பயணங்கள் தொடர்கின்றன -2 : மன்றோ தீவு

நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எங்களை பள்ளியிலிருந்து வெளியில் அழைத்துச் சென்றார்கள்.எதற்கு தெரியுமா? வைகை ஆற்றில் வெள்ளம் வருவதை பார்ப்பதற்காக! பல ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இருகரையும் தொட்டு வெள்ளம் செல்லும் எங்கள் ஊரின் ஆறு அது!

இந்த மாதம் கூட 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் வைகையின்  இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றது. வைகையையே பார்த்து வளர்ந்ததால்தானோ என்னவோ தண்ணீர் தேசங்கள் என்னை பிரமிக்க வைக்கிறது!

அரிப்பாவில் இருந்து கிளம்பி நாங்கள் குளத்துப்புழா வழியாக  மன்றோ தீவு சென்றடைந்தோம்.




மன்றோ தீவு முதலில் எங்கள் பயணத்திட்டத்தில் இல்லை. நாங்கள் கொல்லத்தைச் சுற்றியுள்ள இடங்களைத் தேடும்போது, எங்களுக்குச் சிக்கியது.

எவ்வளவு அழகான இடம் இது! அதிகம் சந்தைப்படுத்தப் படாமல் உள்ளது! 

கொல்லத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மன்றோ தீவு உள்நாட்டில் அமைந்த ஒரு தீவாகும் (Inland island ).கல்லடா ஆற்றுக்கும் அஷ்டமுடி ஏரி க்கும் நடுவில் அது அமைந்துள்ளது. 10,000 மக்கள் வசிக்கிறார்கள்.இது ஒரு தீவு என்று மற்றவர்கள் சொன்னால் தான் நமக்குத் தெரியும் மற்றபடி இது main land உடன் சாலை, ரயில் வழிகளில் இணைப்பிலேயே உள்ளது.






அந்தத் தீவில் நாங்கள் இணையம் வழியாக  Munroe Nest Home Stay இல்  பதிவு செய்திருந்தோம்.அந்த Home Stay வை நடத்தும் விஷ்ணு ஒரு இளைஞர். 2 வாரத்திற்கு முன்தான் திருமணம் ஆகியிருக்கிறது.

நாங்கள் தங்கிய வீடு தொடர் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பக்கத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் தனித்தனி வீடுகள். வீட்டின் முன்னால் தண்ணீர் போகும் ஒரு கால்வாய். சுற்றுப்புற வீடுகளில் ஆடு மாடு கோழிகள்! அருமையான மிக சுத்தமான ஒரு வீடு. அந்த வீட்டில் இதற்கு முன்னர் இந்தியர்கள் யாரும் தங்கியது இல்லையாம். வாடகை ஒரு இரவுக்கு ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே!



அன்று இரவு உணவை விஷ்ணுவின் மனைவி எங்களுக்கு தயார் செய்தார், சப்பாத்தியும் கோழிக்கறியும். Delicious !

"என்ன விஷ்ணு Beef எல்லாம் இல்லையா?"

"சார் நீங்க சாப்பிடுவீங்கன்னா நான் நாளைக்கு செஞ்சு தாரேன்"


மன்றோ தீவில்  சிறப்பு boat canoeing. மூங்கில் கழியை வைத்துச் செலுத்தப்படும் படகில் சவாரி செய்வது.

விஷ்ணு அடுத்தநாள் காலை வெகு அதிகாலையிலேயே கிளம்பி விட வேண்டும் என்று சொல்லி இருந்தார்.  நாங்கள் காலை ஐந்து நாற்பதுக்கு வீட்டின் முன் உள்ள கால்வாயில் வந்து நின்ற படகில் இருந்தோம்.விஷ்ணுதான் படகைச்செலுத்தினார்.

குறுகிய கால்வாய்களின் வழியே செல்வது ஏதோ மற்றவர்களின் வீட்டுக்குள் புகுந்து செல்வதுபோல் உள்ளது.அதை சற்றே சிறிய ஆலப்புழா எனக் கொள்ளலாம்.. 

இரண்டு பக்கமும் தென்னைகள் அடர்ந்த கல்லடா ஆற்றின் கரைகள். சற்றே குறுகிய ஆற்றைப் பார்க்கும்போது  நார்வேயின் fjord போலஉள்ளது.

 பரந்து விரிந்த அஷ்டமுடி ஏரி. அதில்தான் 1988 இல் ஒரு ரயில் கவிழ்ந்தது. "ஐயர் தி கிரேட்" படத்தில் கூட அதை ஒரு காட்சியாக அமைத்திருப்பார்கள்..



காலைப் படகு சவாரியைத் தேர்வு செய்தது சரியான முடிவு. காலண்டர் போட்டோக்களில்  பார்ப்பது போல் இயற்கைக் காட்சி.

