பயணங்கள் தொடர்கின்றன -1 : அரிப்பா
இந்த முறை பள்ளியில் இரண்டு பருவங்கள்தான்.அதனால் நவம்பரில் மூன்று வாரம் விடுமுறை. நாங்கள் நவம்பர் 2ஆம்தேதி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரெஸ்ஸில் கிளம்பி கொல்லத்தில் இறங்கிக்கொண்டோம். நண்பர் ஒருவர் கொல்லத்தில் இருந்து கார் ஒன்றை ட்ராவல்ஸ் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். கொல்லத்தில் விஜய் 'அண்ணா'வுக்கு, அவரது ரசிகர்கள் 175 அடி உயரத்தில் கட் -அவுட் வைத்திருந்தார்கள்.
டிரைவர் சஜய் அதிகம் பேசவில்லை. ஆனால், அரசியலைப் பேச ஆரம்பித்தால் மலையாளிகள் பற்றிக்கொள்ளவார்கள் அல்லவா?
"இப்போ எப்படியிருக்கு, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?"
" Opinion polls போட்டுட்டாங்க சார், காங்கிரஸ் 16, LDF 4"
"என்னங்க விஜய்க்கு கட் -அவுட்எல்லாம் வச்சிருக்கீங்க?"
"ஆமா சார் , நாம வர்ற வழியிலே அந்த மைதானத்தில் இருந்துச்சே, நீங்க பார்த்தீங்களா ? "
"ஆமாமா, நாங்க பார்த்தோம் "
நான் விளையாட்டாகத்தான் கேட்டேன்.
"நீங்க விஜய் படம் பார்ப்பீங்களா ?"
அவர் பெருமையாகச் சொன்னார்
" சர்க்கார் படம் காலையில 4 மணிக்கு முதல் ஷோ போறேன் சார் "
ஓன்றரை மணி நேரப்பயணம்.அரிப்பா ஜோதிஸ்மதி பங்களா - விருந்தினர் விடுதி வந்தடைந்தோம். அது காட்டுச் சாலையில் இருந்து உள்ளடங்கி சற்று உயரத்தில் இருக்கிறது.
அந்த பங்களாவில் 7 பெரியவர்கள் தங்க வசதி உண்டு. ஒரு சமையல் காரரும்,ஒரு காவலாளரும் உதவிக்கு உண்டு.தங்குமிடம், சாப்பாடு,காட்டுக்குள் வழி காட்டுதல் அனைத்தும் சேர்த்து ஒரு ஆளுக்கு 2000 ரூபாய் கட்டணம்.. பங்களா தவிர நீங்கள் கூடாரத்தில் (tent) தங்கிக்கொள்ள வசதி உண்டு. இந்தக் கூடாரங்கள் பங்களாவில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. காரில் செல்ல முடியாது.
அன்றைய தேதியில் எங்களைத் தவிர வேறு யாரும் பங்களாவை முன் பதிவு செய்யவில்லை.
![]() |
ஜோதிஸ்மதி -பங்களா |
யானை பயம் உள்ளதால் பல இடங்களிலும் மின்வேலி அமைத்திருக்கிறார்கள். நாங்கள் போனபோது மின்சாரம் தடைபட்டது. தூரத்தில் யானை ஒன்று மின்கம்பத்தைத் தள்ளிவிட்டதால் KSEB வந்து சரிசெய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.
சமையல்காரர் தாமோதரன் பிள்ளை (சுருக்கமாக பிள்ளை) ஓய்வு பெற்ற பின்னும் ஒப்பந்தக்காரராக சமையலில் தொடர்கிறார். சுவையாகச் சமைக்கிறார். நீங்கள் காட்டுக்குள் செல்ல ஆர்வம் இல்லாவிட்டால் கூட இவரின் சமையலுக்காகவே ஒருநாள் அரிப்பாவில் தங்கி வரலாம். மதிய உணவில் நான்கு தொடுகறிகள் , சாம்பார், மோர்க்குழம்பு, ரசம் , தயிர் என்று ஜமாய்க்கலாம். அரிசி வெள்ளை அரிசி என்றாலும் பெரிய அரிசி. ஆனால் கூட்டு, பொரியல்களின் சுவையில் பெரிய அரிசி ஒரு குறையாகத் தோன்றாது.
