காஷ்மீர்ப் பயணம்- 5 : பஹல்கம் (Pahalgam) - ஸ்ரீநகர் - குல்மார்க் (Gulmarg)






        மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே யாசிர் வந்துவிட்டார்.   காலை உணவாக ஆலு பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, Oswal Cottage -இல் இருந்து கிளம்பினோம்.

        இந்த இரண்டு நாட்களில் லிதர் ஆற்றில் தண்ணீர்ப் பெருக்கு அதிகரித்திருந்தது. மேலும் கீழே  செல்லச் செல்ல பல கிளை ஆறுகளும், அருவிகளும் சேர்ந்து  தண்ணீர் பெருகி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் Yenner என்ற இடத்தில் நிறுத்தி சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். 




        இன்று ஸ்ரீநகர் சென்று சில இடங்கள் பார்ப்பதாகத் திட்டம். ஆனால் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழை பெய்தால் மொஹல் தோட்டங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு.

            நான் ஹஸ்ரத்பால் தர்ஹாவுக்கு செல்லலாம் என்று சொன்னேன். அது 1990-களில் செய்தித்தாள்களில் அடிக்கடி இடம்பெறும் பெயர்.  

        1993 அக்டோபர் மாதத்தில் ஹஸ்ரத்பால் தர்ஹா-வில் ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.  அதனால் இந்திய ராணுவம் தர்ஹாவை முற்றுகையிட்டது. இதைத்தொடர்ந்து  சமவெளி எங்கும் பதட்டம்.  இந்த முற்றுகையின் எட்டாம் நாள் நடந்ததுதான் கிட்டத்தட்ட 45 பேர் கொல்லப்பட்ட  1993 பிஜ்பெஹெரா படுகொலைகள்   காண்க: Bijbehara massacre (விக்கிபீடியா). 

        எங்கள் கார் பிஜ்பெஹெரா (Bijbehara) வழியாகத்தான்  வந்தது.  அதிகமான மத்திய ரிசெர்வ் போலீஸ் அங்கே இருந்தது.  

        1980, 1990-களில் காஷ்மீர் சமவெளி முழுதுமே பதட்டம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது.  அப்போதெல்லாம் ஆகாசவானியின் செய்திகளில் காஷ்மீர் இல்லாமல் இருக்கவே இருக்காது. 

    நிலைமை என்னவென்று புரிய இன்னொன்று சொன்னால் சரியாக இருக்கும். 

1989 வரை ஸ்ரீநகரில் 9 சினிமா தியேட்டர்கள் இருந்திருக்கின்றன. காஷ்மீர் போராளிக் குழுக்கள் மதுக்கடைகளுக்கும்,சினிமாவுக்கும்  தடை விதித்ததால் அவை அனைத்தும் மூடப்பட்டன. அதற்குப்பின் 2000 ஆண்டு வாக்கில் 3 திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.  காஷ்மீரில் ஒரு இளைய தலைமுறை தியேட்டருக்குச்  சென்று சினிமா பார்த்ததே இல்லை. 

இப்போதுதான்  INOX Multiplex - ஒன்று சென்ற ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. வெளியில் CRPF காவலுக்கு நிற்கிறது.  

        ஸ்ரீநகரில் கூட சில  மதுக்கடைகளே உள்ளன. பஹல்கமிலும், குல்மார்க்கிலும் கடைகள் இல்லை.பார் இருக்கும் ஹோட்டல் இருந்தால் அதற்கும்  CRPF காவல் தேவைப்படுகிறது. பஹல்கமிலும், குல்மார்க்கிலும் கடைகள் இல்லை. 

        திரைப்படம் போன்ற கலை வளர்ச்சியும், மதுக்கடைகளும் (தனி மனித மற்றும் பொருளாதார) வளர்ச்சியின் குறியீடுகள் என்பது என் கருத்து.


     மேலே சொன்ன தர்ஹா ஆக்கிரமிப்பு, பிஜ்பெஹெரா துப்பாக்கிச்சூடு தவிர 1989-இல் உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முஹம்மது சையத் -இன் மகள் டாக்டர் ருபையா கடத்தப்பட்டது, 1990- களில் காஷ்மீர் பண்டிட்டுகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டது இவை எல்லாம் அப்போது பல நாள் தலைப்புச் செய்திகள்.