எதிரில் ஒரு படகுக்கு காரர், விஷ்ணுவிடம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்போவதைப் பற்றிப் பேசிச்சென்றார். விஷ்ணுவும் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்றார். நாளையோ, மறுநாளோ அவர் போகலாம். பக்கத்தில்தானே !

"விஷ்ணு, நீங்க இன்னைக்கு விரதம்னா எங்களுக்கு Beef எல்லாம் வேண்டாம்"

" அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார், நீங்க சாப்பிடுங்க "

எவ்வளவு சகஜமாக இருக்கிறார்கள்!


மாங்குரோவ் காடு 




நடுவில் ஒரு இடத்தில் படகை நிறுத்தி டீ குடித்தோம்.

பயணத்தின் நடுவே டீக்கடை 



விஷ்ணுவிடம் வந்து ஒரு மூதாட்டி பேசிவிட்டு சென்றார்."என்ன விஷ்ணு உங்களை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு? Assembly election-இல நிக்கப்  போறீங்களா?"

விஷ்ணு சிரித்தார்.

மன்றோ தீவில் வழக்கத்தைவிட அதிகமாக புற்றுநோய் நோயாளிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

கொல்லத்துக்கும், ஆலப்புழாவுக்கும் இடையில் உள்ள கடற்கரை  தோரியம் அதிகம் நிறைந்தது.  மன்றோ தீவில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் சவராவில் தான் கேரள அரசின் KMML டைட்டானியம் தொழிற்சாலை உள்ளது. வழக்கத்திற்கு அதிகமாக புற்றுநோய் இருப்பதற்கு சவராவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வரும் புகை ஒரு காரணமாக இருக்கலாம்.

விஷ்ணு அவர்களில் சில நோயாளிகளின்  சிகிச்சைக்காகப்  பணம் வசூல் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் அவருக்கு ஊருக்குள் நல்ல பெயர்.அடுத்த முறை உள்ளாட்சித் தேர்தலில் நிற்க போவதாக சொன்னார்.

விஷ்ணுவுக்கு ஊருக்குள் மட்டு மல்ல, வாடிக்கையாளர்களிடமும் நல்ல பெயர். அவருக்கு இங்கிலாந்தில்  Northampton இல் இருந்து வரும் வாடிக்கையாளர் ஒருவர் இருக்கிறாராம். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 31 வரை நாங்கள் தங்கியஅதே அறையில்தான் தங்குவாராம். அவருடைய தேநீர் கேத்தல், மீன் பிடி உபகரணங்கள் எல்லாவற்றையும் இங்கேயே வைத்திருக்கிறார்.விஷ்ணுவின் திருமணத்திற்காகவே  அவர் இங்கிலாந்தில் இருந்து மன்றோ தீவுக்கு வந்து சென்றிருக்கிறார்.


தேனீருக்குப்பிறகு, பயணம் தொடர்ந்தது.கடல்போல ஏரி. அதன் நடுவே ஒரு சிறிய தீவில் resort ஒன்று, கொஞ்சம் சிறிய மாங்ரோவ் காடு, செயற்கையாக உருவாக்கப்பட்ட இறால் மற்றும்  கறிமீன் பண்ணைகள், மீன்கொத்திகள் , நீர்க் காகங்கள் , Bee Eater,  brahminy kite எனப் பறவைகள். இதையெல்லாம் ரசிக்கும் மனதுதான் வேண்டும்.


மூன்று மணி நேர படகு சவாரி முடித்து அறைக்கு திரும்பினோம். காலை உணவு இடியாப்பமும், கடலைக்கறியும். சிறப்பு!  காலை முழுதும் ஓய்வு...



அந்த கால்வாயில் படகிலேயே வந்து மீன் வியாபாரமும் செய்கிறார்கள். மதியம் மீன் செய்யட்டுமா என்று விஷ்ணு கேட்டார். ஆசைதான். ஆனால் இரவுக்கு பீப்  என்று முடிவு செய்திருந்ததால், மீனைத் தியாகம் செய்து மரக்கறியைத் தேர்வு செய்தோம்.


விஷ்ணுவுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள். (குழப்பமாக இருக்கிறதா? எங்களுக்கும்தான். ஆனால் அதையெல்லாம் அவரிடம் கேட்கவில்லை). எந்த மொழியும் பேசாமல் இன்பாவும் அவளும் நண்பர்களாகி விட்டார்கள்.அவளும் எங்களுடனே உட்கார்ந்து சாப்பிட்டாள். எளிமையான ஆனால் சுவையான மதிய உணவு!






மன்றோ தீவு அமைதியான நிறைவான ஒரு பயண அனுபவத்தை எங்களுக்குக் கொடுத்தது !





மாலையில் மோட்டார் படகில் அஷ்டமுடி ஏரியின் ஆளில்லாத் தீவுக்கு சென்று வந்தது பற்றிப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.



Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1