போய்விடவில்லை.
நான் பத்தனம்திட்டாவில் பேருந்து ஏறும்போது ஏற்கனவே முன் இருக்கையில் ஒரு 20 வயது இளைஞன் அமர்ந்திருந்தான். கோழிக்கோடு வடகரையைச் சேர்ந்த CA படிக்கும் மாணவன் அவன். கோழிக்கோடு இல் இருந்து தனியாக கிளம்பி மூணாறு போய் சுற்றிவிட்டு, அங்கிருந்து கொச்சி வந்து ஒரு நாள் செலவழித்து, அங்கிருந்து இரவு 1 மணிக்கு பத்தனம்திட்டா வந்திருக்கிறான். அங்கேயே பஸ் டெப்போவில் குமிளி செல்லும் பேருந்தைக் கண்டுபிடித்து அதில் ஏறி தூங்கி விட்டு, என்னுடன் பயணிக்கிறான். அடுத்து குமுளியில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் செல்வது அவன் திட்டம். என்னுடைய பயணங்களில் பல Solo Travellers ஐ பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு சிறிய வயதுக்காரரை பார்த்ததில்லை.
அவனும் நானும் சினிமா, படிப்பு, பயணங்கள், கொஞ்சம் போல கேரள-தமிழக அரசியல் என்று பேசிக்கொண்டிருந்தோம்.இப்போதெல்லாம் தளபதி விஜய் பற்றிய கேள்விகள் இல்லாமல் உரையாடல்கள் இல்லை. இந்தியர்கள் என்று மட்டும் இல்லை, மலேசியர்கள் , பங்களாதேசிகள் எல்லோருக்கும் விஜயைத் தெரிந்திருக்கிறது! அட... இவர்தானய்யா உலக நாயகன்..!
![]() |
| Gavi Resrvoir View 2022 May |
நான் கவி KFDC stay-இல் இறங்கும்போது மழை கொட்டிக்கொண்டு இருந்தது. நனைந்து கொண்டே வந்து Check -in செய்தேன். இப்போது அறைகளை எல்லாம் புதுப்பித்து இருக்கிறார்கள்.சென்ற முறை இருந்ததை விட நன்றாக, சுத்தமாக இருந்தது.
அன்று முழுதும் மழை பெரும் சப்தத்துடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. ஞானசேகர் என்பவரை எனக்கு வழிகாட்டியாக நியமித்திருந்தார்கள். சீக்கிரமே வந்து விட்டதால் ஞானசேகர் என்னை டைனிங் ஹால் அழைத்துச் சென்று காபி எடுத்துக் கொடுத்தார்.
BSNL சிம் மட்டுமே கவியில் வேலை செய்யும். என்னிடம் இருப்பது வோடபோன். ஞானசேகர் போனில் ஒரு முறை வீட்டிற்கு அழைத்தேன். ஞானசேகர் அவரிடம் ஒரு spare சிம் கார்டு இருக்கிறது, வேண்டுமா என்றார். நான் உறுதியாக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஒரு 24 மணி நேரமாவது செல் போன்-ஐ நோண்டாமல் இருக்கலாமே!
![]() |
| காய்த்துக் கனிந்த அத்தி மரம் |
Trekking, Safari and Boating ஆகிய மூன்று விஷயங்கள் இந்த Package -இல் உள்ளது. ஞானசேகர் என்னை ஓய்வெடுத்துவிட்டு வரச்சொன்னார். மதிய உணவுக்குப்பின் Boating கூட்டிப்போவதாக சொன்னார்.
மதிய உணவு சைவம் மட்டுமே ...மட்டை அரிசி சோறு, வெள்ளை சோறு, சாம்பார், ரசம், மோர் குழம்பு, மூன்று நான்கு தொடு கறிகள்,அப்பளம், இனிப்பு என்று மிகச் சிறப்பாக இருந்தது... என்றாலும் சென்ற முறை ரசித்து சாப்பிட்ட அவியல் இந்தமுறை இல்லை. ஆனால் சாம்பாரில் வெண்டை, முருங்கை, கத்திரி, கோவை, உருளை,பீன்ஸ் மற்றும் பல காய்களும் இருந்தன!
