பயணங்களில் மனிதர்கள்-1 !

 எப்போது கேரளா சுற்றுலா சென்றாலும் ஒரு நல்ல மனிதரை (நல்ல மனிதரை எப்படித் தீர்மானிப்பது?) ... சரி...பணத்துக்கு ஆசைப்படாத ஒரு மனிதரைப் பார்த்து விடலாம்.


2019 டிசம்பர் மாதத்தில் கண்ணூர் பயணம். ஆறு குடும்பங்களில் இருந்து மொத்தம் 20 பேர் சென்ற பயணம்.அந்தப் பயணம் பற்றி தனியாக எழுத வேண்டும்.


ஒருநாள் காலை "ஆராளம்" காட்டுக்குள் போய்விட்டு நீண்ட பயணத்துக்குப் பின்  பராசனிக்கடவு என்ற ஊரில் இருக்கும் முத்தப்பன் கோவில் சென்றோம். புகழ் பெற்ற "தெய்யம் விழா" இந்தக் கோவிலில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு. உத்தம வில்லன் படத்தில் கூட கமல் "தெய்யம்" ஆடுவார்.





முத்தப்பன் ஒரு புரட்சி தெய்வம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சண்டையிட்ட தெய்வம். இந்தக் கோவிலில் வேகவைத்த சுண்டலும் , டீயும், தேங்காய் சில்லும்  பிரசாதமாகக்  கொடுக்கிறார்கள். 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கூட ஒரு முத்தப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை மாதங்களில் சென்னையிலும் கூட தெய்யம் விழா நடக்கலாம்.. முகநூலில் அல்லது இணையத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டு நீங்கள் செல்லலாம்.


கோவிலில் தினமும் ஆட்டம் நடக்கிறது. அது தெய்யமா என்று தெரியவில்லை . நாங்கள் போன போதும் ஆட்டம் ஒரு கூத்துப் போல நடந்து கொண்டிருந்தது.


கோவிலை சுற்றிப்பார்த்து விட்டு களைப்புடன் ஒரு சிறிய பெட்டிக்கடைக்கு போனேன் . கடையில் ஒரு நடுத்தர வயதில் கணவனும் மனைவியும் இருந்தார்கள். முதலில் ஒரு பாட்டில் தண்ணீர் மட்டும் வாங்கி கொண்டேன். பிறகு அங்கு எலுமிச்சம்பழம் இருப்பதை பார்த்துவிட்டு ஒரு உப்புப் போட்ட லெமன் ஜூஸ் கேட்டேன். பழம் பிழிந்து உப்புப் போட்டதும்  நான் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றிக்கொண்டேன். 


ஒரு எலுமிச்சம்பழம், சிறிது உப்பு - இதற்கு எவ்வளவு காசு வாங்குவது என்ற குழப்பம் அந்த பெண்ணுக்கு. கணவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, நீண்ட யோசனைக்குப்பின் ஐந்து ரூபாய் மட்டும் வாங்கி கொண்டார்கள் .


நான் கடையில் இருக்கும்போதே மேகலாவும் வந்துவிட, அவளும் நான் சொன்னது போலவே ஒரு ஜூஸ் கேட்டாள். கடைக்காரர் இந்த முறை ஜூஸ்-க்கு காசு வேண்டாம் என்றார்.  எனக்கு பணம் கொடுக்காமல் பொருள் கொள்வதில் உடன் பாடில்லை. மேலும் இது வணிகம் ... காசு வாங்காமல் எப்படி கடை நடத்துவார். கடையிலும் பெரிய வியாபாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கடைக்காரர் அதற்குப் பணம் வாங்கி கொள்ள முற்றிலும் மறுத்துவிட்டார்.


அவரை வற்புறுத்த முடியவில்லை. நான் பட்ட கடனை ஈடு செய்யும் நோக்கில்,மேலும் இரண்டு தண்ணீர் பாட்டில்கள்  வாங்கிக்கொண்டேன். நான் ஏன் வாங்குகிறேன்  என்று கடைக்காரரும்  புரிந்து கொண்டார்.


 அதன் பின் ஒரு சிறு உரையாடல் தொடங்கியது. .  அவர் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டார்.  நாங்கள் எங்களை பற்றி சொல்ல,  அவரும் அவரைப் பற்றி சொன்னார். சிறிது நேரத்தில் மனத்தால் நெருங்கி விட்டார்.


அவர் 20 வருடங்கள் முன் சென்னையில் சோனி சர்வீஸ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். சில ஆண்டுகளில் அவரின் கண் பார்வை குறைந்து கொண்டே வந்து, இப்போது கண் தெரியாமல் ஆகி விட்டிருக்கிறது. அவர் சொன்ன பிறகுதான் நாங்கள் இருவரும் அதைக் கவனித்தோம் . இப்போது அவர் மனைவியின் உதவியுடன் இந்த சிறு கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். எதோ வாழ்க்கையை சமாளித்து ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்று மட்டும் புரிந்தது.


அதற்குள், நாங்கள் வந்த வேன் புறப்பட்டுவிட்டது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்களைத் தேடி மகிழ்நன் வந்து விட்டான். நான் அவனைக் கடைக்காரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவர் அவனின் கைகளைப் பிடித்துக்கொண்டார், எழுந்து நின்று  ,தலையை, கன்னங்களைத் தடவி அவனைப் பற்றி விசாரித்தார். 


கை நிறைய சாக்கலேட்டுகளையும், தேன் மிட்டாய்களையும் எடுத்து அவன் கைகளில் கொடுத்தார். மகிழ் ஒன்றும் புரியாமல் எங்களைப் பார்த்தான். நான் அவனை வாங்கி கொள்ளச் சொன்னேன்.


நாங்கள் கையில் வாங்கிய பொருட்கள், கொடுத்த பணம் எல்லாம் சேர்த்தால் கடைக்காரருக்கு மிக மிகக் குறைவான லாபமே  கிடைத்திருக்கும். ஏன் அவருக்கு நஷ்டமாகக் கூட இருக்கலாம்!


சொல்லவே தேவையில்லை, இந்த முறை நான் அதற்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூட இல்லை !

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1