இரண்டாம் பரிசும் மூன்றாம் பரிசும்!


அன்று மதிய உணவு இடைவேளையில்தான் கற்பகவிநாயகம் என்னிடம்  வந்து கேட்டான் , நெல்லை அறிவியல் மையத்தில் தமிழ்நாடு வனத்துறை இன்று 2 மணிக்கு   ஒருகட்டுரைப்போட்டி நடத்துகிறது  நீ போக முடியுமா என்று. அவனுக்கே ஜியாலஜி ராமநாதன் சார் அப்போதுதான் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து அவனே சில டிப்ஸ் கொடுத்தான், எந்த தலைப்பு கொடுத்தாலும் வனங்கள் அழிவு, வனத்துறையின் தியாகம் , களக்காடு சிங்கவால் குரங்கு, வல்லநாடு கலைமான் , முண்டந்துறை புலிகள் எல்லாம் கலந்து கட்டி எழுத வேண்டும் என்று.

போன பிறகுதான் தெரிந்தது அது மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி என்று . மண்டலம் என்பது பல மாவட்டங்களை உள்ளடக்கியது என்றறிக.

நானும்  எழுதி பேப்பரைக் கொடுத்து விட்டு, ஜங்சன் போய் மகாராஜாவில் தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டுவிட்டு வந்ததோடு அதை மறந்துவிட்டேன்.

அடுத்த வாரம், வழக்கம்போல் சனிக்கிழமை  மதிய உணவுக்குப் பின் காவேரி இல்லம் வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது வனத்துறையின் ஜீப் ஒன்று வந்து நின்றது. என் பெயரைச் சொல்லி அந்த டிரைவர் விசாரித்தார் . "இந்த மாதிரி உமக்கு இரண்டாம் பரிசு கிடைச்சிருக்குவே , மினிஸ்டர் வாராரு , 4 மணிக்கு சேவியர் காலேஜ்ல பங்சனு.. வந்து வேங்கிக்கிடும்" என்றார்..

இவ்வாறாக நான் திடீரென்று கட்டுரை எழுதி, திடீரென்று அன்றைய வனத்துறை அமைச்சர் லாரன்ஸிடம் பரிசு பெற்றேன். சம்பவம் பொய்யில்ல மக்களே, நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காது பார்த்துக்கிடுங்க ... அதான் யாருகிட்டயும் சொல்லலை!

இது இப்படி இருக்க, போன வெள்ளிக்கிழமை ஒரு நண்பரிடமிருந்து  whatsapp இல் செய்தி.  பல பள்ளிகளைச் சேர்ந்த 90 மாணவர்கள் கலந்து கொண்ட  யோகா போட்டியில் தன் மகன் 3ஆம் பரிசு வாங்கியிருப்பதாக அனுப்பியி ருந்தார். பெருமையாக இருந்தது.

நண்பரின் மகன் சற்றே பூசினாற்போல இருப்பான் என்றாலும் நல்ல சுறுசுறுப்பு.

சனிக்கிழமை நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது வழக்கம்போல் அவர் மகனிடம் வம்பு ....

"என்ன தம்பி யோகா போட்டியில மூன்றாம் பரிசு  மட்டும் தப்பா கொடுத்துட்டாங்களாமில்ல, திருப்பி வாங்கப் போறாங்களாம்  "

"என்கிட்டே மட்டுமா வாங்குவாங்க... அப்போ எல்லார்கிட்டேயுமில்ல திருப்பி வாங்கணும்"

" என்னடா சொல்லுறே, நாலஞ்சு பேருக்கு மூன்றாம் பரிசு கொடுத்துட்டாங்களா?"

பையன் களங்கமில்லாமல் சொன்னான் ...

"இங்க பாருங்க அங்கிள், 20 பேருக்கு முதல் பரிசு, 30 பேருக்கு இரண்டாம் பரிசு, மீதி எவ்வளவு பேர்? ஆங்... 40 பேருக்கு மூன்றாம் பரிசு "

 பின் குறிப்பு:

அன்புள்ள தம்பீ (கவனிக்க.. நெடில்!) என்று விளித்து , கடித  வடிவில் எழுதப்பட்ட  என் கட்டுரைக்கு அமைச்சரிடம் 'இரண்டாம்' பரிசு பெற எல்லா தகுதிகளும் உண்டு.

முக்கியமாக, அமைச்சரின் விழாவில் பரிசு கொடுப்பதற்காக, அவரச அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்தப் போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து திரண்டு வந்து கலந்து கொண்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு என்பது ஒரு காரணம் அல்ல!

Comments

  1. அந்தப் போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து திரண்டு வந்து கலந்து கொண்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு 😀

    ReplyDelete
  2. Is it a true event? Or your imagination?

    ReplyDelete
  3. கடைசி வரை இந்த ரகசியத்தை கற்பக விநாயகம்
    சொல்லவே இல்லையே... இனிமையான நாட்கள்.,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1