காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்








Farah's Homestay -இல் காலை உணவை முடித்துக் கிளம்ப  10 மணிக்கு மேல் ஆகி விட்டது. அங்கிருந்து சோன்மார்க் 14 கி மீ தூரத்தில் இருந்தது.

வெளியூரில் இருந்து வரும் tourist கார்கள், சோன்மார்க் ஊர் வரை மட்டுமே செல்ல முடியும். சோன்மார்க்கில் உள்ள இடங்களை பார்க்க வேண்டும் என்றால் அந்த ஊரில் இருக்கும் யூனியன் டாக்ஸிகளைத்தான் நாம் பயன் படுத்த முடியும். இது ஒரு வகையில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பிற முதலாளிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு. 

யாசிர் எங்களுக்காக ஒரு யூனியன் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து கொடுத்தார்.


போகும்வழிகளில் எல்லாம் HAWS (High Altitude Warfare School) எனப்படும் ராணுவப்  பயிற்சி மையத்தின் வீரர்களுக்கான பயிற்சி நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ராணுவத்தின் வாகனமும் அதற்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களும்தான்.


பிரம்மாண்டமான பனி படர்ந்த மலை சாலையின் சிறிது தூரத்திலேயே நெடிதுயர்ந்து நிற்பது, சற்று திகைப்பாக இருக்கிறது. இமயத்தின் சிறப்பே அதுதான். நேபாளத்தில் பொக்காரா-வில் மிக அருகில் உயரமான இமயத்தைக் காணலாம் என்று சொல்கிறார்கள்.நாங்களும் நார்வே-யில் Gudvangen என்னுமிடத்தில் அப்படி ஒரு உயரமான மலையைப் பக்கத்தில் பார்த்த நினைவு.



சோன்மார்க்கிலேயே நில அமைப்பு மாறத் தொடங்குகிறது. அதுவரை பசுமையாக இருந்த நிலம், அரைப் பாலைவனம் போல தோற்றம் கொள்கிறது. லடாக்கிற்குப் அருகில் வந்து விட்டோம் என்பதன் அறிகுறி அது . 


எங்களுக்கு சோன்மார்க்- இல் இரண்டு பேக்கஜ் -ஐ பரிந்துரைத்தார்கள்.

ஒன்று டாக்ஸி-யில்  5 இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வார்கள்.அதற்கு 3500 ரூபாய் யூனியன் ஓட்டுனருக்குக் கொடுக்க வேண்டும். எல்லாமே பக்கம் பக்கம்தான்.மொத்தமே 16 கிமீ தூரத்திற்கு  3500 ரூபாய் அதிகம்தான்.ஆனால் வேறு வழியில்லை நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும்தான். வருடத்தில் சில மாதங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பித்தான் அவர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

மற்றொன்று Tajiwas Glacier Point. அதற்கு நாம் குதிரையில்தான் போக வேண்டும். Bajrangi Bhaijaan படம் எடுக்கப்பட்ட இடம் அங்குதான் உள்ளது.

நாங்கள் முதலில் காரில் செல்லும் இடங்களுக்குப் போக முடிவெடுத்தோம். 

முதல் இடமாகஒரு zipline. சிந்து நதியின் மேல் செல்வது. மொத்தமே 30 நொடிகளில் முடிந்து விடுகிறது. சில பேர் குலாப் ஜாமூனை மாத்திரைபோல விழுங்குவார்களே அது போல ....  த்ரில் நீடிக்கவில்லை!!





Fishpoint என்ற இடத்தில் நிறுத்தினார்கள். 10 ரூபாய் நுழைவுச் சீட்டுக்குக் கொடுக்கவேண்டும்.




சற்றே உயரத்தில் அருவி கொட்டுகிறது. இங்கு மட்டுமல்ல எங்கு பார்த்தாலும் பனி உருகி அருவி கொட்டிக்கொண்டே இருக்கிறது. பல இடங்களில் அருவி இன்னும் பனி உறைந்துபோய்தான் இருக்கிறது. இங்கு உள்ளது சிறிய அருவிதான் என்றாலும்,  நாம் அங்கு சென்று தண்ணீரைத் தொடும்படி உள்ளதுதான் அதன் சிறப்பு. தமிழ்நாட்டில் தண்ணீரை எங்கு பார்த்தாலும்,  குறிப்பாக அருவியைப் பார்த்தால்  குளிக்கத் தோன்றும்.  காஷ்மீரில்  ஒரு முறை கூட அந்த எண்ணம் எழவில்லை. அதில் வியப்பேதும் இல்லை!

உயரத்தில் அருவியின் அருகில் இருந்து 180 டிகிரி கோணத்தில் சுற்றிப்பார்க்கும் காட்சி இன்னும் அழகு.





செல்லும் வழியில் எல்லாம் சிந்து நதி ஓடிக்கொண்டே இருக்கிறது.பொதுவாக மலைகளில் செல்லும் சாலைகளெல்லாம் ஆறுகளை ஒட்டித்தான் செல்லும். எங்கள் ஓட்டுநர் அபாயமில்லாமல் உள்ள ஆற்றங்கரையில் நிறுத்தினார். அங்கு சில போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்.




