பயணங்கள் தொடர்கின்றன - 5 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 2 - சிட்குள் முதல் நாக்கோ வரை

 


மூன்றாம் நாள் காலை 5 மணிக்கே எழுந்து விட்டோம்

டார்ஜிலிங் போனால் Tiger Hills சூரிய உதயம் என்று ஒன்றைத் தனியாக கூட்டிப்போய் காண்பிப்பார்கள். சிட்குளில் நாங்கள் தங்குமிடத்தில் இருந்து பார்த்தால்  சற்றே சிறிய அளவில் அது சாதாரணமாகக் காணக் கிடைக்கிறது!



 மலையில் காலை 4 மணிக்கெல்லாம் வெளிச்சம் வந்து விடுகிறது. வெளியில் 9 டிகிரி குளிர், பாஸ்பா நதியைச் சென்று பார்த்தோம். தண்ணீர் இரு கரை புரண்டெல்லாம் போகவில்லை என்றாலும் வேகமாக ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர் உயரத்திலிருந்து தாழ்வான பகுதிக்குப் போவதுதான் காரணம்.


காலை உணவுக்கு முன் சிட்குள் கிராமத்தின் உள்ளே சென்றோம். இது இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படுகின்றது. அப்படிப்பார்த்தால் கடலோரம் இருக்கும் எல்லா கிராமும் கூட கடைசி கிராமந்தானே!  ஆனால், இந்த கிராமத்திற்கு அப்பால் வேறு சாலைகள் இல்லை. ஒரு பக்கம் ஆறு, ஒரு பக்கம் மலை, அடுத்த புறம் திபெத் -சீன எல்லை என்பதால்  இந்த ஊருக்கு வந்துவிட்டு வேறு ஊருக்குப் போக வேண்டும் என்றால் வந்த சாலையிலேதான் திரும்ப வரவேண்டும். அதனால் கடைசி கிராமம் என்று சொல்லிவிட்டுப் போகட்டும். அதனால் சுற்றுலாவும், அந்த கிராமமும்  வளம் அடைந்தால் நன்மையே!




சிட்குள் கிராமத்திற்கு இப்போது சுற்றுலாவும் ஒரு முக்கிய பொருளாதாரமாக இருக்கிறது. தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் பாஸ்பா ஆற்றுக்குள்ளேயே கூட கூடாரம் அடித்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள். அதாவது கூடாரத்தை விட்டு வெளியே 20 அடி நடந்து வந்தால் தண்ணீரில் குதிக்கலாம்.


ஆற்றுக்குள் கூடாரங்கள்


 இந்தப் ஆண்டு வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் என்று சொன்னார்கள் . கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருந்ததை ஈடு செய்ய சுற்றுலா இடங்களுக்குப் படை எடுக்கிறார்கள் போலும் . கேரளாவில் இருந்துகூட  4 பேர் காரிலேயே சிட்குள் வந்திருந்தார்கள்.


சிட்குளில் இருந்து சாங் லா கணவாய் வழியாக திரும்பிவந்து, ரெகோங் பியோ (Reckong Peo ) வழியாக சென்று   கல்பா (kalpa) என்ற இடத்தைப்பார்த்துவிட்டு நாங்கள் நாக்கோ போக வேண்டும். இதுதான் இன்றைய திட்டம். 


கல்பாவில் பார்ப்பதற்கு தற்கொலை முனை ஒன்று உள்ளது. எனக்கு என்ன கேள்வி என்றால் எதற்காக தற்கொலை முனை என்று ஒன்று தனியாக உள்ளது என்பதுதான் !  எங்கள் பயணத்தில் பெரும்பாலான இடங்கள் இதற்கு வசதியானதுதான். தேவைப்படுபவர்கள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு குதித்துக் கொள்ளலாம்!



நாங்கள்  சென்றபோது தற்கொலை முனையை நன்றாகத் தடுத்து வைத்திருந்தார்கள். கூகிளில் பார்த்தால் பழைய படங்கள் வருகின்றன. அந்த த்ரில் இப்போது   இல்லை 


தற்கொலை முனை


ரெகோங் பியோ (Reckong Peo) என்பது கின்னார் மாவட்டத்தின் தலைநகரம்.  இங்குதான் மதிய உணவு சாப்பிட்டோம். 


