காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர்

 


காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

       காஷ்மீர் செல்வது பாதுகாப்பானதுதானா  என்று நண்பர்கள் பலர் கேட்டிருந்தார்கள்.ஸ்ரீநகரில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவுக்கும் குறைந்தபட்சம் ஒரு CRPF - வீரர் கையில் யந்திரத் துப்பாக்கியுடன் நிற்கிறார். நான் பார்த்தவரை எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை. 

        சினிமாக்களும் ஊடகங்களும் சிறிய விஷயங்களையும் பெரிதுபடுத்துவார்கள். 1980-இன் இறுதிப்பகுதிகள் அல்லது 1990-களின் தொடக்கம் போல இப்போதெல்லாம் இல்லை (ரோஜா திரைப்படம் 1992-இல் வெளியானது).  2008 -ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 60% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.  2009 -இல் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக காஷ்மீர் இருந்திருக்கிறது. 

        காஷ்மீரில்  கணிசமான மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலாவைச் சார்ந்தே  உள்ளது. கொரோனா இவர்களை அதிகமாகப் பாதித்திருக்கிறது.  அவர்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும். அவர்கள் வர வேண்டும் என்றால் ஊர் அமைதியானதாக இருக்கவேண்டும். 

        இப்போது நீங்கள் YouTube-இல் தேடினால் கூட புதியதாக எத்தனை காஷ்மீர் Vlogs - வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். மற்றபடி,  செய்திகளைத் தெரிந்து கொண்டு புறப்படுவது நல்லது,முக்கியமாக வானிலை பற்றிய செய்திகளை. 


எங்கள் பயணத்தில்....

        நாங்கள் பட்ஜெட் விலையில்தான் அந்த Boat House ஐ எடுத்திருந்தோம். ஆனாலும் எங்களுக்கென்று குறைந்தபட்ச வசதிகளுடன் ஒரு தனி படகு வீடு கிடைத்திருந்தது.

        ஸ்ரீநகர் டால் ஏரியின் Boat House - என்பது ஆலப்புழாவில் உள்ளது போல  நகரும் படகு வீடு கிடையாது. இது நிலையானது. கரையில் இருந்து சற்று தூரத்தில் தண்ணீரில் இருக்கும். அதற்கு நாம்தான் சிறிய படகில் செல்லவேண்டும்.  




         எங்கள் படகு வீட்டில் என்ன சிக்கல் என்றால் நடக்கும்போதெல்லாம் "கிரீச்" சத்தம் கேட்கும். sound proof கிடையாது. பக்கத்து படகு வீட்டின் பேச்சுச் சப்தங்கள் நமக்கு தெளிவாகக் கேட்கும் (ஹிந்தியில் இருப்பதால் நமக்குத் புரியாது...அது வேறு விஷயம்  ! !). காலை 4 மணிக்கு மசூதியின் பாங்கோசை நம் காதுக்குள் வந்து ரீங்கரிக்கும். ஆனாலும், இவையெல்லாம் குறைகளா  என்ன?


        மே மாதத்தில் காஷ்மீரில் 5 மணிக்கே விடிந்து விடுகிறது.  நாங்கள் காலை ஐந்தரை மணிக்கே எழுந்து விட்டோம்.   வீட்டை விட்டு வெளியில் வந்தால் 12 டிகிரி குளிர்.அந்த நேரத்திலும் சிறிய படகுகளில் வந்து டீ , காபி விற்கிறார்கள், மீன் பிடிக்கிறார்கள். அது தவிர, காஷ்மீரி ஷால், பூ விதைகள், கலைப்பொருட்கள்  எல்லாம் சிறிய படகுகளில் விற்பனைக்கு வருகின்றன.



        மீன் வளமாக இருக்கும் அந்த ஏரியில் அமைதியான அந்த நேரத்தில் பத்து பன்னிரண்டு நாரைகள் மீனுக்காக காத்திருக்கின்றன. பழுப்பு நிறத்தில் மீன்கொத்தி போன்றிருக்கும் பறவை மீனைக் கொத்திக்கொண்டு சென்றது. பருந்து ஒன்று தாழ்வாகப் பறந்து காலில் மீனை காவிக்கொண்டு சென்றது.


        நாங்களும் டீ ஒன்றை வாங்கி வீட்டுக்கு வெளியில் இருக்கும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து குடித்துக்கொண்டே இதையெல்லாம் ரசித்துக்கொண்டிருந்தோம்  (வாழ்வுதான்!).


        ஸ்ரீநகரில் என்ன பார்ப்பது என்ற திட்டம் எல்லாம் இல்லை. மழை வேறு வந்து விடலாம். எனவே முக்கியமானவற்றை முதலில் பார்த்து விடுவது திட்டம். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நாம் பார்க்க வேண்டிய பெரும்பாலான இடங்கள் டால் ஏரியைச் சுற்றியே அமைந்திருக்கிறது. டால் ஏரியின் சுற்றளவு மட்டும் 16 கிமீ.


