அண்ணே, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் !



ஆறுமுகம் புதிதாக எங்கள் வீட்டில் ( ரூமில்) சேர்ந்திருந்தான்.  நான், தனா , கேங்கோ மூன்று பேரும்  இரண்டாம் வருடம் பொறியியல் படித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு ஹாஸ்டல் இன்னும் கிடைக்கவில்லை. ஆறுமுகம் முதல் வருடம் சேர்ந்திருந்தான்.  கேங்கோவின் மாமாதான் ஆறுமுகத்தை ரூமில் சேர்க்க பரிந்துரைத்திருந்தார் . ஆனால் எங்கள் யாருக்கும் விருப்பமில்லை.எப்படியும் அவன் வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து தனியே போய் விடுவான் என்று நாங்கள் நினைக்க, அவனோ  அண்ணன் அண்ணன் என்று எங்கள் மேல் பாசமாக இருந்தான்.


அவனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. மேற்கத்திய பாணி கழிப்பறையை முதல் முதலாகப் பார்க்கிறான். (நாங்கள் எல்லாம் ஆங்கிலப் படங்களில் பார்த்திருந்தோம்!)

"அண்ணே இதில எப்படி ஏறி உக்கார்றது?"

கேங்கோ அவனுக்கு ஒரு டெமோ செய்து காட்ட வேண்டியிருந்தது.

சிரிக்காமல்  கிண்டல் செய்வதில் தனாவை மிஞ்ச ஆள் இல்லை.அவன் இப்போது, அவனுடைய form -க்கு வந்து விட்டிருந்தான்.

"அண்ணே இது என்ன Fair & Lovely ? - ன்னு போட்டிருக்கு "

" அதுவா அது தலை முடிக்குப் போடறது ?"

"அப்படியான்னே?"

" ஆமா, Fair-ன்னா Hair, Lovely -ன்னா அழகா இருக்கிறது , முடி அழகா இருக்கணும்னா இதைப் போட்டுக்கணும்"

அடுத்த நாள் காலையிலேயே, ஆறுமுகம்  Fair & Lovely -ஐத் தலையில் தேய்த்துக் காலி செய்திருந்தான்.

"தனா அண்ணே , இன்னைக்கு சாம்பார்ல ரொம்ப உப்பப் போட்டுட்டாங்கல்ல"

"கொஞ்சம் மேக மூட்டமா இருந்துச்சுல்ல அதான்"

லாஜிக் இருக்கிறதோ இல்லையோ ஆறுமுகம், தனாவின் பதில்களை எதிர் கேள்வி கேட்பதில்லை.

ஒரு நாள்  செகண்ட் ஷோ கலைவாணி தியேட்டருக்கு ஆறுமுகத்தையும் அழைத்துச் சென்றோம்.
பரங்கிமலை ஜோதி, மதுரை மது , திருநெல்வேலி கலைவாணி இவர்களெல்லாம் உடன் பிறவா சகோதரிகள் என்று புரிந்து கொள்க.

அடுத்த நாள் காலை 'வாழ்க்கையின் ரகசியம்' பற்றிய ஒரு  உரையாடல்  ஆறுமுகத்துக்கும் தனாவுக்கும் 10 நொடிகளுக்குள் நடந்து முடிந்தது.

"அண்ணே, இந்த பொம்பளைவளுக்கு எப்படின்னே குழந்தை பிறக்குது?"

இந்தக் கேள்வியை எதிர் பார்த்திருப்பான் போல....கண நேரம் கூட யோசிக்காமல் தனா சொன்னான், 

"தொப்புள் வழியாத்தான் "

"கரெக்ட்டுண்ணே , நானும் அப்படிதான் யோசிச்சேன்"

"இதிலே யோசிக்கிறதுக்கு என்ன இருக்குது?"


   மாலையில் கல்லூரி NSS வேலை எல்லாம் முடிந்து நாங்கள் மூன்று பேரும் ரூமுக்கு வர 6 மணி ஆயிற்று... ஆறுமுகம் பெட்டி  படுக்கையெல்லாம் கட்டி தயாராக இருந்தான்.

" அண்ணே உங்க கிட்டயெல்லாம் சொல்லிட்டுப்போகணும்னு உக்கார்த்திருக்கேன்"

"  அப்போ உன்னோட friends கூட சேர்ந்து தங்கப்போறல்ல ?"

" என்னண்ணே இப்படி சொல்லிட்டீக ...எனக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்குல்ல "

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1