பயணங்கள் தொடர்கின்றன - 4 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 1 - ஜிபி முதல் சிட்குள் வரை

 

       என் நண்பர் ஒருவர் டிவிஎஸ் XL வைத்திருந்தவர், அடுத்து ஒரு ராயல் என்பீல்ட் - புல்லட் வாங்கினார். வாங்கி சில வாரங்களுக்குள்ளேயே , டெல்லியிலிருந்து லே- லடாக் வரை தன்னுடைய புல்லட்டில் ஒரு சாகசப் பயணம் போனார். அது அவருக்கு மிகக் கொடுமையான அனுபவமாக  அமைந்துவிட்டது. மொத்த பயணமும் அவருக்கு பயமாகவே  இருந்திருக்கிறது . திரும்பி வரும்போது வண்டியை பார்சல் சர்வீஸில் ஒப்படைத்து விட்டு விமானத்தில் வந்து விட்டார்.

அது  எனக்கு ஒரு எதிர் மறை எண்ணத்தைத் தானே உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் அந்த இமயமலைப் பகுதியின் மீது ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணியது ( கவனிக்க ...புல்லட் பயணத்தில் அல்ல!)

இது ஒரு புறம் இருக்க, கொரோனா நாட்களில் யூ -டியூபில் , சில Travel Vlog - பார்க்கும்போது தான்யா (Tanya Khanijow) என்ற யூ -டுயூபரின்   ஸ்பிட்டி வேலி  பயண வீடியோக்கள் கிடைத்தன. அது இமயமலையின் வேறொரு பக்கத்தைக் காட்டியது. அது அதன் தனித்துவம் வாய்ந்த புவியமைப்பு. ஸ்பிட்டி வேலி என்பது குல்லு -மணாலி போல அல்லது ஊட்டி ,டார்ஜிலிங் போல ஒரு கோடை வாசஸ்தலம் அல்ல. இது மலையில் அமைந்திருக்கும் ஒரு குளிர் பாலைவனம்.

பலவாறாக யோசித்து, பிறகு அந்த யூ -டுயூபர்  சென்ற (அல்லது promote செய்த) Tripver என்ற பயண முகவர் வழியாகவே நானும் ஸ்பிட்டி வேலி போவதென்று முடிவு  செய்தேன். இந்தப் பயணத் திட்டம் சனிக்கிழமை மாலை டெல்லியில் கிளம்பி அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை மறுபடியும் டெல்லி வந்தடையும்.


சனிக்கிழமை காலை நான் சென்னையில் இருந்து விமானம் ஏறி டெல்லி சென்றேன் டெல்லியில் இருந்து மாலையில் குல்லு மணாலிக்கு பேருந்து ஏறினேன். எங்கள் பயணக் குழுவில் மொத்தம் 11 பேர். மேலும் 5 பேர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள். அவர்கள் ஜிபி (Jibhi) என்ற இடத்தில்  எங்களுடன் இனைந்து கொள்வார்கள்.  


பேருந்தில் போகும்போது கவனித்த ஒரு சுவாரஸ்யமான விஷயம், , உங்களுக்கு தெரியுமா? டெல்லியில் இன்னும் மாட்டு வண்டிகள் ஓடுகின்றன, YouTube -இல் தேடுங்கள்.

காலையில் ஆட் (Aut) என்ற இடத்தில் பேருந்திலிருந்து இறங்கிக்கொண்டோம். அங்கிருந்து நாங்கள் ட்ராவலர் வேனுக்கு மாறிக் கொண்டோம். 

முதல் நாள் மாலை டெல்லியில் இருந்து கிளம்பி, பேருந்து வேன் என்று மாறி ஜிபி வந்தடைய மொத்தம் 18 மணி நேரம் ஆயிற்று.மலையில் மேலே செல்லச் செல்ல அகலமான இலைகள் உள்ள மரங்கள் குறைந்து ஊசியிலை மரங்கள் வரத் தொடங்குகின்றன.








 ஜிபியில் ஒரு சிறிய அருவி உள்ளது. சமூக ஊடகங்கள் அந்த அருவியை சற்றே மிகைப்படுத்தி விட்டன என்றே தான் சொல்ல வேண்டும்.ஆனால் அந்த ஊரும் அருவிக்குப் போகும் வழியும் மிக அழகாக இருந்தன.









ஜி பி யில் பார்க்க வேறு இடங்கள் இல்லை. அன்று மீதி நேரம் ஓய்வுதான். ஏனென்றால் அடுத்த நாள் நீண்ட பயணம் போக வேண்டும். 

எங்களுடைய பயணம் குல்லு மாவட்டத்தில் தொடங்கி மீண்டும் குல்லு மாவட்டத்திலேயே  முடிவடையும்.ஆனால் பெரும்பாலான இடங்களை நாங்கள் பார்ப்பது கின்னார் (Kinnaur)மாவட்டத்திலும் லாஹால்- ஸ்பிட்டி (Lahaul And Spiti) மாவட்டத்திலும் தான்.

அடுத்த நாள் அதிகாலை தேநீர் குடித்துவிட்டு ஏழரை மணிக்கு நாங்கள் கிளம்பி விட்டோம். 



