பயணங்கள் தொடர்கின்றன - 7 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 4 - காசா (Kaza) - ஹிக்கிம் (Hikkim), லாங்சா (Langza), காமிக்(Komic)

ஐந்தாம் நாள் போகத் திட்டமிட்ட இடங்கள் எல்லாம் காசாவைச் சுற்றியுள்ள இடங்கள்தான். அதிக தூரம் போக வேண்டியதில்லை. கொஞ்சம் நிதானமாகக் கிளம்பலாம்.

காசா சற்றே பெரிய ஊர். எங்கள் பயணத்தில் கடைசி ATM இங்குதான் உள்ளது. அதிலும் பல நேரங்களில் பணம் தீர்ந்து போய்விடும் என்றார்கள். நாங்கள் பார்க்கும்போதே பணம் எடுப்பதற்குப் பல பேர் வரிசையில் நின்றார்கள். எங்கள் பயண முகவர் சொன்னபடி முதலிலேயே cash எடுத்துச் சென்றுவிட்டோம்.

காசாவில் மற்றொரு பிரச்சினை Power Failure. எப்போதாவதுதான் சப்ளை இருக்கிறது. அதற்குள் ஹீட்டர் போட்டு குளித்துக் கொள்ளவேண்டும். மொபைல் மற்றும்  பவர் பேங்க்- ஐச் சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். 
காஸாவில் இருந்து கிளம்பிய பின் இரண்டு நாட்கள் பவர் பேங்க் இல்லாமல் சமாளிக்க முடியாது.

காசா வரை ஏர்டெல், ஜியோ இரண்டும் வேலை செய்கின்றன. வோடபோன் முதல் நாளில் இருந்தே வேலை செய்யவில்லை. எங்கள் பயண முகவர் சொன்னது போல நான் கூடுதலாக ஒரு BSNL சிம் வாங்கிக்கொண்டு சென்றேன்.அதன் Voice Network மட்டுமே வேலை செய்கிறது, Data - ம்ஹும் ...சுத்தம்!

இன்று முதலில் ஹிக்கிம் - கிராமம். காஸாவில் இருந்து 15 கிமீ மேலே சென்றால் ஹிக்கிம். இதன் சிறப்பு இங்கிருக்கும் தபால் நிலையம். இதுதான் உலகின் உயரத்தில் இருக்கும் தபால் நிலையம் என்று விளம்பரம் செய்கிறார்கள்.  முதலில் கிராமத்தில் இருந்த தபால் நிலையத்தை இப்போது சாலையின் அருகிலேயே மாற்றி நவீனப்படுத்தி இருக்கிறார்கள். அங்கு பெரும் கூட்டம். எல்லோரும் தபால் அட்டைகளை வாங்கி நண்பர் உறவினர்களுக்கு அனுப்புகின்றனர். அங்கு வேலை செய்யும் இரண்டு பேரும் உள்ளூர்காரர்கள் போல இருக்கிறார்கள். பெரும்பாலும் தற்காலிக அல்லது கான்ட்ராக்ட் பணியாளர்களாக இருக்கக்கூடும்.  நானும் 10 அட்டைகளை வாங்கி அனுப்பினேன். 







மேலே இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் காமிக் கிராமம். இதற்கும் உலகில் காரில் செல்லக்கூடிய உயரமான கிராமம் என்று விளம்பரம் உண்டு. இங்கும் ஒரு பழமையான புத்த மடாலயம் உண்டு. தாபோ புத்த மடாலயம் அளவு பழமையானது அல்ல. ஆனால் நன்றாகப் பராமரிக்கிறார்கள். 






சென்ற ஆண்டு World’s highest motorable village Komic achieves 100% Covid vaccination என்று ஒரு செய்தி பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது, இந்த கிராமத்தின்  மொத்த மக்கள் தொகை 114 பேர் என்று, சரிதான்!



இந்த கிராமத்தில் ஒரு சிறிய உணவகம் உண்டு. நாங்கள் சென்ற நாளில் சரியான கூட்டம் இருந்தது. எது கேட்டாலும் தாமதமாகும் என்றார்கள். மலைப்பயணத்தில் எங்கும் எந்த உணவும் தயாராக இருக்காது. நீங்கள் கேட்ட பிறகுதான் செய்யத் தொடங்குவார்கள். தேநீர் முதல் ஆலு பரோட்டா வரை எல்லாமே அப்படிதான்.





