பயணங்கள் தொடர்கின்றன - 6 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 3 - நாக்கோ (Nako) முதல் காசா (Kaza) வரை


நான்காம் நாள் காலை வேனில் கிளம்பும் முன் எங்களை நாக்கோ கிராமத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு வரச்சொல்லி விட்டார்கள். அதனால் அதிகாலை 6 மணிக்கே கிளம்பி ஒரு ட்ரெக்கிங், மலை மீது 40 நிமிடம் ஏறினால் ஒரு சிறிய கோவில். அங்கிருந்து பார்க்கும்போது தெரியும் நாக்கோ கிராமம் வேறொரு வகையில் அழகு!  நாக்கோவின் புத்த மடாலயம், நாங்கள் செல்லும்போது திறக்கவில்லை.






7 மணிக்கே souvenir கடை ஒன்றைத் திறந்து வைத்து ஒரு பாட்டியம்மாள் எல்லோரையும் அழைத்துக்கொண்டிருந்தது. மூன்று ஜோடி தொங்கட்டான்களை மொத்தம் 750 ரூபாய் கொடுத்து வாங்கினேன். (வீட்டில் கேட்டால் ஜோடி 60 ரூபாய்க்கு இங்கேயே கிடைக்கும் என்றார்கள்). ஆனால் இவ்வளவு உயரத்தில், ஆண்டில் 5 மாதம் மட்டும்  சுற்றுலாவை நம்பி இருக்கும் கள்ளமற்ற மனிதர்கள் வாழும் இந்த ஊரில் விலை ஒன்றும் அதிகம் இல்லை என்றுதான் சொல்வேன்.





இன்றைய திட்டம், நாக்கோவில் இருந்து க்யூ (Gue) , அங்கிருந்து தாபோ (Tabo ), தங்கர் (Dhankar) வழியாக காசா (Kaza) சென்றடைய வேண்டும்.


இங்கு ஒன்று சொல்லவேண்டும்....

பல தார திருமணத் தடை சட்டம்   அண்ணல் அம்பேத்காரால் 1951-இல் பரிந்துரைக்கப்பட்டது . பெரும் எதிர்ப்பு கிளம்பியதை ஒட்டி, அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதன் பின்  1956 -இல் தான் அது சட்டமாக்கப்பட்டது.

 தடை செய்யப்பட்டது பலதார மணம்  (Polygyny) என்றே நம்மில் பலர் புரிந்து கொள்கிறோம். உண்மையில் இது  (Polygamy) பல இணையர் திருமணத் தடை சட்டம். அதாவது ஒரு பெண்ணுக்குப் பல கணவர்கள் இருப்பதும் (Polyandry) தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உலகில் ஒரு பெண் பல கணவரை மணமுடிக்கும் பழக்கம் இருக்கும் ஒரு சில இடங்களில் கின்னார் ஸ்பிட்டி மாவட்டங்களும் உண்டு.  இன்னும் இந்தப்பழக்கம் கிட்டத்தட்ட இதே நிலஅமைப்பைக் கொண்ட இதன் எல்லைகளான திபெத், நேபாளம் நாடுகளில் உள்ளது. 

இங்கு மழையும், வளமான நிலங்களும்  மிகக் குறைவு  . லாஹால் -ஸ்பிட்டி மாவட்டத்தின் சராசரி மழை அளவு 170 மிமீ (கேரளா: 3100மிமீ).  மக்கள் அடர்த்தி சதுர மைல் பரப்பளவுக்கு 6 பேர் (மும்பை: 73,000 பேர் / ச.மைல் ). 

ஸ்பிட்டி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வறண்ட மணற்பரப்பு, தொடர்ந்து பெரிய பசுமை நிலங்கள் எங்கும் இல்லை. சிறிதளவு நிலம் இருக்கும் ஒரு ஊரில் இருந்து கிட்டத்தட்ட 50 கிமீ (அல்லது 3 மணி நேரம்) பயணம் செய்தால் கொஞ்சம் நிலங்கள், 10-20 வீடுகளுடன் அடுத்த ஊர்.

 ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் நிலம் பங்கு போடப்படுவதைத் தவிர்க்க அனைவருக்கும்  ஒரு பெண்ணையே திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உண்டாகி இருக்கிறது. இதில் அந்தப் பெண்ணின் விருப்பத்தை கேட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போதும் அந்தப்பழக்கம்(fraternal polyandry) இருக்கிறது என்று சொல்கிறார்கள்.நாங்கள் யாரும் இதைப்பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை .


காலை 8:30 க்கெல்லாம் நாக்கோ-வில் இருந்து வேன் கிளம்பி விட்டது.