இங்கு ஒன்று சொல்லவேண்டும். இந்த கின்னார், லாஹால் -ஸ்பிட்டி மாவட்டத்தின் மலை மக்கள் மிக மிகக் குறைவாகப் பேசுகிறார்கள். ரெகோங் பியோ பேருந்து நிறுத்தத்தில் குறைந்தது இருபது பேர் இருப்பார்கள், வண்டி செல்லும் ஓசை தவிர வேறேதும் இல்லை. கடைவீதி மிக அமைதியாக உள்ளது.  நாங்கள் சாப்பிட்ட உணவகத்தில் 4 மேசைகளில்  10 பேர் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். யாருமே தங்களுடன் வந்தவர்களோடு பேசிக்கொள்ளவில்லை! 

மக்கள் குறைவாகப் பேசுவதற்கும், மக்கள் நெருக்கம் மற்றும் தட்பவெப்ப நிலை-க்கு  ஏதும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லை. கின்னார் மாவட்டத்தின் மக்கள் நெருக்கம் சதுர கிலோமீட்டருக்கு 13 பேர் ( ஒரு ஒப்பீட்டுக்காக : சென்னை 17,000 பேர் /ச.கிமீ ). இந்த அமைதியை நான் பின்லாந்தில் இருக்கும்போதும் உணர்ந்திருக்கிறேன் !


அங்கிருந்து கிளம்பி, பூ(Pooh) கிராமத்தைக்கடந்து காப் சங்கமம் (Khab Sangam ) போகவேண்டும். போகும் வழியில் உள்ள பெரிய கிராமம் பூ (மொத்த மக்கள்தொகை 1192!)  இங்கெல்லாம் சாலை மிக நன்றாக உள்ளது. சீன எல்லையை ஒட்டி இந்திய ராணுவம் பயன்படுத்தும் சாலை என்பதும் ஒரு காரணம்.  

வெண்மையான நுரையோடு பொங்கிவரும் சட்லெஜ் ஆற்றோடு சற்றே கரிய நிறமுடைய ஸ்பிட்டி ஆறு கலக்கும் இடந்தான் காப் சங்கமம். இங்கிருந்து ஸ்பிட்டி சமவெளி ஆரம்பிக்கிறது. 


  இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு (முக்கியமாக ஸ்பிட்டி சமவெளியில்) வருடத்தில் 5 மாதங்கள் மட்டுமே வேலை இருக்கும். அக்டோபர் முதல்  ஏப்ரல் மாதம் வரை கடும் பனிப்பொழிவால் முக்கியமான இரண்டு கணவாய் சாலைகளை மூடி விடுவார்கள். மே  முதல் செப்டம்பர் வரை சுற்றுலாப் பயணிகள் வரும்போதே அல்லது பருவ நிலை நன்றாக இருக்கும்போதே 12 மாதங்களுக்குரிய பணத்தையும், தனக்கும் கால்நடைகளுக்கும்  தேவையான உணவையும் சேமித்துக்கொள்ளவேண்டும். 

ஆனால் இந்த சூழலிலும்  யாரிடமும் கையேந்தும் ஒருவரை இந்தப் பயணத்தில் நான் சந்திக்கவில்லை, அது மட்டுமல்ல, தன் வழக்கமான வேலையோடு எல்லோருடைய சுமையை வேனில் இருந்து இறக்கி வைக்கும் கடும் உழைப்பாளி கூட "டிப்ஸ்" எதிர்பார்ப்பதில்லை. சொல்லப்போனால் அப்படி இருப்பதே தெரியவில்லை. பணம் கொடுக்கும்போது எதற்கு கொடுக்கிறான் என்று திகைக்கிறார்கள்!

காப் சங்கமத்தில் இருந்து நாக்கோ வரை இமயமலை மிகப்பெரிய மணல் மலைத் தொடராக காட்சியளிக்கிறது.  மாலையில் காணும் காட்சி எங்கும் ஒரு மெல்லிய மஞ்சள் நிறம் கலந்து எதிரொளிப்பது போன்ற உணர்வு. வழியில் சூரியன் மறையும் காட்சி, மீண்டும், பனி மலையில் சூரிய கதிர்கள் சாய்வாக விழுந்து பொன்னாக மின்னுவதைக் காணும் வாய்ப்பு.



இரவு 8 மணிக்குத்தான் நாக்கோ-வை அடைந்தோம். மிக சுவையான இரவு உணவு! தினமும் தொடர்ந்து வந்த "தால் மக்கானி " -இல் இருந்து இன்று விடுதலை. 

அடுத்து நாக்கோ முதல் காசா(Kaza) வரை ....


(தொடர்வோம்)



Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1