உடுப்பி பயணம்-2

 



பொதுவாக எந்த ஊருக்குச் சென்றாலும் அதிகாலை நடையை நான் தவற விடுவதில்லை. எப்படிப்பட்ட சாதாரண ஊரானாலும் அதிகாலையில் அது அழகாகத்தான் தோன்றும் என்பது என் கருத்து. 

சுற்றுலா என்று வந்து விட்டு  இரவெல்லாம் குடித்துவிட்டு அதிகாலையில் உறங்குபவர்கள் எதைப் பெறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் மிக மிகப்  புத்துணர்வான அதிகாலை அனுபவத்தை இழக்கிறார்கள்.


நாங்கள் தங்கி இருந்த விடுதியில் உணவு செய்து கொடுக்கும் வசதியெல்லாம் இல்லை. அதிகாலை நடையுடன் தெருவோர டீக்கடையில்  ஒரு காப்பியும் குடிக்கலாம் என்று நினைத்து நடந்தேன். உடுப்பியில் நான் அப்படி ஒரு டீக்கடையைப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் மிக அரிதாகத்தான் இருக்கும்.


உடுப்பி ஊரின் நிலஅமைப்பு கேரளா போலத்தான். அடுக்கு மாடி குடியிருப்புகள் தவிர தனி வீடுகள் எல்லாமே தேக்கு,பலா,மா உள்ளிட்ட மரக்கூட்டங்களுக்கு உள்ளே இருக்கின்றன. ஒரு சுவரைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீடுகள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன்.ம்ஹூம் அப்படி எதுவும் தென்படவில்லை.


காலை 8 மணிக்கெல்லாம் கார் வந்து விட்டது.  இன்று உடுப்பி உள்ளூர் கடற்கரைகள்தான் செல்லவேண்டும். உடுப்பியில் உள்ளூர் மட்டும் சுற்றுபவர்கள், வசதிப்பட்டால்  ஸ்கூட்டர் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். நல்ல புதிய fascino-க்களை வாடகைக்கு விடுகிறார்கள். இளைஞர்களும்,மாணவர்களும் அதில்தான் சுற்றுகிறார்கள்.  



மால்பே கடற்கரையில் "para sailing" போவதும் ,St.Mary's Island  போவதும் எங்களின் முதன்மைத் திட்டங்கள். என்ன ஏமாற்றம் என்றால், மோசமான வானிலை காரணமாக இரண்டுமே 10 நாட்களாக இயங்குவதில்லை என்று எங்கள் ஓட்டுநர் சொன்னார். 


காலை உணவுக்குபிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று கிருஷ்ணன் கோவில் காம்ப்ளெக்ஸில் இருக்கும்  மித்ர சமாஜ் சென்றோம். 70 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான "மித்ர சமாஜ்" தாங்கள்தான் மசால் தோசையைக் கண்டுபிடித்தோம் என்று சொல்கிறார்கள்.


 சிறிய உணவகம்தான் அது. நாங்கள் போகும்போது உள்ளேயும் வெளியேயும் 15 பேர் காத்துக் கொண்டிருந்தார்கள், சாப்பிடுபவர்கள் எப்போது முடிப்பார்கள் என்று பார்த்துக்கொண்டும்! நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். எந்த மேசை காலியாகும் என்று Target செய்வது, duckworth lewis முறையை விடக் கடினமாக இருந்தது.





நான் மேகலாவிடம் Woodlands போய்விடலாம் என்று சொன்னேன். அதுவும் ஒரு பிரபலமான உணவகம்தான். அங்கேயும் இதுபோலவே  கூட்டம் இருந்தால் என்ன செய்வது என்று பதில் வந்தது.இதுபோன்ற தருணங்களில் மனைவி சொல்வதைக் கேட்பவன் (மட்டுமே) புத்திசாலி!


அது மட்டுமல்ல. இப்படி கூட்டம் இருக்கும் உணவகங்களில் உணவு சுவையாக இருக்கும் என்பது ஒரு ஐதீகம்(!). இதற்கு முன் திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸிலும்,ஸ்ரீரங்கம் மணீஸ் கஃபே -யிலும் இதேபோல காத்து நின்றிருக்கிறோம். எதிர்பார்த்தது போல "மித்ர சமாஜ்" நன்றாக இருந்தது. விலையும் அதிகமில்லை.


சாப்பிட்டுவிட்டு மால்பே கடற்கரை சென்றோம். கடற்கரையை ஒட்டி பல இடங்களில் மீனை சுத்தம் செய்து வெளி நாட்டுக்கோ பிற ஊர்களுக்கோ அனுப்பும் நிறுவனங்கள் தங்கள் தொழிலகங்களை வைத்திருக்கிறார்கள்.  மீன் பிடி தொழிலாளர்கள் ஒரிசா மாநிலத்தில் இருந்து வருகிறார்களாம். அவர்களுக்கு மாதத்தின் முதல் தேதி  ஒரு நாள்தான் விடுமுறை. அன்று  அக்டோபர் 1,  ஞாயிற்றுக்கிழமை. கடற்கரையில் இந்தத் தொழிலாளர்கள் நிறையப் பேரைக் காண முடிந்தது.


