உடுப்பி பயணம் - 1




நான் 2022 இல் ஸ்பிட்டி சமவெளி போனபோதுதான் நீண்ட விடுமுறை எடுத்து தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும் இந்தியர்களைப் பார்த்தேன். ஐரோப்பாவில் அது சாதாரணம்.

மத்திய அரசுப்பணியில் இருக்கும் என் நண்பர் ஆண்டுக்கு மூன்று முறை நீண்ட பயணங்களை மேற்கொள்பவர். அவர் விடுமுறைகளைச் சேமித்து வைப்பதில்லை.வாய்ப்பு கிடைத்தால் வார விடுமுறைகளில் கூட மலையேற்றம் சென்று விடுவார். 

இன்னொருவர் Freelance சாப்ட்வேர் எழுதுபவர். 3 மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறார். 

இது போன்றவர்களை விட மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றுபவர்கள் இன்னும் பயணப் பைத்தியங்கள். 

இவர்கள் எல்லோருக்கும் இருக்கும் சில பொதுவான பண்புகளைப் பார்த்தேன். அனைவருமே  மிக மிக நேர்த்தியாகத் திட்டமிடுவார்கள், கண்டதையும் சாப்பிட மாட்டார்கள். எதையும் யோசித்துச் செலவு செய்வார்கள். ஆரோக்கியமாக இருப்பார்கள்.

 இவர்களுக்கெல்லாம் என்ன கிடைக்கிறது, ஏன் இப்படி ஊர் சுற்றுகிறார்கள் என மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கும். 

எனக்கெல்லாம் ஒரு புதிய ஊரில் நம்மை யாருக்கும் தெரியாது, நமக்கும் யாரையும் தெரியாது. நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள், மதிப்பிட மாட்டார்கள் என்னும் விடுதலை உணர்வே பயணத்தை நோக்கி உந்துகிறது. எல்லாவற்றையும் விட  புதிதாக ஒன்றை அறிதலின் மகிழ்ச்சி பயணத்தில்தான் கிடைக்கும். அதை யாரும் நமக்கு பாடமாக சொல்லித் தருவதில்லை, நாம்தான் அதில் Active Participants.


 அந்த உந்துதலில்தான் 3 மாதங்களுக்கு முன்பே காஷ்மீர் போய்விட்டு வந்ததும் காந்தி பிறந்த நாள் விடுமுறையை கணித்து மங்களூருக்கு ரயிலில் முன்பதிவு செய்து விட்டேன்.


மேற்குக் கடற்கரையில் கண்ணூர், பையனூர் வரைப் பார்த்தாயிற்று. சற்றே வடக்கே சென்றால் மங்களூருவும், உடுப்பியும். அங்கே தங்கினால் 100 -150 கிமீ சுற்றளவில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது.  சிவராம காரந்தின் "மண்ணும் மனிதரும்" நாவலில் வரும் நிலங்கள். ஆனால் ஆறேழு நாட்கள் தங்கி இருந்தால் பார்க்கலாம்.  

சென்னையில் இருந்து மங்களூருக்கு ரயிலில் பயணம் செய்தால் 16 மணி நேரம் தேவைப்படுகிறது. கதவு முதல் கதவுவரை எடுத்துக் கொண்டால் ஒருவழிப் பயணத்தில் மட்டும் 20 மணி நேரம்!  எங்களுக்கு கிடைத்தது இரண்டரை நாட்கள் தான். அதனால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் நாங்கள் எதிர்பாராத வகையில் இது ஒரு உணவுச் சுற்றுலாவாகவும் அமைந்தது. 



வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்  மங்களூருவில் காலை நுழையும்போதே சரியான மழை. மங்களூருவில் இருந்து உடுப்பிக்கு செல்ல வேண்டும். காரில் ஏறும்போதே நனைந்து கொண்டுதான் ஏறினோம். அன்று நாள் முழுதும் மழை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்தது.


விடுதிக்குச் சென்று குளித்துவிட்டு, சீக்கிரமே கிளம்பி விட்டோம். காலை உணவுக்காக MTR சென்றோம்.  99 வருடங்களாக ஹோட்டல் தொழிலில் இருக்கும் Mavalli Tiffin Rooms என்னும் MTR -தான் சாம்பார் பொடியும் தயாரித்து விற்கிறார்கள். எங்கள் விடுதியில் இருந்து ஒரு கிமீ தூரத்தில்தான் அந்த உணவகம் இருந்தது.




மங்களூர், உடுப்பியில் சிறப்பு அதன் மங்களூர் பன்ஸ் (Mangalore Buns ) என்னும் காலை உணவு. மைதா மாவில் கனிந்த வாழைப்பழம் ,சக்கரை,  சிறிது சீரகமும் சேர்த்து புளிக்க வைத்து , பூரி போல தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கிறார்கள். சுடச் சுட சாப்பிட நன்றாக இருக்கிறது. ஆறிவிட்டால் MTR என்பது MRF ஆகி விடலாம்..


