பயணங்கள் தொடர்கின்றன - 8 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) Final - காசா (Kaza) - சந்திரதால் - மணாலி

 ஆறாம் நாள் காலை காசா-வில் இருந்து காலை 9:00 மணிக்குக் கிளம்பிவிட்டோம்.  காஸாவில் இருந்து இன்னும் கொஞ்ச தூரம் போய் விட்டால் மணாலி வரும்வரை எந்த தொலைபேசி சேவையும் இருக்காது. குறைந்தபட்சம் 27 மணி நேரம் நம்மை யாரும் தொடர்பு கொள்ள முடியாது.

முதலில் கீ பௌத்த மடாலயம் (Key Monastery).  ஆயிரம் வருடங்கள் பழமையான ஒன்று. ஸ்பிட்டி சமவெளியில்,  மிகப் பெரிய திறந்த வெளிக்கு நடுவே, சற்றே உயரமான குன்றின் மேல் அமைந்துள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரு castle - போலத் தெரியும்.

பல்வேறு படையெடுப்புகளால் அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டது இந்த மடாலயம் .  உள்ளே நுழைந்தவுடன் எல்லோருக்கும் ஒரு பால் இல்லாத தேநீர் - (cinnamon பட்டை தூக்கலாகப் போட்டு!) கொடுக்கிறார்கள்.  உள்ளே வெளிச்சம் குறைவாக இருக்கிறது. நாங்கள் போன நேரத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது, அதனால் அந்த இடத்துக்குள் மட்டும் நாங்கள் அனுமதிக்கப் படவில்லை.




வெளியில் உள்ள நவீன கட்டடங்கள் தவிர உள்ளே இருக்கும் அறைகள் எல்லாம் மலையைக் குடைந்து உருவாக்கி இருக்கலாம். உள்ளே துறவிகள் தனியே அமர்ந்து தியானத்தில் ஈடுபடும் இடங்கள் எல்லாம் இன்னும் இருட்டாக இருக்கிறது. ஒரு துறவிக்கு  3 X 3 இடந்தான் இருக்கும். இந்த  மடாலயம் ஜெயமோகனின் "தங்கப் புத்தகம்" சிறுகதையை நினைவு படுத்துகிறது. 

வெளியில் இளந்துறவு மாணவர்களுக்கு, அவர்களின் பாரம்பரிய உடையிலேயே  அணிவகுப்பு பயிற்சி நடந்து கொண்டிருந்தது. 


வெளியே வந்து பக்கத்தில் உள்ள மலையில் சற்று உயரத்தில் ஏறிப் பார்த்தால்,  மடாலயம் இன்னும் அழகாகத் தெரிகிறது.





அங்கிருந்து கிளம்பிச் செல்லும்போது, வழியில்  நரி ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு மலை மேலே சென்று கொண்டிருந்தது, நாங்கள் இந்தப் பயணத்தில் முதன் முதலில் பார்க்கும் காட்டு விலங்கு. அது தவிர, மொத்தப் பயணத்திலும்  யாக் என்கின்ற காட்டு மாட்டையும், மான்களையும் மட்டுமே பார்த்தோம்.

அடுத்து சீச்சாம் பாலம் (Chicham Bridge), ஆசியாவின் மிக உயரமான பாலம் (கடல் மட்டத்தில் இருந்து 13596 அடி) என்ற பெருமை பெற்றது. கிப்பர் (Kibber) மற்றும் லோசர் (Losar ) கிராமங்களை இணைக்கும் இந்தப் பாலம் 40 கிமீ சுற்றிச் செல்வதைக் குறைக்கிறது. பாலத்தில் இருந்து கீழே பார்த்தால் 1000 அடிப் பள்ளம்.





பொதுவாக இது போன்ற பயணங்களில் நாம் எந்த விதமான தடங்கல்கள் மற்றும் மாற்றங்களுக்குத் தயாராக இருக்கவேண்டும். இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை என்றுதான்  நினைத்துக் கொண்டிருந்தோம். 

 சீச்சாம் பாலத்தில் நின்று கொண்டிருக்கும்போதுதான்  எங்கள் வேனின் டயர் பஞ்சர் ஆகியது. எங்கள் வேன் ஓட்டுநர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்; 60 வயது இருக்கும்.  ரொம்பப் பேசாதது மட்டுமல்ல,  எந்த ஒரு சூழலிலும்   கூல்-ஆக இருப்பவர். அவருடைய அதீத தன்னம்பிக்கையில் ஸ்டெப்னி ஏதும் இல்லாமலே ஆறு நாட்களும்  வந்திருக்கிறார். வேனின் பின்புறக் கதவில் ஒரு டயர் இருந்தது, அதுதான் ஸ்டெப்னி என்று நாங்கள் எல்லோரும் அப்பாவியாக நம்பிக்கொண்டிருந்தோம். அதை  சும்மா ஷோ-வாக மட்டும் கொண்டு வந்திருக்கிறார்.

