பட்டப்பெயர்கள்!


அந்த பெரியண்ணன்தான் ,  'டேய் சங்கர்,  கரடியை நான் கூப்பிட்டேன்னு கூப்பிடுடா' என்று சொன்னான்.  எனக்கு கரடியைத் தெரியும், அடுத்த தெருப்பையன். என்னுடைய வயதுதான். உடம்பெல்லாம் முடியாக இருப்பான். 'கரடி, உன்னை குணா அண்ணன் கூப்பிடுது'.

 அவன் கோபத்துடன் இடது கையால்  என்னை ஓங்கி  அறைந்து விட்டு குணாவைப் பார்க்க ஓடிவிட்டான். கன்னத்தைத் தடவிக்கொண்டு, நான் விசாரித்ததில் யாருக்கும்  கரடியின் உண்மையான பெயர் தெரியவில்லை. பிறகு, எங்கள் ஆச்சிதான் அவன் அம்மாவிடம் விசாரித்து விட்டுச் சொன்னாள் அவன் பெயர் சுந்தர் ராஜன் என்று.

பட்டப்பெயர்கள் வைப்பது இப்போது இருக்கிறதா என்றே தெரியவில்லை. இருந்தாலும் பெரிதாக வெளியே தெரிவதில்லை போலும். ஆனால் நாங்கள் படிக்கும்போது நிறையப் பேருக்குப் பட்டப்பெயர் இருக்கும். அதற்கு முன் இதைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும். கல்வி பரவலான பிறகு, பட்டப்பெயர்கள் குறைந்து விட்டனவா?

அது என்னவோ தெரியவில்லை,  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வைக்கும் பட்டப்பெயர்கள் எல்லாமே மொன்னையாக, சுவாரஸ்யம் இல்லாமலே இருக்கும். சில ஆசிரியர்கள் தேர்வில் பெயில் ஆகி இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களைப் 'பெரிசு' என்று கூப்பிடுவார்கள்.  ஊறுகாய் வியாபாரியின் மகனை ஊறுகாய் என்று கூப்பிடும் ஆசிரியரின் எந்த ஜோக்குக்கும் என்னால் சிரிக்க முடியாது. 

ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களுக்கோ , சக மாணவர்களுக்கோ வைக்கும் பட்டப்பெயர்கள் , வசைகளில் கூட  உவமை, உருவகம் அல்லது  ஒரு கற்பனை நயம் இருக்கும்.  

காதில் பெரிய ஓட்டை இருக்கும் வாத்தியாருக்குப் பெயர் 'உளுந்தவடை'.   பேண்டை இடுப்புக்கு மேலே அரையடி உயரத்தில் போட்டு பெல்ட் அணிந்து வருபவருக்குப்  பெயர் 'நெஞ்சிறுக்கும் வரை ' .( இறுக்கும் - று வல்லினம் என்பதை வலியுறுத்திச் சொல்பவன் வகுப்பில் நல்லாப்  படிக்கும் மாணவனாக இருப்பான்!)

கல்லூரி இளையரில் ஒரு day scholar பெண் இருந்தாள்.  வீட்டில் கிளம்பி நேராகக் கல்லூரி வரும் அவள் எந்த பையன் அல்லது பெண்ணிடமும் பேசி நாங்கள் பார்த்ததில்லை.கல்லூரி முடிந்ததும் அதே 5D  பஸ் பிடித்து வீட்டுக்குப் போய்  விடுவாள் . அவளுக்குப் பெயர் 'Point to Point'.

சில universal பட்டப்பெயர்கள் இருக்கின்றன.  வட்டமான முகமாக உடம்பில் எலும்பே தெரியாவனுக்கு நாடு பூராவும் ஒரே பட்டப் பெயர்தான் 'உருளைக் கிழங்கு' . அதே போல கொஞ்சம் குண்டாக, கன்னம் புஸ் என்று இருக்கும் பெண்ணையோ அல்லது பையனையோ குறிக்க 'போண்டா'.  ரொம்ப வெள்ளையாக இருந்தால் 'மைதா'.


எங்கள் ஊரில் ஒருவனைக் குரங்கு என்று திட்ட 44 என்று கூப்பிடுவார்கள். குரங்குகள்  அதிகம். இருக்கும் அழகர் கோவிலுக்கு பெரியார் நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்து எண் அது.

 எங்கள் பள்ளியின்  தொழில் கல்வி ஆசிரியரின்  பெயர் 'இஞ்ஞாசி'.அது அவருடைய  இயற்பெயர்தான், Ignatius என்பதன் தமிழாக்கம்.  பள்ளியில் அவர் ஒரு நாள் வாலன்டியராகப் போய் வணக்கம் சொன்ன சில மாணவர்களை அழைத்து,  செடிக்குத் தண்ணீர் பிடித்து ஊற்ற வைத்து விட்டார்.

"வணக்கம் சொன்னது ஒரு குத்தமாய்யா?"

 அவர்களும், ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய, அவர்கள் தெருவில்  புதிதாக எடுத்து வளர்க்கும் நாய்க் குட்டிக்கு  அவர் பெயரை வைத்து விட்டார்கள். ஆனால் இது ஒரு வேளை,  இஞ்ஞாசி அய்யாவுக்குத் தெரிய வந்தால் தொலைத்து விடுவார் என்பதால் நாயை 'சிஞாஞ்இ' என்று ஏதோ சைனீஸ் பெயர் போல அழைத்துக்கொண்டிருந்தார்கள் . 

பொதுவாக முதல் வரிசை மாணவர்களுக்கு சாரல் மழை பொழியும் ஆசிரியரின் பெயர் குற்றாலமாக இருக்கும். ஆனால் ஒரு வகுப்பில் அவரை ' திருப்பரங்குன்றம்' என்று சொன்னார்கள். என்னவென்று விசாரித்தால் எவனோ ஒருவன் 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எச்சில் தெறிக்கும்' என்று பாடியிருக்கிறான்;  அது காலப்போக்கில் மருவி திருப்பரங்குன்றமாக மாறியது என்றார்கள்.

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1