காஷ்மீர்ப் பயணம்- 4 : பஹல்கம் (Pahalgam)






காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர்


    அடுத்த நாள் காலை பஹல்கம் (Pahalgam)  புறப்பட வேண்டும். யாசிர் எங்களிடம் பள்ளிப் பேருந்துகள் வரத் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஆகிவிடும் என்பதால் காலை 7 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும்படி சொன்னார்.

மே மாதக் கடைசியில் பள்ளிகள் நடக்குமா என்ன ? 

        காஷ்மீரின்  கல்வியாண்டு இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து வேறுபட்டது. அது டிசம்பர் தொடங்கி நவம்பரில் முடியும். ஜனவரிமுதல் மார்ச் வரை மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் காஷ்மீர் மாணவர்களுக்கு அதுதான் விடுமுறைக்காலம். ஏப்ரல் முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கி, நவம்பரில் தேர்வுகள் இருக்கும்.

    

    காஷ்மீரில் மட்டும் தான்  இப்படி. ஜம்முவின் பெரும்பாலான பகுதிகளில் கல்வியாண்டு  ஜூன் தொடங்கி ஏப்ரல் வரை  செயல்படுகிறது. 

      

         அங்கு பல முறை சமச்சீரான கல்வியாண்டு கொண்டு வருவதற்கு  முயன்று அது தோல்வியில் முடிந்துள்ளது. சமீபத்தில் கவர்னர் அரசு காஷ்மீரின் கல்வியாண்டை ஜூன் முதல் ஏப்ரல் வரை மாற்றி அமைத்துள்ளது. மலைப்பகுதிகளில் -12 டிகிரி வரை செல்லும் குளிரில், கடும் பனிப்பொழிவுக்கு இடையே பொதுத் தேர்வு எழுதுவது, நடத்துவது மிகுந்த சிரமம்.  இதன் விளைவுகள் அடுத்த ஆண்டுதான் தெரியும்.

      

      யாசிர் சொன்னபடி காலை விரைவாகக் கிளம்பி, 8 மணிக்கு முன்பே ஸ்ரீநகரில் இருந்து வெளியில் வந்து எங்கள் கார் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையைப் பிடித்து விட்டது. 


        15 கிமீ தொலைவில் பாம்போர் (Pampore) என்னும் ஊர் வருகிறது. அந்த ஊர் குங்குமப் பூவிற்கு புகழ் பெற்றது.நெடுஞ்சாலையின் இருபுறமும் குங்குமப்பூ வயல்கள். ஜூன் மாதத்தில்தான் விதைப்பார்கள்.  நாம் அக்டோபர் மாதத்தில் வந்தால் கத்திரிப் பூ நிறத்தில் குங்குமப்பூ வயல்களை பார்க்கலாம். 


        யாசிர் பாம்போரில் காரை நிறுத்தி எங்களுக்கு காஷ்மீரி காவா (kawah) வாங்கிக் கொடுத்தார். அது அவர் எங்களை அவரின் விருந்தாளிகளாக கருதி அவருடைய செலவில் கொடுத்த தேநீர் விருந்து. காவா என்பது காஷ்மீரி பச்சை தேயிலையுடன், பட்டை , ஏலக்காய், குங்குமப்பூ, பாதாம் அதனுடன் இனிப்புக்காக தேனும் சேர்த்து நெடுநேரம் பாய்லர் சூட்டில் கொதிக்க வைத்து செய்யப்படும் பானம். அட்டகாசமான சுவை. பக்கத்துக்கு கடையில் காவா மசாலா விற்றார்கள்.நாங்களும் வாங்கி வந்திருக்கிறோம்.


        இன்னும் 30 கிமீ தொலைவு சென்றால் பிஜ்பெஹெரா (Bijbehara) என்னும் ஊர். இங்கிருந்துதான் புகழ் பெற்ற காஷ்மீர் வில்லோ மரத்தினால் செய்யப்படும் கிரிக்கெட் மட்டைகள் உலகமெங்கும் செல்கின்றன. இருபுறமும் ஏகப்பட்ட கிரிக்கெட் மட்டை விற்கும் கடைகள்.


