Short or Medium

நீண்ட நாட்கள் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது எனக்கு இருக்கும் பிரச்சினை நல்ல முடி திருத்துநர் கிடைப்பது. உண்மையிலே அது அவ்வளவு எளிதல்ல. சிங்கப்பூரிலும், லண்டன் ஹவுன்ஸ்லோவிலும்  ஒவ்வொருமுறை கடையை விட்டு வெளி வரும்போதும்  திருப்தியே இராது.
ஆனால் நான் Watford இல் இருந்தபோது  அந்த கவலை எல்லாம் இல்லை. ஒரு நல்ல தொழில்காரர் எனக்கு அமைந்து விட்டார்.


Watford -இன்   ஒருபகுதியில்  ஆசியர்கள்  அதிகம் இருக்கிறார்கள். பெரும்பாலும் பாகிஸ்தானியர், படேல்கள் மற்றும்  இலங்கைத் தமிழர்கள்.   விப்பெண்டில் சாலையில்   இருக்கும் அந்த முடி திருத்துநர் ஒரு பாகிஸ்தானி. வயது சுமார் 50 இருக்கும். ஒல்லியான உருவம். நல்ல சிரித்த முகத்துடன் இருப்பார். தொழில் சுத்தம், அதனால் பொறுமையாக வேலை செய்வார். ஆனால் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை.

நான் போய் உட்கார்ந்த உடனே இந்தியில் பேச ஆரம்பித்து விட்டார். எனக்குத் தெரிந்த ஒரே இந்தி வாக்கியமான "இந்தி நஹி மாலும்" ஐ நான் பதிலாகச் சொன்னேன்.அவரால் எனக்கு இந்தி தெரியாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எப்படி இந்தியாவில் இருந்து இந்தி தெரியாமல் இருக்க முடியும் ?

அடுத்த முறை நான் மதிய நேரம் சென்றேன்.கடையில் இவர் மட்டுமே இருந்தார். மறுபடியும் இதே விஷயத்தைப் பேச ஆரம்பித்துவிட்டார். பொதுவாக மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்த மாதிரி பேசுறவங்ககிட்ட நான் பேசுவது இல்லை. ஆனால் இவர் ரொம்ப sensible ஆன ஆள்.

" உங்களுக்கு கிழக்கு பாகிஸ்தான் தெரியமா?"

கொஞ்சம் யோசித்துச் சொன்னார்

" தெரியும், இப்போ அது பங்களாதேஷ் "

"கிழக்கு பாகிஸ்தானில என்ன மொழி பேசுவாங்க?"

அவர் முடி வெட்டுவதை நிறுத்திவிட்டு கத்திரிக்கோலையும் சீப்பையும் குறுக்காக வைத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

மீண்டும் புன்னகையுடன் " பெங்காலி பேசுவாங்க; ஆமா அவங்க உருது பேசறது இல்ல"

"ஏன் கிழக்கு பாகிஸ்தான் பிரிஞ்சது தெரியுமா? 1947 இலேயே ஜின்னா உருதுதான் தேசிய மொழின்னு அறிவிச்சுட்டார், பிரச்சினை அப்பவே ஆரம்பிச்சுடுச்சு"

அவருக்கு பாகிஸ்தான், ஜின்னா பற்றி நான் பேசியதில் உண்மையிலேயே உற்சாகமாகி விட்டார்"

" இந்தியாவில 40% தான் இந்தி பேசுறாங்க. மத்தவங்க எல்லோரும் அவங்க அவங்க மொழியிலதான் பேசறாங்க. எங்க ஊர்ல நாங்க எங்க மொழியிலே பேசிக்குவோம். மத்தவங்க கூட பேசறதுக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே! அதனாலதான் நாங்க கிழக்கு பாகிஸ்தான் மாதிரி பிரிஞ்சு போகலை "

அவர் ஒருவாறு புரிந்து கொண்டார். என்ன முக்கியமான விஷயம் என்றால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இங்கிலாந்தில் அவர் இருக்கிறார். குடியுரிமை எல்லாம் வாங்கி ஓட்டு போடுகிறார்.  ஆனால் இவரிடம் இருப்பது 50 ஆங்கில வார்த்தைகள்தான்.  இந்தி அல்லது உருது தெரிந்தால் நன்றாகப் பேசுவார். இல்லையின்னா short ,medium இரண்டு சொற்கள் போதும்.


அடுத்த முறை என்னை மகிழ்ச்சிப் படுத்த  ஒரு இலங்கைத் தமிழரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தார் "என்னப்பா தம்பி எப்படி இருக்கிற?"

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அவருக்கு தெரிஞ்ச பாஷயில எனக்கு தெரிஞ்ச நல்ல வார்த்தை இதுதான்

 "அஸ்ஸலாமு அலைக்கும்"

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1