        நான்தான் ஆர்வத்துடன் ஹஸ்ரத்பால் தர்ஹா செல்லலாம் என்று சொன்னேன். இங்குதான் முஹம்மது நபி அவர்களின் முடி இன்றும் இருப்பதாக நம்பப்படுகிறது. வந்து பார்த்தால்  அது பற்றிய ஒரு அறிவிப்புப் பலகை அல்லது வரலாற்றுக் குறிப்பு என எதுவுமே ஆங்கிலத்தில் இல்லை. அது சற்று ஏமாற்றமே!

ஆனால் ஹஸ்ரத்பால்- இல் இருந்து பார்க்கும் போது மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் மலையைப் பின்னணியாகக் கொண்டு ஜொலிக்கும் டால் ஏரி வேறு ஒரு கோணத்தில் அழகு. 


        


        தர்ஹாவின் வலது புறம் படித்துறை போன்ற அமைப்பில் இறங்கினால் டால் ஏரி. மழை தூறிக்கொண்டே இருந்தது. இளைஞர்கள் சிலர் அங்கு அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தார்கள். 

        ஒரு இளைஞர் கை,கால் முகம் கழுவ வந்தார். தொழுவதற்குச் செல்பவராக இருக்க வேண்டும். கையில் இருக்கும் புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டு கைகளைக் கழுவி விட்டு வந்தார். புத்தகம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் (ஆங்கிலத்தில்தான் ஐயா!). எங்களுக்கு வியப்பு! அவர் UPSC தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறாராம் . அவருக்கு இந்த நூலைப் பரிந்துரைத்திருக்கிறார்கள். சிறப்பு!!


        அரைமணி நேரம்தான் அங்கு இருந்திருப்போம். நாங்கள்  யாசிரை எங்கள் ஹோட்டலில் கொண்டு விடச் சொல்லி விட்டோம். நாங்கள் முன் பதிவு செய்திருந்த ஹோட்டல் Jaffson Accommodates. அது  நகரின் மையத்தில் மந்திர் பாக் என்னும் நெருக்கடியான குடியிருப்புகளின் மத்தியில் இருந்தது. அங்கும் CRPF -இன் வண்டியும் காவலர்களும் எந்நேரமும் இருக்கிறார்கள்.


        சற்று இளைப்பாறிவிட்டு மாலை ஆறரை மணியளவில் இரவு உணவுக்காக கிளம்பினோம். ஹோட்டல் வரவேற்பாளர் ஒரு உணவகத்தை பரிந்துரைத்தார். 

        நடக்கும் தூரத்தில்தான்  நெரிசலான ஒரு பெரிய கடைவீதி. நாங்கள் கடை வீதியை வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றோம். என்னுடைய விருப்பமான ஆட்டிறைச்சியும், மாட்டிறைச்சியும் அந்த மாலையிலும் கூட சிறப்பாக விற்றுக் கொண்டிருந்ததன . காஷ்மீரிகள் beef ஐ விட mutton -ஐ விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று யாசிர் சொன்னார். ஆனால் ஆட்டிறைச்சி கிலோ 650 ரூபாய்தானாம், மாட்டிறைச்சி கிலோ 450 ரூபாய்!

        பொருட்களின் விலையை விட சேவையின் விலை அதிகம் என்றால் அந்த ஊரில் பணப்புழக்கம் அதிகம் என்பது என் புரிதல்.  எடுத்துக்காட்டாக, ஸ்ரீநகரில்  முடி வெட்டிக்கொள்ள ஒரு நடுத்தரமான சலூனில் 50 ரூபாய்தான். ஒப்பு நோக்க சென்னையில் இது 150 ரூபாய், மதுரையில் 120 ரூபாய். முடி வெட்டும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பீஹாரில் இருந்துதான் வருகிறார்களாம்.(இதெல்லாம் யாசிரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது). 

            கவனிக்கத்தக்க ஒரு விஷயம், ஸ்ரீநகரில் மட்டுமல்ல , நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் ஆங்கிலம் மட்டுமே உள்ளது.  இந்தி இல்லவே இல்லை. அது கூட சரிதான். ஆனால் மிக அரிதாகத்தான்  உருது அல்லது காஷ்மீரியில் பெயர்ப் பலகைகள் உள்ளன .

