காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்




குடும்பத்துடன் நீண்ட பயணம் செய்து நெடு நாட்கள் ஆகிவிட்டன. முதல் மூன்று ஆண்டுகள் கொரோனா முதலில் முடக்கிப் போட்டது என்றால், மகிழ்நனின் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கான ஆயத்தங்கள் என்று மீண்டும் ஒரு வருடம் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள இயலவில்லை.


ஒருவாறாக, மே இரண்டாம் வாரத்திற்குப் பிறகு பயணம் செல்லலாம் என்று திட்டமிடப் பட்டது. முதலில் தாய்லாந்து தான் செல்வதாகத் திட்டம். ஆனால் தாய்லாந்தில் மே மாதம் அடிக்கிற வெயிலும் சென்னைக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதால்  காஷ்மீர் என்று முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்தில் நால்வரும், உறவினரின் குடும்பம் மூன்று பேரும் என எங்கள் பயணத்தில் மொத்தம் 7 பேர்.


சென்ற ஆண்டு, நான் மட்டும் ஸ்பிட்டி சமவெளி சென்ற போது பணய ஏற்பாட்டாளர் வழியாக சென்றேன். ஆனால் இந்த முறை அனைத்து ஏற்பாடுகளும் நாங்களே செய்து கொண்டோம். இதில் சாதக பாதகங்கள் உண்டு. 


 பாதகம் என்றால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும். எந்த கால வரிசையில் எங்கெங்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்து, ஹோட்டல் முன் பதிவு செய்யவேண்டும், பயண வாகனத்தை வாடகைக்கு அமர்த்த வேண்டும். எங்கு என்ன சாப்பிடவேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும், இன்னும் பல. 


சாதகம் என்றால் செலவு குறைவு, நமக்குத் பிடித்த தங்குமிடத்தை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.இந்தவகையில் எங்களுக்கு சேமிப்பு கணிசமானது. அதிக இடங்கள் பார்க்க முடியும்.


ஹோட்டல் முன் பதிவு எல்லாம் booking.com வழியாக செய்து கொண்டோம்.  ஸ்பிட்டி பயணத்தில் என்னுடன் பயணித்த நண்பரின் நண்பர்  ஸ்ரீநகர் NIT -இல் பேராசிரியர் ஆக இருக்கிறார். அவர் மூலம்  Tavera கார் ஒன்றை எங்கள் முழுப்பயணத்துக்கும் ஏற்பாடு செய்து கொண்டோம். எங்களுக்கு ஆங்கிலம் தெரிந்த ஓட்டுநர் வேண்டும் என்று வற்புறுத்தியதால், பேராசிரியரின் உறவினர் யாசிர் என்பவர் எங்களுக்கு கார் ஓட்டினார்.   நீண்ட பயணத்தில் நல்ல ஓட்டுநர் அமைவது மிக முக்கியம், எங்களுக்கு சிறப்பாகவே கிடைத்துவிட்டார்.


மே 26, வெள்ளி காலை சென்னையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து ஸ்ரீநகர் சென்று சேர்ந்தோம். விமானம் டெல்லியில் இருந்து சரியான நேரத்திற்கு கிளம்பி விட்டாலும் மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகரில் விமானம் தரை  இறங்க தாமதம் ஆயிற்று. வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிலே இருந்தது. (சென்னையில் அப்போது 38 டிகிரி இருந்திருக்கும்.)


காஷ்மீரில் வெளி மாநிலத்தில் வாங்கியிருக்கும் Prepaid அலைபேசி எண்கள் வேலை செய்யாது. அதுபோல காஷ்மீரில் வாங்கும் எந்த prepaid எண்ணும் மற்ற மாநிலத்தில் வேலை செய்யாது. தேவை என்றால் ஒரு ப்ரீபெய்ட் சிம் வாங்கி அங்கே மட்டும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதிலும் ஜியோ மட்டுமே எல்லா இடங்களிலும் வேலை செய்கிறது. என்னுடைய postpaid வோடபோன் ஸ்ரீநகரில் மட்டும்தான்.



முதல் நாள் மாலையே நாங்கள் சோன்மார்க் (Sonamarg) சென்று தங்குவதாகத் திட்டம். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து சோன்மார்க் 90 கி. மீ. தூரம். மழை நசநசவென்று தூறிக்கொண்டே இருந்தது. எங்கள் ஓட்டுநர் இளைஞர், பி.டெக் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர். நிறைய பேசிக்கொண்டே வந்தார். 



வரும் வழியில் இரு கரையும் தொட்டு ஜீலம் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆட்கள் யாரும் கரைகளில் இல்லை. ஒரே ஒரு சிறிய துடுப்புப் படகை மட்டும் ஒருவர் கரையோரத்தில் செலுத்திக் கொண்டிருந்தார்,


இருட்டிக் கொண்டிருக்கும் மழை மேகங்களின் பின்ணணியில் கரை புரண்டு ஓடும் நதியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  ஆனால் அதெற்கெல்லாம் நேரம் இல்லை என்பதால் பாலத்தில் செல்லும்போது காரில் இருந்து மட்டும் ரசித்துக் கொண்டோம்.


யாசிர் எங்களை கிராமத்து வழிகளில் ஒரு குறுக்குப் பாதையில் அழைத்துச் சென்றார். அமைதியான கிராமங்கள், போட்டோக்களில் மட்டுமே பார்த்த உருளையான தண்ணீர் குடங்களைச் சுமந்து வரும் பெண்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு.