![]() |
| Boating - மேகங்கள் இல்லாதபோது |
மழை கொட்டிக்கொண்டே இருந்தாலும், மழைகோட் அணிந்துகொண்டு கவி அணையில் boating கிளம்பினோம். boating என்னய்யா boating, கொடைக்கானல், ஊட்டி-ல கூட இருக்குதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு surprise இருக்கிறது.
ஞானசேகர் துடுப்பு போட்டுக்கொண்டு பேசிக்கொண்டே வந்தார். அவர் கவி கிராமத்தில் இருந்து வேலைக்கு வருகிறார். கவியில் இருக்கும் மக்களில் பெரும்பாலனோர் தமிழர்கள். இவர்களின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆங்கிலேயர் காலத்தில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். சிறிமாவோ - சாஸ்திரி (1964) உடன்பாட்டின்படி மறு குடியமர்வு செய்யப்பட்டவர்கள். கவியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இவர்கள் அழைத்துவரப்பட்டு இந்த settlement-ஐ உருவாக்கி இருக்கிறார்கள்.
கவி கிராமத்தில் ஒரு முத்துமாரி அம்மன் கோவிலும் உள்ளது. அடுத்த தலைமுறை இளைஞர்கள் பலர் ஞானசேகர் போன்று கேரளாவின் வனத்துறை வேலையில் இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரும் இந்தியர்கள், இலங்கைத் தமிழர்கள் அல்லர்; அகதிகளும் அல்லர். இரண்டு பிரபலங்களை உதாரணமாக குறிப்பிடலாம்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முன்னோர் அப்படி இலங்கை சென்றவர்கள்தான். அவரின் தந்தை ஆண்டிமுத்து 1961 இல் இந்தியா திரும்பி விட்டார்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் தாத்தாவும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யச் சென்றவர்தான் . முரளிதரன் இலங்கை குடியுரிமை பெற்று விட்டாலும் அவர் தந்தை இந்தியா திரும்பிவிட்டார்.
நான் 2018 இல் இலங்கையின் நுவரேலிய சென்றபோது, ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை சென்று இந்தியா திரும்பாத நம் மக்கள் இன்றும் அல்லல் படுகிறார்கள் என்று மட்டும் புரிந்தது. ஆண்கள் ஒருநாள் வேலைக்கு சென்றால் இந்திய ரூபாயில் 400 கிடைக்கும் என்றார்கள். அதில் கணிசமானது மதுக்கடைகளிலும் செலவழிக்கப்படுகிறது.
![]() |
| View From Kullar Dam |
ஞானசேகர் என்னை படகில் வெகு தூரம் கூட்டிச் சென்றார், நாங்கள் கவி அணையைக் கடந்து, குறுகிய கால்வாய் வழியாக குள்ளார் அணை வரை சென்றோம். அவர் என்னை இன்னும் அதிக தூரம் அழைத்துச் செல்வதாக சொன்னார். அவர் துடுப்பிடுவது எனக்கு வலித்தது, வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் (மறுபாதி உண்மை என்னவென்றால் யாருமே இல்லாத இடத்துக்குப் போவது கொஞ்சம் பயமாகவும் இருந்ததுதான்!)
![]() |
| முயலின் அளவில் இருக்கும் மலபார் அணில் - பழைய போட்டோ |
யானை தண்ணீர் குடிக்க இறங்கும் இடத்தில், மண் வலுவிழந்து 5 மீட்டர் தூரம் நிலம் குறைந்து விட்டது என்று ஒரு இடத்தை ஞானசேகரன் காட்டினார்.
மரத்தின் மேல் நீலகிரி கருமந்திகளின் (Nilgiri Langur) குடும்பம் ஒன்று இருந்தது. மீன்கொத்தியை நிறையப் பார்க்க முடிந்தது என்றாலும், நான் பார்த்த ஒரு common kingfisher என் ஆட்காட்டி விரலை விட கொஞ்சம்தான் பெரியதாக இருந்தது.