 விடுதியிலிருந்து காலை உணவை பொட்டலம் கட்டி கொடுத்து விட்டார்கள். குல்லு மாவட்டத்தில் இருக்கும் ஜிபி-இலிருந்து இன்னும் உயரே ஏறி, ஜலோரி கணவாய் (Jalori Pass )வழியாக சென்று இன்று மாலைக்குள் நாங்கள் கின்னார் மாவட்டத்தின் இன்னொரு கடைசியில் உள்ள சிட்குள் (Chitkul) என்ற இடத்தை அடைய வேண்டும்.


ஜலோரி கணவாயில் நுழையும்போதே  நில அமைப்புகள் மாறிவிடுகின்றன.அதுவரை பசுமையாக மரங்கள் அடர்ந்து இருந்த மலைக்காட்சிகள், பாறைகள் நிறைந்த மலையாக மாறிவிடுகின்றன .ஆனால் எந்த இடத்திலும் இமயமலையின் அழகும் பிரமிப்பும் குறையவே இல்லை.செல்லும் வழி எங்கும் சட்லஜ் ஆறு கூடவே வருகிறது.

குல்லு மாவட்டத்தில் பல இடங்களில், வீடுகளிலும்  பாஜக கொடி பறக்கிறது.  கின்னார் மாவட்டத்தில்  காங்கிரஸ் கொடி. அரவிந்த் கெஜ்ரிவாலும்  அங்கங்கு சுவரொட்டிகளில் சிரிக்கிறார்.

 நாங்கள் ஜிபியிலிருந்து கிளம்பும்போது 10 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதிய உணவுக்கு ராம்பூர் வரும்போது 35 டிகிரி ஆகிவிட்டது. சட்லஜ் ஆற்றங்கரையில் அமைந்த சிறு நகரம் ராம்பூர். சுற்றியுள்ள பல விவசாய  கிராமங்களுக்கு அதுதான் மையம். ஒரு காய்கறி சந்தையும், அதிகமாக உரம் பூச்சி மருந்து கடைகளும்  உள்ளன. 

இன்னும் மேலே செல்ல, கார்ச்சாம் என்ற இடத்தில் பாஸ்பா (பஸ்பா)  ஆறு சட்லெஜ் ஆற்றில் கலக்கிறது. அந்த இடத்தில் ஒரு அணையும், நீர் மின் நிலையமும் உள்ளது. அதில் இருந்து மேலே சென்று பாஸ்பா ஆற்றின் சமவெளி ஆகிய சாங்லா (Sangla) சமவெளியை அடைந்தோம் . இமய மலையின் மிக அழகிய சமவெளிகளில் இதுவும் ஒன்று.

பனி படர்ந்த இரு மலைத் தொடர்கள், நடுவில் ஓடும் பாஸ்பா நதி,  தூரத்தில் தெரியும் பனி உருகி நீர் கொட்டும்  அருவிகள் நதியில் கலக்கும் காட்சி. நதியை ஒட்டி அமைந்த பசுமை சமவெளியும், அதில் பயனடையும் கிராமமும். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பருந்துப் பார்வையில் (அல்லது குன்றின் மேல் நின்று யானைப்போர் காண்பது போல ) பார்ப்பதுதான் பிரமிப்பு. நான் எவ்வளவு எழுதினாலும், எத்தனை படங்கள், காணொளி காண்பித்தாலும், கண்ணால் பார்ப்பதில் 1% கூட அடுத்தவர்களுக்குச் சொல்லி உணர வைக்கமுடியாது!







சாங்லா கணவாயில், பாஸ்பா ஆற்றை ஒட்டிய மிக மோசமான சாலையிலே மேலே சென்று சென்று சிட்குல் ஐ அடைகிறோம். தூரத்தை எடுத்துக்கொண்டால் ஜிபியிலிருந்து சிட்குள் வரை 213 கிலோ மீட்டர் மட்டும்தான்.ஆனால் பயண நேரம் 12 மணி நேரம். இதை வைத்து சாலைகளின் தரத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

மொத்தப் பயண தூரத்திலும், இந்த இடத்தில் போய் இதைப் பார்க்கப் போகிறோம் என்றெல்லாம் இல்லை. எல்லா நேரமும் வெளியே தெரிவதெல்லாம் அழகுதான்!


அன்று இரவு தங்குவதற்கு,  பாஸ்பா ஆற்றங்கரையில், சுற்றிலும் மலைகளுக்கு நடுவே  சுவிஸ் கூடாரம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வொரு கூடாரத்துக்கும்  தனி குளியலறை , குழாயைத் திறந்தால் தண்ணீர் என வசதிகளுடனும் இருந்தது. ஆனால்  ஒரே ஒரு விளக்குதான்,  மொபைல் போன் சார்ஜ் செய்ய வசதி இல்லை. பவர் பேங்க் - அவசியம் தேவை.

 


எங்களைப்போல பல பயணக் குழுக்கள் அந்த கூடாரங்களில் இருந்தார்கள்.சுவையான இரவு உணவு, Camp Fire , அந்தாக்ஷரி என்று இரவு களை கட்டியது.  அப்போது இருந்த உடல் களைப்பில், சாப்பிட்ட உடன் தூங்கிவிட்டேன்.

அடுத்தநாள் சிட்குளில் இருந்து நாக்கோ (Nako) வரை நெடும்பயணம்.

                                                                                                            (தொடர்வோம்)


Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1