        ஸ்ரீநகரில் ஊரின் மையத்தில் கடை வைத்திருக்கும் ஒரு பழ வியாபாரிக்கு எண்கள் ஆங்கிலத்தில் தெரியவில்லை .  நம்மிடம் பழங்கள் விற்பதற்கு அவருக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவைப் படுகிறார்.  உருது அல்லது காஷ்மீரி மட்டுமே தெரிந்த வயதானவர்கள் எப்படி ஆங்கிலத்தில் பெயர்பலகைகளைப் படித்து புரிந்து கொள்வார்களோ? என்ன லாஜிக் என்று தெரியவில்லை.

        கடை வீதியையும் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் நாங்கள் தேடிச்சென்ற உணவகம், மொஹல் தர்பார். நாங்கள் ஏழு பேரும் உள்ளே சென்ற வேகத்தில் திரும்பி வந்து விட்டோம், மெனு கார்டில் விலைப் பட்டியலைப் பார்த்து!

        பக்கத்திலேயே Self Service -இல் சில chicken Roll- களை உள்ளே தள்ளிவிட்டு கிளம்பி விட்டோம். மாலை ஏழரை மணிக்கெல்லாம் உணவகம் தவிர எல்லா கடைகளையும் மூடி விடுகிறார்கள். சென்னையையும், மதுரையையும் பார்த்துப் பழகிய நமக்கு இது கொஞ்சம் பயமாக இருந்தது. நல்ல வேளை ஆட்டோ கிடைத்தது, ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

        நாங்கள் தங்கியிருந்த Jaffson Accommodates ஹோட்டல்காரர் நேர்மைக் குறைவானவராக இருந்தார். எங்கள் ஹோட்டலில் ஒரு ஹைதராபாத் குழு ஒன்று சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து வந்திருந்தது. அவர்கள் பதிவு செய்த அறைகளை விட குறைவான அறைகளையே ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஹோட்டல் முதலாளியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

        எங்களுக்கும் கூட,  கொடுக்கப்பட்ட மூன்று அறைகளில் ஒன்றில் attached bathroom இல்லை. நாங்கள் வேறு வழியில்லாமல் எடுத்துக்கொண்டோம். என்னதான் booking.com -இல் ரேட்டிங் பார்த்து பதிவு செய்தாலும் இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியவில்லை.


        அடுத்த நாள் குல்மார்க் போகவேண்டும். 

        எங்கள் Gondola Ride - காலை 9 -11 மணிக்கே என்பதால், நாங்கள் 7 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம் . யாசிர் எப்போதும் குறித்த நேரத்திற்கு வந்து விடுவார். 

        Gondola என்றால் கேபிள் கார் என்று சொல்வோமே அதுதான். ஆசியாவின் மிக உயரமானதும், மிக நீளமானதுமான கேபிள் கார் பயணம் இது.  கொஞ்ச நேரத்திலேயே மிக உயரத்திற்குச் சென்று விடும் பயணம் (14000 அடி  உயரம்).   ஆஸ்துமா, இருதய நோய் இருப்பவர்களை gondola ride செல்லவேண்டாம் என்று எச்சரித்து அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும், மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பது காரணம்.

        மேலே இருந்து குல்மார்க்கைப் பார்க்க மிக அழகாக இருக்கும் என்று இணையத்தில் கிடைக்கும் படங்களை பார்த்தாலே சொல்லிவிடலாம்.  குல்மார்க் தான் குளிர் காலத்திலும் கூட மக்கள் வரக்கூடிய இடம், எல்லாப் பருவங்களிலும் ஒவ்வொருவகை அழகாக இருக்கும் இடம் இது.

        குல்மார்க் செல்ல தன்மார்க் -இல் இருந்து மலை ஏற வேண்டும். காலை எட்டரை மணிக்கெல்லாம் தன்மார்கில் மழை தூறலாகத்  தொடங்கியது. நாங்கள் அங்கேயே பெரிய தண்ணீர் புகாத கோட் மற்றும் பூட்ஸ் எல்லாம் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். 

        கொண்டை ஊசி வளைவுகளில் மேலே ஏற ஏற மழை நன்றாகப் பெய்யத் தொடங்கியது. காரில் செல்லும்போது  visibility குறைந்து கொண்டே இருந்தது.  

        குல்மார்க் சென்று சேர்ந்தவுடன் ஏமாற்றம். அன்று முழுவதும் எல்லா gondola சேவைகளையும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்துவிட்டார்கள். பொதுவாக மே மாதத்தில் இப்படியெல்லாம் மழை பெய்வது கிடையாது.  எங்களுக்கு அன்று வாய்க்கவில்லை. 