        தெற்கு நோக்கிச் செல்லும் ஜம்மு சாலையில் இடது புறம் அனந்த்நாக் -இல் திரும்பி பஹல்கம் செல்லவேண்டும். அனந்த்நாக் ஒரு பெரிய ஊராகத் தெரிகிறது. அந்த ஊரைக் கடந்ததும் லிதர் (lidder) ஆறு சாலை வழியெங்கும் வருகிறது.நாம் மேலே ஏறுகிறோம், ஆறு நமக்கு எதிர் திசையில் பாய்ந்து செல்கிறது. ஒரு இடத்தில் River Rafting - உம் நடக்கிறது. ஆனால் யாசிர் அது அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை என்று சொல்லிவிட்டார்.  கடந்த வாரத்தில்  குஜராத்தி தம்பதிகள் சுழலில் சிக்கி இறந்துவிட்டதாக அவர் சொன்னார்.



        வழியெங்கும் ஆற்றுப் படுகையில் ஆப்பிள் தோட்டங்கள்,  அது முடிந்ததும் வால்நட் மரங்கள் என்று பார்த்துக்கொண்டே சென்றோம்.  




        நாம் பல ஊர்களிலும் இளநீர் விற்றுத்தான் பார்த்திருப்போம். காஷ்மீரில் பல இடங்களில் தேங்காய்ச்சில் அல்லது தேங்காய் பத்தைகளை நம்மூரில் வெள்ளரிக்காய் விற்பது போல விற்கிறார்கள். 


         பஹல்கம் சென்று சேர நண்பகல் 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. நாங்கள் நேராக ஹோட்டல் செல்லவில்லை.  பஹல்கமில் சில அழகிய இடங்களுக்கு (உ.ம் : மினி ஸ்விட்சர்லாந்து)  குதிரையில் மட்டுமே சென்று பார்க்க முடியும். அதைப்பார்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 


        பஹல்கம் மெயின் மார்க்கெட்டில் இருந்து குதிரைகள் செல்கின்றன. யூனியன் குதிரைக்காரர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்படுகிறார்கள். ஒரு கார் வந்தது என்றால் அதை ஒரு குழுவின் தலைவர் மட்டுமே அணுகுகிறார். பேரம் பேசப்படுகிறது.  அதில் சவாரி செய்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவரிடம் உள்ள குதிரைப்  பாகன்களுக்கு சுழற்சி முறைப்படி அந்த வேலையைப் பகிர்ந்தளிக்கிறார். அடுத்து வரும் கார் சுழற்சி முறையில் அடுத்த குழுவிற்கு... இப்படி, இந்த வகையான பங்கீட்டு முறை எனக்குப் பிடித்திருந்தது.


        எனக்கு உயரமென்றால் பயம். அதனால் எந்த இடம் எவ்வளவு அழகாக இருந்தாலும் குதிரையில் சென்று பார்ப்பதில்லை என்று தெளிவாக இருந்தேன்.நான் எடுத்த முடிவு சரியானது என்று மற்ற எல்லோரும் சென்று வந்த பின்பு உறுதியானது.


        இப்போதெல்லாம் பல இடங்களில் பல thrill Rides வந்துவிட்டன. ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு பாதுகாப்பு அம்சம் இருக்கும். பத்ரிநாத், அமர்நாத் போன்ற இடங்களுக்கு குதிரையில் செல்பவர்கள் அனுபவிப்பது அந்த thrill rides எல்லாவற்றையும் விட பயம் நிறைந்ததாக இருக்கும். Safety Precautions எதுவும் கிடையாது, குதிரை ஒரு அங்குலம் காலை நகர்த்தி வைத்தால் கூட அதல பாதாளத்தில் விழுவோம். அந்த யாத்திரைகளுக்கு ஒரு முன்னோட்டம்தான் பஹல்கம்மில் எங்கள் குழு சென்று வந்ததும். 





ஆனால் "மினி ஸ்விட்சர்லாந்து" கண் கொள்ளாக் காட்சிதான்!




மதிய உணவுக்குப்பின் வேறு திட்டம் இல்லை. அதனால்  எங்கள் cottage வந்து சேர்ந்தோம். 