இப்போது இருக்கும் ஒரே வழி மீண்டும் வந்த வழியே காசா சென்று, அதே டயரை சரி செய்து வருவது. எங்களை எல்லாம் அங்கேயே  இறக்கி விட்டு, ஓட்டுநர் மட்டும் வேனுடன் காசா கிளம்பி சென்றார்.  

சீச்சாம் பாலத்தின் அருகே வேன் திரும்பி வருவதற்காகக் காத்திருந்தோம். மதியம் 12 மணி வெயில் நேரடியாக விழுந்தது. மலை மேலே இருக்கும்போது புற ஊதாக் கதிர்கள் (ultra violet  rays) அதிகம் வடிக்கட்டப்படாமல் விழுவதால், உடலின் தோல் கருத்து விடும். அதனால் Sun Screen போட்டு வரச் சொல்லி அறிவுறுத்தி இருந்தார்கள். நானும் அதை கடைபிடித்திருந்தேன் தான். ஆனால் எங்கெங்கெல்லாம் சரியாக அந்த cream படவில்லையோ, அங்கெல்லாம் முகம் கருத்து விட்டது (அது சரி, கருப்பாகிறதுக்கு இன்னும் என்ன இருக்கு!)
.

அங்கே பாலத்தருகேயே, பழைய பேருந்து ஒன்றை மாற்றியமைத்து ஒரு நடமாடும் உணவகம் இருந்தது. மதிய உணவாக அங்கே மேகி நூடுல்ஸ் -உம், ஆம்லெட்டும்.




2 மணி நேரம் கழித்து எங்கள் வேன் டயர் சரி செய்யப்பட்டு வந்தது. சீச்சாம் தாண்டிய சிறிது நேரத்தில் ஜியோ உட்பட எல்லா டெலிபோன் சேவையும் வேலை செய்யாது என்பதால் எல்லோரையும் வீட்டிற்குப் பேசிக்கொள்ளச் சொன்னார்கள்.

 சந்திர தால் போக வேண்டும் என்றால், மாலை 5:30  மணிக்குள் போலீஸ் சோதனைச் சாவடியைக் கடக்கவேண்டும். ஏற்கனவே 2 மணி நேரம் தாமதம்.  இந்த முறை விரைவாகவே வண்டியைக் கொண்டு சென்றார் எங்கள் ஓட்டுநர்.  சந்திர தால்  வருவதற்கு முன்பிருந்தே கூடாரங்கள் கொண்ட ஒரு சில ரிசார்ட்டுகள் வரத் தொடங்கின.




சோதனைச் சாவடியை சரியான நேரத்தில் கடந்து வந்து விட்டோம். ஆனால் அங்கிருந்து சிறிது தூரம் சென்றவுடன்  மறுபடியும் அதே டயர் பஞ்சர். அதே போல ஸ்டெப்னி இல்லை. 


வேனை விட்டுக் கீழே இறங்கினால் 5 டிகிரிக்கும் குறைவான குளிர். எங்களுடன் வந்த எல்லோரும் trip captain -இடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஒரு இளம் வழக்கறிஞர் நுகர்வோர் நீதிமன்றம் செல்லப்போவதாக எச்சரித்தார். எதற்கும் கலங்காத எங்கள் ஓட்டுநர் இறங்கி வேகமாக சென்றார். வரும் வழியில் ஒரு வேனை மடக்கி, அதன் ஓட்டுனருடன் பேசி ஒரு ஸ்டெப்னி-யை வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.  பெரும்பாலான ஓட்டுனர்கள், மணாலியைச் சேர்ந்தவர்கள்,  ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் தான் போல!

சந்திர தால் வருவதற்கு மாலை ஆறரை மணி ஆயிற்று. வேனில் இருந்து இறங்கி அரை கிலோமீட்டர் நடந்து சென்றால் மிக சுத்தமாகப் பேணப்பட்டு வரப்படும் சந்திர தால் ஏரி. 




3 இடியட்ஸ் (தமிழில் நண்பன்) படத்தின் கிளைமாக்ஸில் லே லடாக்கில் உள்ள ஒரு அழகான ஏரியைக் காண்பிப்பார்கள், அது நீல நிறத்தில் இருக்கும். அதே போல ஆனால் சற்றே நீலம் கலந்த  பச்சை நிறத்தில் சந்திர தால் !