உடுப்பியில் உணவில் விதிவிலக்கு இல்லாமல் எல்லாவற்றிலும் சர்க்கரை சேர்த்து விடுகிறார்கள். சாம்பார் இனிக்கிறது சரி, தயிர் வடை கேட்டால் லஸ்ஸி வடை தருகிறார்கள், என்ன நியாயமோ!




எல்லா வகை தோசைகளும் ருசியாகத்தான் இருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட தோசை எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுகிறது. ஒரு விள்ளல் தோசை எடுத்தால் கூட கையெல்லாம் எண்ணெய். இது தவிர கூடுதலாக சிறு கிண்ணத்தில் நெய் வேறு, அதையும் சேர்த்து  ஊற்றி சாப்பிடுகிறார்கள். காலை ஏழு மணிக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டால்  மதியம் 3 மணிவரை பசிக்காது, உத்தரவாதம்!


சாப்பிட்டுவிட்டு முதலில் வாரங்காவில் உள்ள சமணக் கோவில் (Kere Basadi) சென்றோம். உடுப்பியில் இருந்து 30 கிமீ தொலைவில் வாரங்கா உள்ளது. செல்லும் வழியில் குறுகிய சாலையின் இரு பக்கமும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள். அதை ரசித்துக்கொண்டே செல்லலாம். 



எனக்கு உள்ளூர சிறிய பயம் என்னவென்றால் ராஜ நாகங்களின் தலைநகரமான "ஆகும்பே" இன்னும் 25 கிமீ தொலைவில்தான் உள்ளது. பாம்புதானே, தலைநகரத்தை விட்டு துணை நகரம் வந்துவிடாதா என்ன? ஒரு போடு போட்டால் பத்து நிமிஷந்தான் ! எனக்கே தெரியும் இது ஒரு irrational fear என்று, தவிர்க்க முடியவில்லை!


வாரங்கா கோவிலின் சிறப்பு அது அமைந்துள்ள இடம்தான். மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு புறம் வயலும், சுற்றிலும் காடுகளைக் கொண்டு  ஒரு குளத்தின் நடுவில், மிக மிக அமைதியான சூழலில் அமைந்துள்ளது. கடைகளோ பெரிய மக்கள் குடியிருப்புகளோ  எதுவும் பக்கத்தில் இல்லை.







கோவிலுக்கு வயல் வழியாக நடந்து, அதன் பின்  படகில் (இரண்டு நிமிடம்) செல்ல வேண்டும். 

வாரங்காவின் இந்தக்கோவில் 12 ஆம் நூற்றாண்டில் தமிழ் திகம்பர சமணர்களால் கட்டப்பட்டது. நான்கு புறமும் வாயில்களுடன் நேமிநாதர், சாந்திநாதர் , அனந்தநாதர் மற்றும் பார்ஸ்வநாதர் சன்னதிகளைக் கொண்டுள்ளது. 


நாங்கள் சென்றிருந்த போது மழை விட்டு விட்டுப் பெய்து கொண்டு இருந்தது. அதுவும் அந்த இடத்தை இன்னும் அழகாக்கியது. திரும்பிச் செல்வதற்கு படகோட்டி எங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். அந்த இடத்தின் ரம்மியம் எங்களை அசையவிடவில்லை. அடுத்த சவாரிக்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டோம்.



இந்தக் கோவிலுக்கு எதிர் புறம், வயல் வெளியைக் கடந்து வந்தால்  நேமிநாதருக்கு ஒரு கல் கோவில் உள்ளது. அதையும் சென்று பார்த்து வந்தோம்.

ஒருவாறாக அங்கிருந்து கிளம்பி கார்க்கலா-வில் இருக்கும் புனித லாரன்ஸ் தேவாலயம் வந்தோம்.

1784 ஆம் ஆண்டில்இந்தப் பகுதியில் வசித்து வந்த கத்தோலிக்க கிறித்தவர்கள்  திப்பு சுல்தானால் சிறை பிடிக்கப் பட்டிருக்கிறார்கள். 15 ஆண்டுகள் கழித்து, திப்பு சுல்தானின் மறைவுக்குப் பின்  தப்பி வந்தவர்கள்  இந்த தேவாலயத்தைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.


 பபரந்து விரிந்த இடத்தில், மிக அழகாகக் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தில்  பல பேர் அமர்ந்து திருப்பலியில் பங்கு கொள்ளும் இடமாக உள்ளது.  உள்ளே சென்று முதல் தளத்தின் பால்கனியையும் சேர்த்துப்பார்த்தால் மதுரையின் பழைய  தங்கம் தியேட்டர் நினைவுக்கு வருகிறது.