 நாக்கோவில் இருந்து க்யூ செல்லும் பாதை விஸ்வரூபம் படத்தில் காட்டப்படும் ஆப்கானிஸ்தான் போல இருந்தது ((ஆனால் அதுவும்  ஆப்கானிஸ்தான் அல்ல!). எங்கு பார்த்தாலும் ஒரு இளம் பழுப்பு நிற மண் மேடுகள். ஆனால் அந்த நில அமைப்பும் கண்கொள்ளாக் காட்சிதான்.

பல இடங்களில் சாலை மேம்படுத்தும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வேலை செய்பவர்களில் அதிகம் பேர் நேபாளிகள்தான்.



க்யூ கிராமத்தில் ஒரு புத்த மடாலயம் உள்ளது. அங்குள்ள ஆச்சர்யம் 500 ஆண்டு பழமையான பதப்படுத்தப்பட்ட மம்மி.  திபெத்தில் இருந்து வந்த Sangha Tenzing  என்ற புத்தத் துறவியின் மம்மி இது.






இந்த கிராமம் சீனாவுக்கு மிக அருகில் இருக்கிறது. நமது கைக்கடிகாரம் இந்திய நேரம் காட்டும்போது, ஐபோன் சீன நேரத்தைக்  காட்டுகிறது!




நாங்கள் சென்று வேனை நிறுத்தி  பார்த்த இடங்கள் அதன் சிறப்பு எல்லாம் சாதாரணம்தான். போகும் வழியெங்கும் நிலஅமைப்புகள் மாறிக்கொண்டே இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பிரமிப்பு.



மதிய உணவுக்கு தாபோ வந்து விட்டோம். 

இங்கு ஆயிரம் ஆண்டு பழமையான புத்த மடாலயம் உண்டு. உள்ளே மிக அழகான சுவரோவியங்கள். அதை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கிறார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

உள்ளே போனால் இருட்டாக இருக்கிறது. நிறைய டார்ச் லைட் வைத்திருக்கிறார்கள். நாம் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு , ஓவியங்களைத் துலக்கமாகப் பார்க்கலாம். ஓவியங்களில் பெரும்பாலும் புத்தர், புத்தத்  துறவிகள் இருக்கிறார்கள்; சில ஓவியங்களில் பல கைகளுடனும், பல தலைகளுடனும்.  ஆனால் ஓவியங்கள் உலகத் தரமானது என்று மட்டும் புரிகிறது. இதை விளக்கும் அளவு என்னிடம் ஞானம் இல்லை.

பக்கத்திலேயே புதிய மடாலயம் கட்டி இருக்கிறார்கள். அங்கு 60க்கும் மேற்பட்ட துறவு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று அந்த கண்ணாடி அணிந்த இளந்துறவி சொன்னார்.



மடாலய வளாகத்தில் நுழைந்தவுடன் வலது புறம் ஒரு கழிப்பறை, மிக சுத்தமாகப் பேணுகிறார்கள். வெளியே யாரும் இல்லை,  ஒரு உண்டியல் நீங்கள் விரும்பினால் பணம் போடலாம் .

மதிய உணவாக ஒரு சிறிய திபெத்திய உணவகத்தில் மிக அருமையான சூப் நூடுல்ஸ். பூண்டு விழுது கொஞ்சம் தூக்கலாகப் போட்டு சிறப்பாகச் செய்திருந்தார் அந்தப் பெண்மணி. தினமும் மதியம் சாப்பிட்டு வந்த ரொட்டிக்கு மாற்றாக வேறொரு உணவு சாப்பிடுவதே  சிறப்புதான்! 

அங்கிருந்து தங்கர் சென்றோம். என்னைப் பொறுத்தவரை இந்தப்பயணத்தில் நாங்கள் இதுவரை பார்த்ததில், தங்கர் மடாலயத்தின் கோட்டையில் இருந்து பார்த்த காட்சிதான் மிகுந்த அழகு. நீங்கள் உயரத்தில் இருக்கிறீர்கள், கீழே தொலைவில் ஆறு, அதையொட்டி மிகப்பெரிய சமவெளி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்கள் இல்லை. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒரு புள்ளியாகத் தெரிகிறது.  அந்தப் பெருவெளியைக் கணக்கில் கொண்டால் சிறு துரும்பென நாம் நிற்கிறோம்! 



 


தங்கர் புத்த ஆலயம் பார்த்துவிட்டு காசா நோக்கி கிளம்பினோம்.  மாலை 7 மணிக்கே காசா வந்து சேர்ந்து விட்டோம். காசாவில் நாங்கள் இரண்டு இரவுகள் தங்க வேண்டும்.


அடுத்து காசா , மற்றும் அதையொட்டிய இடங்கள்.

தொடர்வோம் ...

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1