 கிராமங்களில் பல இடங்களில் கடுகு பயிர் செய்கிறார்கள். அத்துடன் நம்மூரில் சவுக்கு, மூங்கில் போல பணப்பயிராக பாப்லர் (poplar) மரங்களை நட்டு வளர்க்கிறார்கள். ப்ளைவுட் செய்வதற்கு இந்த மரங்கள் பயன்படுகின்றன.


கிட்டத்தட்ட 6 கி மீ சென்ற பின், CRPF அந்தப் பாதையில் டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களை அனுமதிக்க மறுத்து விட்டது.. சில நாட்களுக்கு முன்தான்  இந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன என்று யாசிர் சொன்னார்.  இப்போது மறுப்பதற்கு என்ன காரணம் என்றும்  தெரியவில்லை. இது போன்ற விஷயங்கள்தான்  காஷ்மீரிகளை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்குகிறது.


தன்னுடைய சொந்த ஊரில், வேற்று மாநிலத்தவன் ஒருவன் எந்தக் காரணமும் சொல்லாமல் சாலையை மூடி விடுகிறான் என்றால் வரும் கோபம் நியாயமானதே! அத்துடன் 2018 இல் இருந்து அங்கு கவர்னர் ஆட்சி நடக்கிறது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி விட்டார்கள். மாநில உரிமைகள் பறிபோனதால், காஷ்மீர் சமவெளி மக்கள் மட்டுமல்ல ஜம்மு மற்றும் லடாக் மக்களும் இந்த விஷயத்தில் திருப்தியாக இல்லை. 


மீண்டும் 6 கி மீ வந்த வழியிலேயே திரும்பி வந்து நெடுஞ்சாலையில் இணைந்து கொண்டோம். 


சோன்மார்க் ஊர் ஸ்ரீநகரில் இருந்து கார்கில் செல்லும் வழியில் உள்ளது. கார்கில் ஒரு ராணுவ மையம் என்பதால், அதற்கு தேவைப்படும் பொருட்கள் கொண்டு நிறைய லாரிகள் செல்கின்றன. மழை சற்றே வலுத்து விட்டிருந்ததால், கார் மெதுவாகத்தான் செல்ல முடிந்தது. அது தவிர இது மலையேற்றம் வேறு . மழை இன்னும் பெரிதாகப் பெய்தால் அங்கங்கு நிலம் சரிந்து விபத்துகள் ஏற்படலாம் அல்லது போக்குவரத்து தடை படலாம். 


எந்த ஒரு தடையும் இல்லாமல் , எப்படியோ நாங்கள் எங்கள் தங்குமிடம் வந்து சேர இரவு 9:30 மணி ஆயிற்று.



நாங்கள் முன் பதிவு செய்திருந்தது Fara's HomeStay என்னும் தங்குமிடம்.இது ஒரு காஷ்மீரி-பிரெஞ்சு தம்பதியினரால் 13 வருடங்களாக நடத்தப்படுகின்றது. இரவு உணவுக்கும் சேர்த்தேதான் நாங்கள் பணம் செலுத்தி இருந்தோம். 



சிறப்பான இரவு உணவு அன்று, Chicken Yakhni,  Mutton Rogan Josh , பனீர் பட்டர் மசாலா , பருப்பு, ரொட்டி மற்றும் சோறு. Yakhni என்பது இறைச்சியை தயிரில் சேர்த்து செய்யப்படும் ஒரு காஷ்மீரி உணவு. நாம் இதுவரை ருசிக்காத ஒரு சுவை.  மற்றொரு காஷ்மீரி உணவான Rogan Josh - கொஞ்சம் பழக்கமான சுவை போல இருந்தது. ஆனால் இங்கு பெரும்பாலும் செம்மறி  ஆடுகள்தான், அதன் ரோமங்கள் தேவைப்படுவதால், அதுவும் நன்றாக வளர்ந்து முற்றிய பின்னேயே வெட்டப்படுகின்றன. ம்ஹூம் ....தென் தமிழ்நாட்டைப்போல் இளம் வெள்ளாடு கிடைக்க வாய்ப்பேயில்லை .



Fara's HomeStay சோன்மார்க்-இல் முக்கியமான இடமாகவும் எங்களுக்கு அமைந்தது. முக்கோண வடிவ நிலத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஒருபுறம் நெடுஞ்சாலை, ஒரு புறம் ஆர்ப்பரித்து வரும் சிந்து நதி, மற்றொரு புறம் மலையில் இருந்து வந்து சிந்துவில் சேரும் நீரோடை (அல்லது அருவி). அறைக்கதவைப் பூட்டி தூங்கும்போது கூட ஆற்றின், அருவியின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. 






தூங்கி எழுந்து ஜன்னல் வழியே பார்த்தால், வெள்ளிப் பனி மூடிய மலைகள் ஒருபுறம் தெரிகிறது. இரவில் களைப்புடன் வந்து படுத்து விட்டதால் இதை எல்லாம் கவனிக்கவில்லை.



நேராக சமையலறை சென்று தேநீர் கேட்டு வாங்கி கொண்டேன்.காலையில் 8 டிகிரி குளிரில் கையில் தேநீருடன், ஆற்றங்கரையில் உட்கார்ந்து குடிக்கும் அனுபவம், தனித்துவமானது. நான் நெடுநேரம் சிந்துவின் ஆர்ப்பரிப்பைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன்.


காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1