![]() |
| மேகங்களுக்கு உள்ளே இருக்கிறேன் ... பின்னால் இருப்பது எதுவும் தெரியாது |
மேகங்கள் எங்களை மூடுவதும், கலைவதுமாக இருந்தது. 5 மீட்டர் தூரத்திற்கு அப்பால் எதுவும் தெரியவில்லை. என்னதான் மிக மெதுவான துடுப்புப் படகு என்றாலும் குறைவான visibility ஆபத்துதான்.
இந்த படகுப் பயணத்தின் surprise என்பது நமக்கே நமக்கான, விரும்பினால் குளிக்க வாய்ப்புள்ள ஒரு அருவிதான். அளவில் குற்றாலம் பழத்தோட்ட அருவி அல்லது புலி அருவி போல சிறியது, கடும் கோடையில்கூட தாகத்திற்காக டீ குடிக்கும் பழக்கமுள்ள என் போன்ற மதுரைக்காரனுக்கு, தண்ணீர் மேலே இருந்து கொட்டினாலே பேரானந்தம்.
![]() |
| அருவி - பழைய போட்டோ(2022) |
சென்ற முறை வந்தபோது அருவியில் கொஞ்சம் குறைவாகத்தான் தண்ணீர் இருந்தது . ஆனால் எங்களுக்கு அதுவே எதேஷ்டம். அப்போது நாங்கள் எல்லோரும் ஒருமணிநேரம் நீராராராடினோம்..... !!
![]() |
| அருவி - பழைய போட்டோ |
இம்முறை தண்ணீர் அருவியில் மட்டுமில்லாமல் வானத்தில் இருந்தும் கொட்டிக்கொண்டு இருந்தது. மேகங்கள் சூழ்ந்து விட்டதால் அருவி "ச்சோ" என்று கொட்டுகின்ற சப்தம் மட்டும் கேட்கிறது. படகில் இருந்து பார்த்தல் அருவி கண்ணுக்கு தெரியவில்லை.
ஏற்கனவே நான் பாதி நனைந்து விட்டேன். குளிக்கவா, வேண்டாமா என்று பல முறை யோசித்து கடைசியில் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
![]() |
| அருவி - 2026 ஜூன் மழையில் |
ஞானசேகர் நிறைய தமிழக அரசியல் பேசினார். (நியாயமாகப் பார்த்தால் அவர் கேரள அரசியல்தான் பேசவேண்டும்!). விஜய் ஆட்சிக்கு வந்தபின் எல்லாம் மாறிவிடும் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்.
அறைக்கு திரும்பி வந்து சிறு தூக்கம். 4 மணிக்கு மழை வெறித்து வானம் தெளிவாக இருந்ததால் ட்ரெக்கிங் போகலாம் என்று ஞானசேகர் வந்துவிட்டார். backpack இல் மழைக்கோட், தவிர எப்போதும் உப்பு வைத்திருந்தேன். அட்டை கடித்தால் தேவைப்படும் என்று. வழிகாட்டிகளும் அட்டையிடம் இருந்து தப்பிக்க ஒரு ஜோடி நீண்ட socks கொடுக்கிறார்கள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அட்டையும் என்னை கண்டுகொள்ளவில்லை.
![]() |
| Trekking Trail |
ட்ரெக்கிங் - இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும். இன்னொன்று இரண்டு மணி நேரம். உண்மையிலேயே இந்த ட்ரெக்கிங் சிறு தூரம்தான்... அதுதான் பாதுகாப்பானது. கொஞ்சம் ஏறினால் அங்கிருந்து சபரிமலை கோவில் தெரியும் (ரொம்ப தூரத்தில்தான்). போனமுறை வானம் தெளிவாக இருந்ததால் கொஞ்சம் ஊகிக்க முடிந்தது. இந்த முறை அவ்வளவு visibility இல்லை. தூரத்தில் சில பல காட்டெருமைகள் பார்த்தோம், பைனாகுலரில் இன்னும் தெளிவாக தெரிந்தது.