        எங்கள் கார் சென்று பார்க்கிங்-இல் நின்ற போதே யூனியன் டாக்ஸிக்காரர்கள் 3 பேர் சூழ்ந்து கொண்டார்கள். குல்மார்கில் 6 இடங்கள் சுற்றிக் காண்பிப்பதாக சொன்னார்கள்.  இப்படிப் பெய்யும் மழையில் என்ன பார்ப்பது என்று நாங்கள் மறுத்துக்கொண்டே இருந்தோம். அவர்கள் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள்.

        சரி வந்ததுதான் வந்துவிட்டோம் , எதையாவது பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தால் 5000 ரூபாய் கேட்டார்கள். அப்படி இப்படி என்று 4500 ரூபாய்க்குப் பேசி முடித்தோம். 

உண்மையில் அது ஒரு scam . பேசி முடித்தவர்கள் 3000 ரூபாய் வாங்கிக் கொண்டார்கள். டாடா சுமோ டிரைவரிடம் மீதி 1500 ரூபாய் கொடுத்துவிடச் சொன்னார்கள்.  




அந்த டிரைவர் எவ்வளவு வேகமாக ஓட்ட முடியுமோ, அவ்வளவு வேகமாக ஓட்டிச் சென்றார். செல்லும் இடங்களும் தொலைவில் எல்லாம் இல்லை. மேலும் எல்லாமே ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ள இடங்கள்தான். 


உலகின் உயரமான கோல்ப் மைதானம், 100 அடி உயர கொடிக் கம்பம் என்று சில இடங்கள்.  இறங்கிப் பார்க்க வேண்டும் என்றால் மழை கொட்டுகிறது.  அந்த மழையிலும் ஒரு இடத்தில், முதியவர் ஒருவர் தேங்காய்ச் சில் விற்றுக் கொண்டிருந்தார்.





        காரில் இருந்தே வெளியில் வேடிக்கை பார்த்து விட்டு அரை மணி நேரத்தில் இறக்கி விடப்பட்டோம். இறங்கிய பின் டிரைவர் டிப்ஸ் கேட்டதுதான் கொடுமையின் உச்சம்!

        குல்மார்க் எங்களுக்கு நல்ல அனுபவ நினைவுகளைக் கொடுக்கவில்லை ! 

        பதினொன்றரை மணி போல் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.  அன்று மாலை ஸ்ரீநகரில் கொஞ்சம் ஷாப்பிங். டால் ஏரிக்கரையில் Smart Cycles என்று அங்கங்கே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதை வாடகைக்கு எடுத்து சிறிது நேரம் cycling,  relaxed ஆக ஏரிக்கரையில் நடை என்று அன்றைய நாள் சென்றது.






         மறுநாள் காலையில் ஊர் திரும்புவதற்கு எங்களுக்கு விமானம். 

        ஸ்ரீநகரில் 2 முறை நம்முடைய பெட்டிகளை ஸ்கேன் செய்கிறார்கள். ஒன்று CRPF - அதிகாரிகள் விமான நிலையத்தின்  வளாகத்துக்குள் நுழையும் முன்பு,மற்றொன்று எப்போதும் போல் விமான நிலையத்தில். 

        யாசிர் மிகுந்த நட்புடன் விடை கொடுத்தார்!  

        காஷ்மீர் பற்றி என்னதான் செய்தித் தாள்களில் புத்தகங்களில் படித்திருந்தாலும்,  தொலைக்காட்சியில்  பார்த்திருந்தாலும்  நேரில் சென்று பார்க்கும்போதுதான் பல புதிய கோணங்கள் தெரிகிறது.

         ஊர் திரும்பும் நாளையும் சேர்த்து மொத்தம் 8 நாட்கள். எப்படிச் சென்றதே என்றே தெரியவில்லை! மொத்தமாகப் பார்த்தால் குல்மார்க் பார்க்கவில்லை என்ற (சிறு)குறை  தவிர எல்லா விஷயங்களும் மன நிறைவாகத்தான் இருந்தது. குல்மார்க்கை சாக்காக வைத்து மீண்டும் ஒருமுறை காஷ்மீர் வரலாம் அல்லவா?




        இணையத்தில் பார்த்தால் அன்று சென்னையின் வெப்பநிலை 34 டிகிரி (Feels Like 47 டிகிரி) என்று காண்பித்தது. 

        மனதளவில் சென்னையை எதிர்கொள்ளத்  தயாரானோம் !


- காஷ்மீர்ப் பயணம் நிறைவடைந்தது.

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1