அதன் பின்னால் பனி படர்ந்த பல மலையடுக்குகள். ஏதோ ஏணி போட்டு ஏறினால் தொட்டு விடும் தூரத்தில் மேகக்கூட்டங்கள்! சலிக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.









இங்கிருந்துதான் பாண்டவர்களில் மூத்தவரான  தர்மரை  இந்திரன் வந்து  சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் என்று நம்பப்படுகிறது. அதை அறிவிப்புப் பலகைகளில் எழுதியும் வைத்திருக்கிறார்கள்.நான் என்ன நினைக்கிறேன் என்றால் இதை விட அழகான இடங்கள்  சொர்க்கத்தில் இருப்பதாக இந்திரன்  உறுதியளித்தபின்தான் அவர் மனம் மாறி இங்கிருந்து சென்றிருக்கக் கூடும்!

இரண்டு இடங்களில் டயர் பஞ்சர் தாமதம் இல்லை என்றால், இங்கே இன்னும் அதிக நேரம் இருந்திருக்க முடியும். குளிர் அதிகமாகிக் கொண்டே வந்தது. அந்த இடத்திலும் ஒரு டீக்கடை.  குளிருக்கு இதமாக ஒரு டீ குடித்தோம் . 

அங்கிருந்து கிளம்பி கூடாரம் வந்து சேர எட்டு மணி ஆயிற்று. இரவு எளிமையான உணவுதான் என்றாலும் சுவையாக இருந்தது. இன்று மட்டும் அசைவம் இல்லை (அசைவம் என்ன அசைவம், கோழிக்கறிதான் அங்கு அசைவம். மீன், நண்டு, இறால், கருவாடு, ஆடு, மாடு, பன்றிக்  கறி  எல்லாம் அசைவம் என்று அவர்களுக்குத் தெரியாது போலும் !)


கூடாரத்தில் ஒரே ஒரு விளக்குதான். சார்ஜ் போடக்கூட முடியாது என்று சொல்லி விட்டார்கள். நாங்கள் தங்கியிருந்த எல்லா இடங்களையும் விட இங்குதான் குளிர் அதிகம். பூஜ்யத்துக்குக் கீழே சென்றிருக்க வேண்டும்.
போர்வையை மூடிப் படுத்ததுதான் தெரியும். இருந்த களைப்பில் காலை 7 மணிக்குத்தான் எழுந்தேன்.

காலை இன்னும் ஒரு ஆச்சர்யம்!  எங்களுக்காகவே பனி பெய்யத் தொடங்கியது! ஆறரை வருடங்களுக்குப் பிறகு பனி பெய்வதைப் பார்க்கிறேன். எங்களில் உடன் வந்த பலருக்கும் அதுதான்  முதல் snow fall experience.



இன்று பயணத்தின் கடைசி நாள். இங்கிருந்து மணாலி சென்று, அங்கிருந்து டெல்லிக்குப் பேருந்து என்பது திட்டம். 

 பாதி வழியெங்கும் பனி பெய்து கொண்டே வந்தது.பயண வழியெங்கும் மீண்டும் வகை வகையான  நில அமைப்புகள். 
நான் சொல்வதை விட இந்த முறை காஸாவில் இருந்து மணாலிக்குச் செல்லும் ஒரு Youtube வீடீயோவை இணைத்துள்ளேன். miss பண்ணாமல் பாருங்கள்! 





மணாலியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி. மொத்த டெல்லியும் சண்டிகாரும் அங்கேதான் வந்து குவிந்து விட்டதைப்போல. வேனில் வந்தவர்களில் 3-4 பேர் மணாலியில் இறங்கிக் கொண்டார்கள்,தொடர்ந்து வந்த  bikers எல்லோரும் மணாலியில் தங்கி காலை சண்டிகர் போவார்கள். ஆக அவர்களும் விடை பெற்றுக்கொண்டார்கள்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கிளம்பி காலை 8 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தோம். எல்லோரும் உருக்கமாக விடை பெற்றுக்கொண்டார்கள்.நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் பயண நினைவுகள்  இனிய அனுபவமாக எங்கள் அனைவருக்கும் என்றென்றும் இருக்கும்!


உங்களில் நிறையப்பேர் ஸ்பிட்டி வேலி செல்வது எப்படி என்றும், செலவு விபரங்கள் பற்றியும் கேட்டிருந்தீர்கள் . அடுத்து தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்.

ஸ்பிட்டி பயணத்தை இத்துடன் முடித்துக்கொள்வோம். மற்றபடி, பயணங்கள் தொடரும். அத்துடன், இதற்கு முன்பு சென்ற இடங்கள் பற்றியும் எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1