![]() |
| @Sabarimalai View Point |
ஆனால் highlight என்பது அந்த இடத்தின் ஏகாந்தம்தான்! நிமிர்ந்து நின்றால் தலையை முட்டும் மேகக் கூட்டங்கள். உயரத்தில் இருப்பதனால் நெடுந்தூரம் தெரியும் அடர்ந்த காடுகள் ஒரு புறம், விலங்குகள் மேயும் புல்வெளிகள் ஒருபுறம் என்று பாறையில் உட்கார்ந்து நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஞானசேகர் என்னை டிஸ்டர்ப் செய்யாமல் தனியே விட்டுவிட்டு யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தார்.
ட்ரெக்கிங் தொடர்ந்தது...சில இடங்களில் கொஞ்சம் பழைய யானை சாணங்கள் கிடந்தன. மழை இளம் சாரலாய் தூறிக்கொண்டே இருந்தது. ட்ரெக்கிங் முடிந்து நேரே டைனிங் ஹால் வந்து விட்டோம். சுடச்சுட உளுந்து வடையும் டீயும் கொடுத்தார்கள்.
அன்று அதற்குப் பிறகு வேறு activities எதுவும் இல்லை. அறைக்கு சென்று வெந்நீர் போட்டுக் குளித்தேன். ஓய்வெடுத்து விட்டு 8 மணிக்கு இரவு உணவு - சப்பாத்தி, காஷ்மீரி புலாவ் , டால், ஒரு அசைவ, ஒரு சைவ கறி வகைகள், சாலட், பழங்கள். சிறப்பு!
நீர்தேக்கத்தின் ஓரத்தில் உள்ள பெரிய கூடாரத்தில் Camp Fire தயாராக இருந்தது. இரவின் இருளில், குளிருடன் கூடிய மழைச்சாரலில் Camp Fire ரம்மியமாக இருந்தது. குழுவாக வந்தவர்கள் பாட்டு பாட தயாராகிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்தேன். களைப்பு மேலிட்டது, அறைக்கு வந்து தூங்கிவிட்டேன். காலை 6 மணிக்கெல்லாம் KFDC வேன் வந்துவிடும், மற்ற பயணிகளுடன் சஃபாரி கிளம்பவேண்டும்.
அடுத்த நாள் காலை ஆச்சர்யமாக எல்லோரும் 6 மணிக்கு வந்துவிட்டார்கள். காட்டுக்குள் முதல் நாள் நான் பேருந்தில் வந்த அதே சாலை வழியாக கூட்டிச்சென்றார்கள். லேசான தூறல்தான் இருந்தது என்றாலும், பெரிய விலங்குகள் எதுவும் கண்ணுக்குப் படவில்லை. சாம்பார் மான் கூட்டங்களை இரண்டு இடங்களில் பார்த்தோம்.
மீண்டும் திரும்பி வர எட்டரை மணி ஆகிவிட்டது. காலை உணவை (இட்லி, உப்புமா, பிரட், முட்டை, வாழைப்பழம், காபி ) முடித்துவிட்டு 9:30க்கு நான் check out செய்துவிட்டேன். 10 மணிக்கு குமுளி செல்லும் பேருந்து சரியாக வந்துவிட்டது.
நேற்று பத்தனம்திட்டாவில் இருந்து வந்த பேருந்தில் நான் மட்டும் இறங்கினேன் இல்லையா? ஆனால் இன்று வெள்ளிக்கிழமை 20-25 பேர் இறங்கினார்கள்!!
வல்லக்கடவு செக்போஸ்ட் வரும்போதே செல் போன் டவர் கிடைத்துவிட்டது. அப்படியானால் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது!
மிகுந்த மனநிறைவான பயணம்.12 மணிக்குள் குமுளி வந்து மதுரை செல்வதற்கு பேருந்தை பிடித்தேன்.
- நிறைவுற்றது









.jpg)










Comments
Post a Comment