கடற்கரை அவ்வளவு சுத்தமாக இல்லை. ஆனால் மால்பே ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றுக்கும் கடலுக்கும் இடையில் கற்பாறைகள் மேல் தளம் போட்டு "Sea Walk " என்று பாதை அமைத்திருக்கிறார்கள். அது அழகாக இருக்கிறது. வெயில் இல்லை, வானம் மேக மூட்டத்துடன் ஒரு இதமான சூழலைக் கொடுத்திருந்தது. "Para Sailing"  இல்லாததுதான் ஒரு குறை.



அதன்பின் அங்கிருந்து 10 கிமீ தூரத்தில்  இருக்கும் Delta Point கடற்கரை போனோம். காரில் செல்லும்போது ஒரு புறம் சுவர்ணா ஆறு, மறுபுறம் கடல் என்று வந்து கொண்டே  இருக்கும். ஆற்றின் கரையில் நெருக்கமாக தென்னை மரங்கள், கடற்கரையை ஒட்டி தென்னை , தேக்கு , பலா,மா வாழை மரங்கள் அல்லது மரங்கள் கொண்ட வீடுகள். 





போகப் போக ஆற்றுக்கும் கடலுக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்து டெல்டா முனையில் ஆறு கடலில் கலக்கிறது.  தென்னந்தோப்புகள் வழியாகவே கடற்கரைக்குச் செல்ல வேண்டும். அங்கே ஒரு சிறிய வீட்டின் முன்புறத்தில் டீக்கடை. மரத்தின் கீழே நாற்காலி போட்டு ஆற அமர டீ குடிக்கிறார்கள். நாங்களும் குடித்தோம்!


கடையை ஒட்டி ஒரு சிறு கிணறு. கிணற்றில் 10 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் இருக்கிறது. நாங்களும் கிணற்றில் நீர் இறைத்து குடித்தோம்.


இந்தக் கடற்கரையை மேலே இருந்து aerial view -இல் பார்க்க வேண்டும் (பார்க்க: வீடியோ).  சில பேர் Drone வைத்து படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.


சுவர்ணா ஆறு பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்கிறது. கொஞ்சநேரம் கடற்கரையிலும் , கொஞ்சநேரம் ஆற்றங்கரையிலும் செலவழித்தோம்.


பக்கத்தில் இருக்கும் சிறிய கடையில்  சுடச் சுட மீன் பொரித்துக் கொண்டிருந்தார்கள்.  அங்கேயே மதிய உணவு மலபார் சிக்கன் பிரியாணியும், மீனும். 


எங்கள் காரின்  ஓட்டுநர் எங்களை கெம்மன்னு-வில் இருக்கும் தொங்கு பாலத்தைப்பார்க்க அழைத்துச் சென்றார். தொங்கு பாலம் என்பது ஸ்வர்ணா ஆற்றின் நடுவில் தூண்கள் இல்லாமல் இரும்புக் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டது. நாங்கள் சென்றபோது பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கவில்லை. போட்டோக்கள் மட்டும் எடுத்துக்கொண்டோம். 



பாலத்துக்குப் போகும் சிறிய ஒற்றை சாலையில் கிட்டத்தட்ட மூன்று கிமீ  தொலைவுக்கு சுற்றிலும் தென்னை மரங்கள் . ஆற்றோரத் தென்னையை யாரும் நட்டு வளர்ப்பதில்லை. மரத்தில் இருந்து விழும் நெற்றுக் காய்களே  மீண்டும் முளைத்து மரமாகின்றன. பக்கத்தில் சில வீடுகள் மரங்களுக்குள் மறைந்து இருக்கின்றன. கூட்டமாக வந்து, ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து   4 நாட்கள் ஆக்கிப் பொங்கி சாப்பிட்டுப் போகலாம் என்று ஆசையைத் தூண்டும். ஒரு நாள் கிடா விருந்துக்கும் ஏற்ற இடம் தான். (அடச்சே!... இப்போவும் சாப்பாடுதானா!)



அப்படியே அங்கிருந்து கிளம்பி கிருஷ்ணன் கோவில் வந்தோம். கோவிலுக்குள் செல்ல நீண்ட வரிசை இருந்தது. கூட்டத்துக்குள் சென்று உள்ளே மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அங்கிருந்த கடை வீதிகளை மட்டும்  பார்த்துவிட்டு வந்தோம். அந்த வீதியில் மட்டும் ஏழெட்டு  மடங்கள், அவற்றின் பழைய கட்டடங்கள்.அந்த வீதியின் அழகே அதுதான்!


ஏனென்று தெரியவில்லை, உடுப்பியின் கிருஷ்ணன் கோவில் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. அலங்கரிப்பட்ட கிருஷ்ணனின் தேரைப் படத்தில் பார்த்து, வேறு எதையோ எதிர்பார்த்து இருந்திருக்கிறேன் போல.