இதன் பின் புறத்தில் படிக்கட்டுகளில் கீழிறங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதக் குளம் (miraculous pond) ஒன்று உள்ளது. குளத்தில் காசை வீசினால் கவலைகள் தீரும் என்று ஒரு நம்பிக்கை. சுத்தமாகப் பராமரிக்கப்படும் அந்தக் குளம் அழகாகவும் உள்ளது.



அதன்பின், மதிய உணவை சாகர் ஹோட்டலில் சாப்பிட்டோம். 90 ரூபாய்க்கு இந்தப்படத்தில் இருப்பது தவிர இன்னும் வேண்டுமா வேண்டுமா என்று கேட்டு வெள்ளை சோறும் கொடுக்கிறார்கள். அத்துடன்  சிறிய லட்டு அளவில் ஐஸ் கிரீமும்.   மிகக் குறைந்த விலையில் சுவையான, மிக மன நிறைவான உணவு!



மதிய உணவுக்குப்பின் கார்கலாவில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ள ஸ்ரீ சதுர்முக பஸாடி என்னும் கோவிலுக்கு போனோம். சிறு படிக்கட்டுகளில் மலை ஏறிச் செல்லவேண்டும். வாரங்கா கோவிலைப் போலவே இங்கும் நான்கு புறமும் சமமாக வாசல்கள், ஒரே போல வேலைப்பாடுகள், அமைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அழகாகச் செதுக்கப்பட்ட , சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கிரானைட் தூண்கள் கொண்டு கோவிலைத் தாங்குகின்றன. 



கோவிலின் வெளிப் பிரகாரத்தில் இருந்து ஊரைப்பார்ப்பது இலங்கையின் 'சிகிரிய'வை நினைவு படுத்துகிறது. திறந்த வெளியின் காற்றும்,  மழைச்சாரலும்  மனதைக் குளிர்விக்கின்றன.


இந்தக் குன்றின் எதிர் புறத்தில் 1 கிமீ தொலைவில் உள்ள இன்னொரு குன்றின் மேல்தான் கொம்மதேஸ்வரர் அல்லது பாஹுபலி சிலை அமைந்துள்ள கோவில் உள்ளது. இந்த மலையில் இருந்து இறங்கி, காரில் சென்று  மறுபடி அடுத்த மலை மேல் ஏறவேண்டும். 


கர்நாடகாவில் ஒரு காலத்தில் சமணம் தழைத்தோங்கி இருந்திருக்கிறது. பல ஆட்சியாளர்கள் ஆதரித்து வந்ததால், சமணம்  வளர்ந்திருக்கிறது. கார்கலாவை சமண மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். இப்போதும் பல சமண கோவில்கள் உடுப்பி சுற்று வட்டாரத்தில் இருக்கின்றன. ஆனால் அதில் பூஜை செய்பவர்கள் சமணர்களா என்று தெரியவில்லை. இந்து முறைப்படி, ஆனால் சிறிய அளவில் பூஜை, தீப ஆராதனை எல்லாம் நடக்கிறது.



பாஹுபலி கோவில் வந்தோம். மேலே செல்ல அகலமான உயரம் குறைவான படிகள் தான், ஆனால் நூற்றுக்கணக்கில் உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள, 80 டன் எடையுள்ள  42 அடி உயர சிலையைப் பார்க்க கொஞ்சம் சிரமப்பட்டால்தான் என்ன?  1432 இல் இந்தக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அநேகமாக அதே மலையில் இருந்திருக்கும் கிரானைட்டை உடைத்துதான் இந்த சிலையைச் செதுக்கி இருக்கவேண்டும். இப்போது  இந்தக்கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.



நேரில் சென்று அந்த பாஹுபலி சிலையை நேரில் பார்க்கும்போதுதான் அந்த பிரம்மாண்டம் தெரியும்.  அதன் அடியில் நிற்கும்போது நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்று தோன்றும். தொழில்நுட்பம் வளராத காலத்தில் இதை எப்படி செய்திருப்பார்கள் , நிறுத்தியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால் உண்மையிலேயே அதிசயம்தான்!



நெடு நாட்களாக எனக்கு சிரவண பெலகுலாவின் 56 அடி உயர பாஹுபலி சிலையைப் பார்க்கவேண்டும் என்று ஆசை.  அதில் 75% நிறைவேறிவிட்டது!

நேற்று ரயிலில் வந்த களைப்பு. எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். நாளை உடுப்பி கடற்கரைகள் எல்லாம் பார்க்க வேண்டும்.


-- தொடர்ந்து பார்க்கலாம் 



Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்