அமர்நாத் குகைக்குச்  செல்லும் பக்தர்கள் / பயணிகள் இரண்டு வழிகளில் செல்லலாம். ஒன்று சோன்மார்க்கில் இருந்து, இன்னொன்று பஹ்லகாமில் (Pahalgam)  இருந்து. எங்கள் ஓட்டுநர் அமர்நாத் பாயிண்ட் -இல் நிறுத்தினார். அங்கு சில நாட்களுக்கு முன் snow இருந்திருக்க வேண்டும். இப்போது அது உருகி களிமண்ணும், பனியும் கலந்து காட்சியளித்தது. அதிலும் snow ஸ்கூட்டர் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் நிறையக் கடைகள். எல்லா இடத்திலும் maggi noodles கிடைக்கிறது. 




நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் காஷ்மீரி உடைகளை வாடகைக்கு விடுகிறார்கள். அதை உடுத்திக்கொண்டு போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் வேறு நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். எங்கு சென்றாலும் அந்த ஊரின் உடை உடுத்தி படம் எடுக்கும் கெட்ட பழக்கம் எங்களிடம் உண்டு. மணலியில், டார்ஜிலிங்கில் அந்தக் கொடுமைகளை நிகழ்த்தியிருக்கிறோம். இங்கும் அதைத் தொடர்ந்தோம். 
ம்ஹூம்... கொஞ்சம் கூட பொருந்தவில்லை!!


எங்கள் ஓட்டுநர் கொஞ்சம் ரசனைக்காரர். எங்களை இன்னுமொரு மேடை போன்ற மேடான நிலத்தில் கொண்டுபோய் இறக்கி விட்டார். அது ஒரு நல்ல view point. சமவெளி என்றாலே இரண்டு மலைகள் நடுவில் அமைந்துள்ள நிலம். அதில் ஆறொன்றும் ஓடிக்கொண்டிருக்கும். இங்கு பனிபடர்ந்த மலையடுக்குகள், ஒருபுறம் உறைந்துள்ள அருவி, அந்த அருவி வந்து சேரும் ஒரு ஆறு, நீண்டு பரந்த வெளி என்று கண்களில் பிடித்து வைக்க முடியாத காட்சி. அங்கிருந்து zojila செல்வதற்கு உள்ள கொண்டை ஊசி  வளைவுகளில் வாகனங்கள் வரிசை கட்டி சென்று கொண்டிருக்கின்றன. நாங்கள் அரை மணி நேரத்திற்கும் மேல் அங்கே இருந்திருப்போம்.





மீண்டும் சோன்மார்க் கிராமத்திற்குத் திரும்ப வேண்டும்.


ஸ்ரீநகரில் இருந்து கார்கில் செல்ல சோன்மார்க் வழியாக zoji La (Zojila Pass) ஐக் கடந்து போக வேண்டும். அதாவது சோன்மார்க்கைக்  கடந்து ஒரு மலையில் பல கொண்டை ஊசி வளைவுகள் வழியாக ஏறி  மறுபுறம் அதே போல் இறங்கவேண்டும்.  இந்தியாவில் உள்ள அபாயகரமான பாதைகளில்  அதுவும் ஒன்று.



 நேற்று மழை பெய்ததால் கார்கிலில் இருந்து வரும் பெரிய லாரிகளை எல்லாம் நிறுத்தி வைத்திருந்து, காலையில்தான்  அனுமதித்து இருக்கிறார்கள். மேலும் Zojila Pass -ஐக் கடப்பதற்கு சுரங்கம் (tunnel) அமைக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சுரங்கப்பாதை 2023 முடிவில் திறக்கப்படும் என்று எதிர் பார்க்கிறார்கள். அதுதிறக்கப்பட்டால் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பயண நேரம் குறையும். அதனால்  சோன்மார்க் -இல் மிகுந்த போக்குவரத்து நெரிசல். 





நெடுநேரம் நெரிசலில் நிற்க வேண்டியதாயிற்று. மதிய உணவை சாப்பிட்டு முடிக்கவே 4:30 மணி ஆயிற்று. 

அன்று இரவுக்கு ஸ்ரீநகரில் படகு வீடு ஒன்றை முன் பதிவு செய்திருக்கிறோம். இதற்குப் பிறகு தஜிவாஸ் (Tajiwas Glacier Point) சென்றால் மீண்டும் ஸ்ரீநகர் போய் அங்கு check-in செய்ய முடியாது.  காரணம் என்னவென்றால் சிறிய படகு ஒன்றில்தான் படகு வீட்டுக்குப் போக முடியும். அந்த படகுச் சேவை ஒன்பதரை மணிக்குமேல் இருக்காது. இதனால் (கனத்த மனதுடன் !) தஜிவாஸ் கைவிடப்பட்டது. 

ஸ்ரீநகர் ஒரு பழைய மாநகரம். சாலைகள் சிறியவை. டால் ஏரியைச் சுற்றியும் மிகுந்த போக்குவரத்து நெரிசல்.  எனவே சோன்மார்க்கில் இருந்து ஸ்ரீநகர் டால் ஏரி  வந்து சேர இரவு ஒன்பதரை மணி ஆயிற்று. 

இரவு உணவை உண்டு விட்டு மிகுந்த களைப்புடன் தூங்கச் சென்றோம்.

காஷ்மீர்ப் பயணம்- 3 : ஸ்ரீநகர்

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1