எங்கள் தங்குமிடம் மார்க்கெட்-இல் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் தான் என்றாலும் அது பைன் மரக் காடுகளின் நடுவே, முன்னே பெரிய புல்வெளியுடன்  அமைத்திருந்தது. குறைந்தபட்ச வசதிகள்தான், ஆனால் அந்த இடம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.. 




        மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து வெளியில் வந்து பார்த்தேன். பைன் மரக் காட்டில் கூட்டமாக குரங்குகள். சில குரங்குகள் கிளையைக் கட்டிப்பிடித்து தூங்கி கொண்டிருந்தன. சில அப்போதுதான் விழித்தெழுந்து சுற்றிக் கொண்டிருந்தன. 

பஹல்கம்மில் குளிர் காலத்தில் -12 டிகிரி வரை செல்லும். நாங்கள் தங்கி இருக்கும் இந்த cottage கூட நவம்பர் மாதத்தில் மூடி விடுவார்கள். மீண்டும் ஏப்ரல் மாதத்தில்தான் திறப்பார்களாம். இந்தக் குரங்குகள் அந்தக் குளிரைத் தாங்குமா ? ஒரு வேளை கடுங்குளிர் வருவதற்கு முன் மலையில் இருந்து இறங்கி கீழே சென்று விடுமா ? தெரியவில்லை ....


        காலை உணவைப் புல்வெளியில் வைத்து 10 டிகிரி குளிரில் வைத்து சாப்பிட்டோம்



        எங்கள் பஹல்கம் திட்டம் சற்று தளர்வானதுதான்... பஹல்கமில் மூன்று சமவெளிகள் முக்கியமானவை. ABC என்று சொல்வார்கள் அரு சமவெளி (Aru Valley), பேத்தாப் சமவெளி (Betaab Valley) மற்றும் சந்தன்வாரி (Chandanvari). இன்று எங்கள் திட்டம் அதை மூன்றையும் பார்ப்பதுதான்.


        காலை 10 மணிக்கு யூனியன் டாக்ஸி-யை வரச் சொல்லி இருந்தோம். சரியாக வந்து விட்டது. பஹல்காமில் செல்லும் வழியெல்லாம் அருவிகளும், நதியும்,ஓடைகளும் தான். இலேசாகத் தூறும் மழையில் அதையெல்லாம் பார்ப்பது கொள்ளை அழகு. அந்த வகையில் பஹல்கம் எங்களுக்கு நார்வேயை நினைவு படுத்தியது.


        முதலில் சந்தன்வாரி சென்றோம்.மழை தூர ஆரம்பித்து விட்டது.பல இடங்களில் குடைகளை வாடகைக்கு விடுகிறார்கள். நாங்கள் அதெல்லாம் வாங்காமல் நேரே Glacier ஐப் பார்க்கப் போய் விட்டோம்,மழை  கொஞ்சம் வலுத்து விட்டது. 



        அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் காரில் வந்து சேரும் கடைசி  இடம்தான் சந்தன்வாரி, அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் நடந்தோ அல்லது குதிரையிலோ தான் செல்ல வேண்டும். சந்தன்வாரியில் பனி இன்னும் முழுதும் உருகாமல் இருந்தது. அதனால் மேலே செல்லும் வழி முழுதும் வழுக்கும் தன்மையுடன் இருந்தது. 


        மழை பெய்தும், பனி உருகியும் உருவாகும் லிதர் ஆறு வெள்ளி நிறத்தில் சென்று கொண்டிருந்தது. மழையில் நனைந்து கொண்டே அதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.



        எல்லா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வரும் சிறு வியாபாரிகள். புறா போன்ற பழக்கிய பறவையைக் கையில் வைத்து, தோளில் வைத்து  போட்டோ எடுக்க 20 ரூபாய். ஆட்டுக்குட்டி என்றால் 50 ரூபாய். 