மதிய உணவுக்குப்பின் சிறு தூக்கம். இன்பாதான் விழித்திருந்து, பிஸ்கட்டெல்லாம் கொடுத்து பங்களாவைச் சுற்றித் திரியும் ஒரு நாயைப் பழக்கியிருந்தாள். டோட்டோ என்று பெயரும் வைத்திருந்தாள் .
மாலை தேனீருக்குப் பின் கூடாரங்கள் இருக்கும் இடம் வரை காவலர் ஜெயராம் எங்களை அழைத்துப்போனார். அதற்கே,போக வர 2.5 கிலோமீட்டர் இருக்கும்.சாகசச் சுற்றுலா விரும்பிகள் இந்தக் கூடாரங்களில் வந்து தங்கலாம். 10 பேர் கொண்ட குழுவாக இருந்தால் மிகச் சிறப்பு. அங்கும் உதவிக்கு இரண்டு ஆட்கள் உண்டு.
![]() |
கூடாரங்கள் |
காணி பழங்குடிகளின் settlement அரிப்பாவில் இருக்கிறது. வழக்கமாக trekking செல்லும்போது வழிகாட்டியாக அவர்களில் இருந்து ஒருவர் வருவாராம் . எங்களுக்கு மலையாளம் தெரியாது என்பதால் ஜெயராம் எங்களுடன் வந்தார்.
ஜெயராம் அடிப்படையில் ஒரு மலையகத்தமிழர்.( மலையகத் தமிழர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்துச்செல்லப் பட்டவர்கள்) .இலங்கையின் நுவரேலியாவில் இருந்து 1980 இல் தன் 13 வயதில் பெற்றோருடன் இந்தியா வந்தவர். ஜெயராமின் தந்தை கேரளாவின் ஏலக்காய் தோட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வந்திருக்கிறார். அதன்பின் ஜெயராமும் கேரளாவின் வனத்துறையில் வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டார். தன் பெண்ணை B.Com படிக்க வைத்துத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.மருமகன் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார்.ஜெயராமின் தாத்தாவிலிருந்து நான்கு தலைமுறைகளைப் பார்த்தோமானால் கடந்த 40 வருடங்களில்தான் எவ்வளவு பெரிய நேர்மறையான மாற்றங்கள், முன்னேற்றங்கள் !
முதல் நாள் இரவு நல்ல மழை பெய்திருந்தது. அதுதான் அன்றைய காட்டுப்பயணத்திற்கு சவாலாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது.அன்றும் மழை பெய்தால் நாங்கள் எங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆனால் வெயில் இருந்தது.அதனால் காலை உணவு முடித்தபின், 8 மணிக்கு கிளம்பினோம். ஜெயராம் எங்களுக்கு இரண்டு தொலைநோக்கிகள் (binoculars) கொடுத்தார். கையில் நான்கு பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர், ஒரு பிளாஸ்டிக் பையில் உப்பு இவற்றுடன் அவரும் தயாரானார்.
(உப்பு எதற்காக என்றால் அட்டைகள் கடிக்கும்போது உப்பை அதன் மேல் தூவினால், சுருண்டு உதிர்ந்து விடும்)
டோட்டோவும் எங்களுடன் வந்தது. சாலைக்கு வந்தவுடன் அது திரும்பிப் போய்விடும் என்றுதான் நினைத்தோம். ஆனால் 3 மணிநேரம் முழுப்பயணத்திலும் அது எங்களுடன் கூடவே இருந்தது..
