சின்ரனின் "வாக்குறுதி"
நெடு நாட்களுக்கு முன் பரிசாகக் கிடைத்த புத்தகம் "வாக்குறுதி". படிக்கப்படாமலேயே இருந்தது, ஆனால் தொடங்கியவுடன் பற்றிக்கொண்டு விட்டது.
பிரிட்டிஷ் சீன பெண் எழுத்தாளர் சின்ரன், சீனாவின் ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்களை நேர்காணல் செய்து எழுதிய புத்தகம்தான் "வாக்குறுதி". நேர்காணலுக்கான உட்கரு அவர்களின் காதல் வாழ்வு.
மிகச் சுருக்கமான கேள்விகளுக்கு கிடைக்கும் விரிவான அனுபவங்களின் பதிவு கிட்டத்தட்ட ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது.
தொடக்கத்தில் எண்பது வயது கடந்த, 63 வருடங்கள் திருமண வாழ்வை நிறைவு செய்த முதியவள் ஒருத்தி தன் கணவன் இறந்த பின் கன்னிமைப் பரிசோதனை செய்து கொள்கிறாள். அதிர்ச்சி அளிக்கும் அந்தப் பரிசோதனையின் முடிவே இந்த நூல் நம்மை உள்ளிழுத்துக் கொள்ள போதுமானது.
இப்பெண்கள் பேசுவது என்னவோ தங்கள் காதல் அல்லது திருமண வாழ்வு பற்றித்தான். ஆனால் அதனுடன் சேர்ந்து, அதன் பின்னால் விரிவது சீனாவின் நூற்றாண்டு அரசியல், சமூக, பொருளாதார வரலாறு.
வாசிக்கும்போது பல இடங்களில் தோன்றும் உணர்வு, இந்தியர்களாகிய நமக்கு கிடைத்திருக்கும் உரிமைகள் எவ்வளவு மதிப்புடையதென்பது !
கலாச்சார புரட்சி கால சீனாவில் அடக்கு முறைகள் எப்படி இருந்தன என்பதற்கு சில காட்டுகள்...
ஒரு கிராமத்தில் திருமணம் நடக்கிறது. வீட்டில் மாவோ-வின் படத்தை மாட்டி வைத்து, அவரின் வாசகங்களை எழுதி வைப்பதுதான் அப்போதைய "புரட்சி" வழக்கம். கிராமவாசி ஒருவர் தலைவர் உங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் இரவில் அனைத்தும் செய்வீர்களா என்று கேட்கிறார். நாங்கள்தான் இரவில் விளக்கை அணைத்து விடுவோமே, தலைவரால் பார்க்க முடியாதல்லவா என்று புதுமணத் தம்பதியர் பதிலளிக்கின்றனர். சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்த "புரட்சி ஜோடி" கைது செய்யப்படுகிறார்கள்.
நிச்சயமாக நம் பார்க்கும் பார்வையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நூல். எதிர் வெளியீடாக வந்திருக்கிறது.

Comments
Post a Comment