மீண்டும் விடுதிக்குத் திரும்பி கொஞ்ச நேரம் ஓய்வு. இரவு உணவுக்கு டயானா-வுக்குப் போனோம். பல நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்ட இடம். நாங்கள் போனபோது அவ்வளவாக கூட்டம் இல்லை. இந்த ஹோட்டலின் சிறப்பு அதன் Gudbud , நம்ம ஊர் Falooda போல. 




நாங்கள் முதலில் Cutlet -கேட்டோம். Cutlet மிகச் சிறப்பு, வெளிப்புறத்தை மொறு மொறுவென கொணர்வதற்கு மெனக்கிட்டு இருக்கிறார்கள். பூரி மசால் கூட நன்றாக இருந்தது (திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸின் பூரி-மசால் அளவுக்கு இல்லை!)


இட்லி roast - என்று ஒரு பதார்த்தம் இருந்தது, சரி அதையும் என்னவென்று பார்க்கலாம் என்று கொண்டு வரச் சொன்னோம். நாங்கள் எதிர்பார்த்ததோ  சில்லி இட்லி - போல ஒன்றை , ஆனால் வந்தது Fish Finger அல்லது Hash Brown போல இருந்தது. வியப்பு கலந்த மகிழ்ச்சி !




Gudbud  கேட்கவே வேண்டாம். சப்தமே இல்லாமல், கருமமே கண்ணாக சாப்பிட்டு முடித்தோம். மொத்த உணவகத்திலும் Cutlet, Gudbud இரண்டும் இல்லாத எந்த மேசையும் இல்லை. 


அடுத்த நாள் மதியம் மங்களூரில் ரயிலைப் பிடிக்க வேண்டும். காலை உணவுக்குப்பின் உடுப்பியில் இருந்து கிளம்பி மங்களூர் போகும் வழியில் காப் கடற்கரை (Kaup Beach )பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். இன்று மழை மேகங்கள் எதுவும் இல்லாமல் வெயில் கொளுத்தியது.






ஒரு குன்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கம்தான் அதன் சிறப்பு. 1901 இல் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் அது. மேல செல்ல படிக்கட்டுகள் உள்ளன. 




அந்தக் குன்றின் மேல் இருந்து கடற்கரையைப் பார்ப்பது சிலருக்கு கேரளாவின் வர்க்கலா-வை நினைவு படுத்தலாம்.







Kaup -இல் இருந்து அங்கிருந்து கிளம்பினால் இன்னும் நேரம் இருக்கிறது.  எனவே மங்களூரின் மிக முக்கியமான இடமான "Pabbas" போனோம். Pabbas ஐஸ் கிரீம் பிரியர்களுக்கு மிகவும் பரிச்சயமான , பிடித்த இடம்.  


ஐஸ் கிரீமில் இத்தனை வகைகளை ஒரே இடத்தில்  இங்குதான் பார்க்க முடியும். பெரிய இடம் தான்.  எங்களுக்கு உடனே  மேசை கிடைத்துவிட்டது. ஆனால் பின்னால் வந்தவர்கள் பலர் காத்திருந்துதான் இடம் பிடித்தார்கள். மாலையில் வந்தால் இங்கு இடம் கிடைப்பது மிகச் சிரமம் என்று சொன்னார்கள்.




நாங்கள் Parfait -உம் Tiramisu -உம் சொன்னோம், எல்லாம் படத்தை பார்த்துதான். Tiramisu - காபியின் சுவையுடன் இருக்கும் ஒரு ஐஸ் கிரீம் தொகுப்பு.  Parfait - என்பது பழங்கள், உலர் பழங்கள், Nuts, என்று பல அடுக்குகளாக இருக்கும் ஒரு ஐஸ் கிரீம் உணவு. Parfait, Gudbud எல்லாமே Falooda -வின் குடும்பம் போல. ஆனால் ஒவ்வொன்றும் வேறு வேறு சுவையுடன் இருக்கிறது.



MTR , மித்ரா சமாஜ் , டயானா  என்ற உணவுப் பயணத்தில் Pabbas  ஒரு Dessert -ஆக அமைந்தது.


மதிய உணவை woodlands -இல் வாங்கிக்கொண்டு சென்னை மெயிலைப் பிடிக்கக் கிளம்பினோம். 


ரயிலில் வாசலுக்கு அருகே நின்று பார்த்துக்கொண்டே வந்தேன். நாங்கள் பார்த்ததில் உடுப்பியில் சுவர்ணா , மால்பே ஆறுகள் தொடங்கி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் பெரும்பாலும் இரு கரையும் தொட்டு நிறைந்து ஓடுகின்றன; கடலைச் சேருகின்றன. மங்களூரில் இருந்து தெற்கு நோக்கி ரயிலில் வரும்போது காசர்கோடு வருவதற்குள் செம்மண் நிறத்தில் மழை வெள்ளத்தை கடலில் சேர்க்கும் அத்தனை ஆறுகள்.  

அதைப்பார்க்கும்போது இயல்பாகவே ஒரு சென்னை குடிமகனுக்கு என்ன ஏக்கம் இருக்குமோ அந்த ஏக்கம்தான் எனக்குள்ளும்!

- உடுப்பி பயணம் நிறைவுற்றது 

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1