        சந்தன்வாரியில் இருந்து காரில் கீழே இறங்கி வந்தால் பேத்தாப் சமவெளி (Betaab Valley) செல்லலாம்.. 1983 -இல் சன்னி தியோல் நடித்து வெளிவந்த ஹிந்தி திரைப்படம் பேத்தாப். அந்தப் படத்தில் இந்த இடத்தைக் காட்டிய பின்தான், இந்த இடம் சுற்றுலாவுக்குப் புகழ் பெற்றது. அதனால்தான் இந்த இடத்துக்கு Betaab Valley என்று பெயர் வந்திருக்கிறது.


        Betaab Valley வருவதற்கு முன் காரை மேலேயே நிறுத்தி போட்டோ எடுக்கிறார்கள். 




           இலேசாக மழைச் சாரல், வேகமாக நகரும் மேகங்களின் பின்னணியில் பசுமையான பைன் மரக்காடுகளுடன் மலைகள், பனி மூடிய மலையுச்சிகள், பரந்து விரிந்த புல்வெளியில் நடுவே வளைந்து செல்லும் ஆறு! Mesmerizing view!!  நாங்கள் காஷ்மீரில் பார்த்த இடங்களை அழகின் தரத்தில் வரிசைப்படுத்தினால் பேத்தாப் சமவெளி தான் முதலில் வரும்.


        நாங்கள் காரை நிறுத்துவதற்குள் மழை பிடித்துக்கொண்டது. குடைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அடாது மழை பெய்தாலும் விடாது சுற்றும் எங்களைப் போலவே பலரும் இருந்தார்கள். 




        உண்மையிலேயே அதிக நேரம் செலவழிக்க வேண்டிய இடம். அந்த இடத்தை விட்டுச் செல்ல மனம் வராது. மழையினால் சீக்கிரமே கிளம்ப வேண்டியதாயிற்று.


        மதிய உணவை அங்கே கிடைக்கும் maggi -யுடன் முடித்துக்கொண்டோம்.


        அரு சமவெளி-க்கு செல்லும் வழியெல்லாம் மழைதான்.  அந்த மழையிலும் எங்கள் ஓட்டுநர் மைக்கேல் ஷூமாக்கரின் தம்பி என்று நினைப்பில்தான் காரை ஓட்டினார். மழையினால் புதிய புதிய வெள்ளி அருவிகள் உருவாகி மலையில் இருந்து கீழே இறங்குகின்றன. வழக்கமான அருவிகள் பேரிரைச்சலுடன் கொட்டுகின்றன.



        சந்தன்வாரியில் குடை கூட இல்லாமல் சுற்றினோம், பேதாப்பில் குடை வாடகைக்கு எடுத்தோம், அரு சமவெளியில் இறங்கியவுடன் மழை கோட்டு வாங்க வேண்டியதாயிற்று. தெருவெங்கும் மழையில் ஊறிய குதிரைச் சாணம். வேறு வழியில்லை, அது அழகை ரசிக்க கொடுக்கப்படும் விலை என்று கொள்ளவேண்டும். 



        அரு சமவெளி எதற்கும் சளைத்தது இல்லை. அங்கேயே தங்கி விடலாம் என்று நினைக்க வைக்கும் பேரழகு. மழை இல்லாவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்றெல்லாம் தோன்றவில்லை, இது வேறு வகையில் அழகு.


                காஷ்மீரில் பல இடங்களிலும்  Photographers என்று சில பேர் சுற்றுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு போட்டோ எடுக்கத் தெரியுமா என்று சாம்பிள் பார்த்துவிட்டு எடுக்க வேண்டும்.  நம் வீட்டு சிறுவர்களே அதை விட நன்றாக எடுப்பார்கள் என்று தோன்றும் . போட்டோ ஒன்றிற்கு 25 ரூபாய் என்பார்கள். சடசட வென்று 20-30 போட்டோக்களை சுட்டுத் தள்ளிவிடுவார்கள். அத்தனைக்கும் பணம் கொடுக்க வேண்டும்.


        அரு சமவெளி பார்த்துவிட்டு தங்குமிடம் வருவதற்கு நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டது.இன்றும் கொஞ்சம் ஓய்வு வேண்டும். 


-- அடுத்து காஷ்மீர் பயணத்தின் இறுதிப் பகுதி 


Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1