        ஸ்ரீநகரில் அன்று ஞாயிற்றுக்கிழமை நல்ல கூட்டம். இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். தமிழர்கள் குடும்பம் குடும்பமாக அதிகம் தென்படுகிறார்கள். காஷ்மீரில் பல இடங்களிலும் நிறைய சைவ சாப்பாட்டு கடைகளைக் காண முடிகிறது (அங்கு அது வைஷ்ணவ சாப்பாடு).


        முதலில் நாங்கள் சென்றது, மொகல் தோட்டங்களில் ஒன்றான  நிஷாத் பாக். இதை வடிவமைத்துக் கட்டியவர் மொகலாய மன்னர் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹானின் அண்ணன் ஆசிஃப் கான்.  இவர் ஷாஜஹானின் மாமனாரும்  (உண்மையில்...மாமனார்களில் ஒருவர்!), அவரின் பிரதம மந்திரியும்  ஆவார். 



        இந்த இடத்தைப் பார்த்தாலே தெரிகிறது,இவர் ஷாஜஹானுடன் இருப்பதற்குத் தகுதியான ஆள்தான் என... இந்தத் தோட்டத்தை உருவாக்கியதாலேயே  ஆசிஃப் கானின் மேல் ஷா-வுக்கு பொறாமை என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.



        பல வகையான பூச்செடிகளுடனும், செயற்கை நீரூற்றுகளுடனும் இந்தத் தோட்டம் டால் ஏரியின் கரையில், zabarwan மலைத்தொடர்களின் பின்ணணியில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. 

        ஜம்மு-காஷ்மீரின் மாநில மரம் சினார் (Chinar).  இது கனடாவின் புகழ் பெற்ற maple மரங்களின் தூரத்துச் சொந்தம். இலைகள் maple மர இலைகள் போலவே இருக்கின்றன.

 நிஷாத் பாக்-இல் சினார் மரங்கள் வரிசையாக அமைந்துள்ள இடம், பெரும் குழுவாகச் சென்று புளியோதரை(!) சாப்பிட சரியான இடம். 



        அங்கிருக்கும் சினார் மரங்கள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான வயதுடையது. அடிமரத்தை 4 பேர் சேர்ந்து இரு கைகளாலும் கட்ட முடியாத  அளவு பெரியது.  


        புதுமணத் தம்பதிகள் photo shoot நடத்துவதற்கு ஏற்ற இடம்.  அங்கும் ஏராளமான பேர் காஷ்மீரி உடைகளில் இருக்க வித விதமாக கோணங்களில் புகைப்படக்காரர்கள் சுட்டுக் தள்ளிக்கொண்டிருந்தார்கள். 

        யாசிர் அடுத்தாக மீண்டும் ஒரு தோட்டத்திற்கு போகலாம் என்று  சொன்னார். நாங்கள் வேறு இடங்கள் பார்க்க ஆசைப்பட்டோம். அவர் எங்களை சங்கராச்சாரியார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். 

        இந்தக் கோவில்  குறைந்த பட்சம் 550 ஆண்டுகள் பழமையானது. அங்கிருக்கும் ஒரு பாரசீக மொழிக்கு கல்வெட்டின்படி அதன் தூண்களும், மேற்கூரையும் ஷாஜஹானால் கட்டப்பட்டது என்று தொல்லியல் துறையின் பலகை தெரிவிக்கிறது.



        அதன் சிறப்பு மலையில் 1000 அடி உயரத்தில் (கடல் மட்டத்தில் இருந்து அல்ல,கடல் மட்டத்தில் இருந்து 6000 அடி )  அமைந்துள்ளது.அதனால்  அங்கிருந்து பார்த்தால் மொத்த ஸ்ரீநகரையும் பார்க்க முடிகிறது. வளைந்து வளைந்து செல்லும் ஜீலம் நதிக்கரையில் இரு புறமும் வீடுகளுடன் ஸ்ரீநகரின் aerial view அட்டகாசம்.



        ஸ்ரீநகர் மதுரையை விடப் பெரிய நகரம். அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 17 லட்சம். இவ்வளவு மக்கள் வாழும் ஒரு மாநகரத்தில் அரசாங்கத்தின் உள்ளூர் பொதுப்போக்குவரத்து என்ற ஒன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். தனியார்கள்  Tempo Traveller - வண்டிகளை மாநகரப் பேருந்துகள் போல ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவையும் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இந்த வகையில் தமிழ்நாடு சொர்க்கம்! அமைதியான ஊரும், தொலை நோக்குள்ள தலைவர்களும் வாய்க்கப் பெற்றது நம் மாநிலம்!