தாமதமாகும் என்று சொன்னதால் சாப்பிடவில்லை. ஏதேனும் குடிக்கலாம் என்று Seabuckthorn Tea சொன்னேன். இந்த ஊரின் சிறப்பு பானம் என்றால் Seabuckthorn Tea  என்று சொல்லலாம். Seabuckthorn ஒரு பெர்ரி வகைப் பழம். இதனுடன் தேநீர் சேர்த்து சூடாகக் கொடுக்கிறார்கள். Lemon Tea - ஐ போல ஆனால் அதை விட மிக நன்றாக உள்ளது! அடுத்த முறை  வாய்ப்பு கிடைத்தால் பழச்சாறாக குடிக்கவேண்டும். நண்பர் பழச்சாறை ருசி பார்த்துவிட்டு சிலாகித்தார்!

காமிக் -இல் இருந்து நேராக லாங்சா.  

ஸ்பிட்டி சமவெளியில் மிக அழகான இடம் எது என்று என்னைக் கேட்டால் நான் லாங்சா என்றுதான் சொல்வேன். பகலிலேயே அட்டகாசமான அழகு. பிரம்மாண்டமான புத்தர் சிலை சமவெளியை நோக்கி அமர்ந்து உள்ளது.  எல்லாப் பக்கங்களிலும் திறந்த பெருவெளி. சற்றே சரிவாக இருப்பதால் அதிகதூரம் பார்க்கமுடியும்.




 இது போன்ற இடத்தை ரசிக்கும் போது மனம் முழுதும் அங்கே இருக்கவேண்டும். முழு அழகையும், அதன் இன்பத்தையும் நீங்கள் உள்வாங்க வேண்டும். நாங்கள் சென்றபோது ஒரு இளம் சாரல். ஆஹா!




இப்போது கையில் ஒரு கோப்பை தேநீர் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே,  கிராமத்தில்  இருந்து கேத்தலில் லெமன் டீ கொண்டு வந்தார் ஒரு பெண்மணி, முப்பது ரூபாய் விலை,  அப்போதைய மன நிலையில் முன்னூறு கேட்டாலும் கொடுத்திருப்பேன்! 



 இங்கும் சில தங்கும் விடுதிகள் உள்ளன. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் இங்கு தங்கவேண்டும். இரவில் மேகமில்லா வானத்தைப் பார்க்கவேண்டும். பெரிய திறந்த வெளி என்பதால் வானம் முழுவதும் கொட்டிக்கிடக்கும் விண்மீன்களைப் பார்க்கலாம், பார்க்கவேண்டும். கூகிள் ஆண்டவரிடம் "langza stars at night" என்று போட்டு படங்களை நீங்களே தேடிப்பாருங்கள். நான் சொன்னதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்!
 
லாங்சாவில் இருந்து கிளம்ப மனமேயில்லை!


மாலை 4 மணிக்கே மீண்டும் காசா வந்து விட்டோம். காசா கடை வீதியை சுற்றி வந்தோம். எனக்கு இரண்டு டீ -சட்டைகள் வாங்கினேன். ஒரு சட்டைக்கு 300 ரூபாய் என்பது மிகக்குறைந்த விலைதான். சுற்றுலாப் பயணிகள் என்றால் 600 ரூபாய் கூட கொடுப்பார்கள்.  அதே தரத்தில் தேடிப் போய்வாங்கினால் கூட சென்னையிலே 400 ரூபாய்க்கு குறையாது. இன்னும் இந்த ஊர் commercial ஆகவில்லைதான்!

இங்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) இருக்கிறார்கள். அவற்றில் ஒன்று Sol Cafe என்ற பெயரில் ஒரு சிற்றுண்டி விடுதியும், அதனுடன் கையால் செய்த சிறு கலைப்பொருட்கள் விற்கும் இடமும். இதனிலிருந்து வரும் பணத்தை வைத்து இங்குள்ள மக்களுக்கு உதவி செய்கிறார்கள்.இங்கு கொஞ்சம் பொருட்கள் வாங்கிக்கொண்டேன்.

நாங்கள் தங்கியிருந்தவிடுதியின் பெயர்  Kunga Hotel. இங்கிருக்கும் சமையல் கலைஞர் மிகத் திறமையானவர்! 4 நேரமும் எல்லா உணவு வகைகளும் சிறப்பு. அதிலும் காலையில், அளவாகப் பொரிந்த நிலக்கடலையுடன்,சரியான தாளிசமும் சேர்ந்து கிண்டிய அவல் உப்புமா ultimate ! நம் பழக்கத்துக்கு தேங்காய்ச்  சட்டினி மட்டும் மிஸ்ஸிங், ஆனால் அது ஒரு குறை இல்லை !




அடுத்து காசாவில் இருந்து சந்திரதால் மற்றும் மணாலி ...!

(தொடர்வோம்)





Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1