வினாவெழுத்துக்கள் क्या हैं ?

உத்தரகாண்டில் ஒரு அழகிய கிராமம். அங்கே ஒரு பள்ளி. அதில் ஓர் ஆசிரியர். அவர் கையில் ஒரு தமிழ் நூலை வைத்துக்கொண்டு தமிழ் செய்யுளாக தேவாரத்தையும் இலக்கணத்தில் வினாவெழுத்துக்கள் 

"எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகும்மே " 

என்றும்நடத்திக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். 

அந்தக் குழந்தைகளின் நிலையை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா? 

அது ஒருபுறம் இருக்கட்டும். 

ஒரு முறை நான் ஊட்டி சென்றபோது ஒரு திரையரங்கில் படக மொழிப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அன்றுவரை அந்த மொழியில் திரைப்படம் இருக்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது! அப்படிப்பட்ட ஊரில் ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தொடக்கப்பள்ளி. அதில் படிக்கும் மாணவர்கள் படுக மொழியை தாய்மொழியாகவும் தமிழை வீட்டுக்கு வெளியில் பேசும் மொழியாகவும் ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாகவும் கற்றுக்கொள்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இந்தியையும் கற்க வேண்டுமென்றால் அக்குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! 

தமிழ் நாட்டில் கணிசமான பேருக்கு இந்தி மூன்றாம் மொழியல்ல; நான்காம் அல்லது ஐந்தாம் மொழி. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என்று வீட்டுக்குள்ளும், உறவினர்களுக்கும் தனி மொழி பேசுவோர் எண்ணிக்கை 10% முதல் 20% வரை கூட இருக்கலாம். 

சில ஆண்டுகளுக்கு முன், நானும் என் நண்பர் ஒருவரும் எங்கள் குடும்பத்துடன் டெல்லி மற்றும் குலு-மணாலி சென்றிருந்தோம். என் மனைவியும் , நண்பர் மனைவியும் 10 வகுப்பு வரை ஹிந்தியை மூன்றாம் மொழிப்பாடமாகப் படித்தவர்கள். நண்பரும் நானும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள், ஹிந்தியைப் படிக்கவில்லை. ஆனால்நண்பர், பல ஆண்டுகள் முன்பு 3 மாதம் டெல்லியில் வேலை தேடித் தங்கி இருந்திருக்கிறார். நீங்கள் சொல்லுங்கள், எங்கள் நால்வரில் யாரால் ஹிந்தி மட்டுமேதெரிந்த ஆங்கிலம் தெரியாத ஒருவருடன் பேசியிருக்க முடியும் என்று ? என் நண்பரால் மட்டுமே அது முடிந்தது! 

மேலும் ஒரு சம்பவம், ஒரு வருடம் முன்பு அலுவலகத்தில் ஒரு செக்யூரிட்டி என்னுடன் லிப்ட்டில் வரும்போது தமிழில் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தால் அவர் ஒரு வெண்பா கூட சொல்லியிருக்க வாய்ப்புண்டு! அவர் ஒரு தமிழர் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் பெயரைப்பார்த்தால் நாயக் என்று முடிகிறது. கேட்டால், ஒரிஸ்ஸாவில் இருந்து வந்து 6 வருடமாக சென்னையில் இருக்கிறார் அவ்வளவுதான்! கட்டாயம் அவர் தமிழை மூன்றாம் மொழிப்பாடமாக படித்திருக்க வாய்ப்பில்லை ! 

ஒரு மொழியைக் கற்பதற்கு கேட்டல், சூழலோடு பொருத்திக்கொள்ளுதல், பேசுதல், பார்த்து வாசித்தல், அதன் பின் எழுதுதல் என்றுதான்வரிசை. நாம் காதால் கேட்காத, வாயால் பேசாத மொழியை எழுத்து வடிவில் கற்பது கொடுமை. மேற்சொன்ன உத்தரகாண்ட் குழந்தைகளின் நிலைமையும் , நம் குழந்தைகளின் நிலைமையும் ஒன்றுதானே ? 

ஏட்டுச்சுரைக்காயாக ஒரு மொழியைக்கற்பதால் என்ன லாபம்? பாடம் புரியவில்லை என்றால், கிராமங்களில் பள்ளிக்கூடத்திற்கு வரக் கூட மாட்டார்கள் ஐயா ! School Drop-Out குறைவாகவும், நம்முடைய கல்வியறிவு விகிதம் அதிகமாக இருப்பதற்கும் பாடச்சுமை குறைவாக உள்ள நம்முடைய இரு மொழிக்கொள்கையும் ஒரு காரணம்! 

இருமொழிக்கொள்கைஎன்பது ஒரு அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல, நிரூபிக்கப்பட்ட நன்மை பயக்கும் அறிவியல் உண்மை ! 

உண்மையை எடுத்துச்சொல்லுங்கள்...திராவிடத்தால் நாம் வாழ்கிறோம் !


Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1