         சுற்றுலா இடங்களில் உள்ளூர் பெண்களைக் காண முடிவதில்லை. ஆனால் குடியிருப்புப் பகுதிகளில் சாலைகளில் தென்படுகிறார்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிறர்கள். ஸ்ரீநகரில் நாங்கள் பார்த்தவரை பெண்களை எந்தக் கடைகளிலும் வேலைக்கு இருந்து பார்க்க வில்லை.

        ஸ்ரீநகரில் இரு பாலர் படிக்கும் பள்ளிகள் பல இருக்கின்றன. ஆனால் வகுப்புகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி தானாம்!! 

         மதிய உணவுக்கு நேரமாகிவிட்டது... நங்கள் கேட்டுக்கொண்டதால் யாசிர் இன்று நல்ல காஷ்மீரி உணவு கிடைக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார், Stream Restaurant. 

         ரோகன் ஜோஷ் (Rogan Josh), ரிஸ்த்தா (Rista) இரண்டுமே இங்கு சிறப்பு. ரோகன் ஜோஷ் கிட்டத்தட்ட நம்மூர் மசாலாதான், அதே ருசி. ரிஸ்ட்டா என்பது mutton (or beef ) meat ball -ஐப் பிரதானமாகக் கொண்டு செய்யப்படும் கறி. திருப்தியான மதிய உணவு, அந்த உணவகத்தின் சிறப்பான Walnut Tart -உடன் நிறைவடைந்தது.



மணி நான்காகி விட்டது ... ஷிகாரா படகு சவாரி செல்லலாம் என்று முடிவு செய்தோம். 


        காஷ்மீரில் படகு ஓட்டுபவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், குதிரைக்காரர்கள், ஹோட்டல் நடத்துபவர்கள்  எல்லோரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்கள். ஒருவர் அடுத்தவருக்காக பரிந்துரைக்கிறார்கள். அதில் அவர்களின் நட்பும் இருக்கலாம், கமிஷனும் இருக்கலாம்.  ஆனால் பரிந்துரை செய்பவர்கள் நமக்காக பேரம் பேச மாட்டார்கள், எவ்வளவு தொகை வரும் என்று குறிப்பால் உணர்த்தவும் மாட்டார்கள்.

        ஷிகாரா படகிற்கு 7 பேருக்கு 3500 ரூபாய் பேசப்பட்டது. காஷ்மீரில் படகுக்காரர்கள், குதிரைக்காரர்கள் போன்றவர்களிடம் கறாராக பேரம் பேச வேண்டும்.  இவர்களிடம் பேரம் பேசிய பின் நம்மூரில் சில ஆட்டோக்காரர்கள் போல அடாவடி செய்வதில்லை. ஆனால் டிப்ஸ் எதிர்பார்க்கிறார்கள்.


ஸ்ரீநகர் வந்து விட்டால் டால் ஏரியில் ஷிகாரா படகு சவாரி-தான் signature ride.  இரண்டரை மணி நேரம் படகு எங்களுடன் இருந்தது.  நாம் படகில் செல்லும்போதே அருகில் இன்னொரு படகில் வந்து பேஷன் நகைகள், Fridge magnet , கலைப்பொருட்கள் முதல் டீ , காபி வரை வியாபாரம் செய்கிறார்கள். 


இது தவிர மிதக்கும் மார்கெட்டுகள் பல்வேறு வகையான கலைப்பொருட்களை விற்கின்றன. விலை அதிகமாகத்தான் இருக்கும்.


டால் ஏரிக்குள் மக்கள் வசிக்கும் நிலப்பகுதியும் (தீவு ) உள்ளது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே படகு ஓட்டக் கற்றுக்கொடுத்து விடுவார்களாம். 6 வயது குழந்தை கூட படகை ஒட்டிக்கொண்டு வந்து பள்ளி சென்று வருமாம். இதெல்லாம் எங்கள் படகோட்டி சொன்னதுதான்.



        டால் ஏரிக்குள்ளேயே சார் சினார் (char chinar) என்ற தீவுப் பகுதி உள்ளது. நான்கு சினார் மரங்கள் உள்ள இடம் என்று பொருள். அங்கே சிறிய இடைவேளை. அங்கிருந்து குழந்தைகள் தனித்தனியாக Jet Skiing சென்றார்கள். மேகலா Surfing செய்தாள். 



படகு சவாரி எல்லாம் முடிந்து திரும்பும்போது ஏழரை மணி ஆகி விட்டது இன்னும் இருட்டவில்லை. மாலைவெயில் வெளிச்சத்தில் டால் ஏறி காலண்டர் படம் போல ஜொலித்தது.


இன்று முழுவதும் எங்களுக்கு மழை இல்லை. நல்ல வானிலை, சிறப்பான உணவு...எங்கள் படகு வீடு திரும்பினோம்!


- அடுத்து பஹல்காம் 











Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1