கொஞ்ச தூரத்திலேயே சாலையோரத்தில் சாரைப்பாம்பு ஒன்று ஓலைகளுக்கிடையே தலை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. டோட்டோதான் குரைத்துக்கொண்டு, பாம்பை நோக்கி ஓடியது. பாம்பு ஓலைகளுக்குள் மறைந்து கொண்டது.
சாலையிலிருந்து விலகி, காட்டுப்பாதையில் பயணம் தொடர்ந்தது. ஒரு இடத்தில் சிறிய ஓடையைக் கடக்க வேண்டும். அந்த ஈரமும் , முதல் நாள் மழையும் அட்டைகள் பெருக நல்ல சூழ்நிலை போல. ஒவ்வொருவர் காலிலும் ஐந்து முதல் பத்து அட்டைகள். அன்றுதான் "அட்டை போல ஒட்டிக்கொள்கிறான் , அட்டை போல ரத்தத்தை உறிஞ்சுகிறான்" என்ற எல்லா உவமைகளுக்கும் அர்த்தம் புரிந்தது.
அட்டைகளைத் துடைத்தெறிந்து விட்டு மலையேற்றப் பயணத்தைத் தொடங்கினோம். வழிகளில் பல இடங்களில் யானையின் சாணங்கள் கிடந்தன. அது ஒரு மாதம் பழையது என்று ஜெயராம் சொன்னார், எனக்கு நம்பிக்கைஇல்லை. மழை பெய்ததால், சாணத்தின் உண்மையான வயது தெரியவில்லை . அவர் நாங்கள் பயப்படக்கூடாது என்று சொல்கிறார் என்று புரிந்தது.
காட்டில் யானை இருக்கிறது என்றால் சில விஷயங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். சத்தங்கள் கூடாது.கேமரா flash போடவே கூடாது. குட்டியுடன் யானை வந்தால் தூரமாக (300 அடிக்கு அப்பால்) நின்று கொள்ள வேண்டும். காட்டுக்குள் செல்லும் போது வாசனை திரவியங்கள் (Body Spray , Scent ) எதையும் உபயோகிக்கக் கூடாது. இதுவெல்லாம் ஜெயராம் சொன்னதுதான்.
பெரிய சிலந்தி ஒன்று கிட்டத்தட்ட 30 அடி X 30 அடிநூல் பிடித்து ஐங்கோண வடிவில் கூடு கட்டியிருந்தது. பல பெரிய பூச்சிகள் அதில் சிக்கியிருந்தன.
![]() |
காட்டுக்குள்... டோட்டோவும் |
கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேர நடை . உடலெல்லாம் வியர்வை. இன்பாதான் சுலபமாக நடந்தாள். அடுத்த மலைக்குச் செல்ல ஆசை இருந்தது. அங்கிருந்து பார்க்க ஒரு view point ஒன்றும் உள்ளது.
ஆனால் மொத்தப் பயணத்திலும் குறைந்தது 150 அட்டைகளை (மிகை அல்ல) எங்கள் ஐந்துபேர் காலிலும் எதிர்கொண்டிருப்போம். நாங்களும் ஒரு டப்பாவில் உப்பு எடுத்துச் சென்றிருந்தோம். அதுவும் தீர்ந்து கொண்டிருந்தது.திரும்பி விட முடிவு செய்தோம்.
திரும்பி வரும் வழியில் விதம் விதமான வண்ணத்துப் பூச்சிகள். மகிழ்நன்தான் இரட்டைவால் குருவி, Orange Minivet ,Bee Eater எல்லாம் பார்த்து எங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தான். இன்னும் அதிகாலையில் சென்றால் நிறையப் பறவைகளைப் பார்த்திருக்கலாம்.
முதல் நாள் மழை இல்லாதிருந்தால் 'கானுலா' இன்னும் நல்ல அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் இதுவே நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக அமைந்தது.
மதிய உணவுக்குப் பின் பிள்ளையிடமும், ஜெயராமிடமும் விடைபெற்று காரில் கிளம்பினோம். டோட்டோ எங்கள் காருக்குப்பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தது.
Comments
Post a Comment