இரப்பர் (ரப்பர் அல்ல! )



என் நெருங்கிய நண்பர், ஒரு ஆசிரியர். சந்தர்ப்ப சூழ்நிலையால், கடன் வாங்கி, அவரின் வீட்டுப் பத்திரம் கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கிக்கொண்டது...நண்பரால் வட்டியைக்கட்ட முடியவில்லை. அப்போதைய மதிப்பில் 5 லட்சம் கடன், மாதம் 3% வட்டிதான். 1998 வாக்கில் இப்போது அளவுக்கு எல்லாம் சம்பளம் இல்லை. மாதம் 15 ஆயிரம் வட்டி கட்டுவது  அவருக்கு இயலவில்லை. வட்டி கட்ட முடியாமல் வட்டிக்கு வட்டி ஏறி, கடன் தொகை 8 லட்சம் ஆகி விட்டது. வீட்டை விற்றால் கடனை அடைக்கலாம். உங்களுக்குத் தெரியுமில்லையா ... கந்து வட்டி பார்ட்டி என்ன செய்யும் என்று. வீட்டை யாரும் வாங்க விடாமல் அமுக்கப்பார்த்தது. 8 லட்சம் உடனே கட்டினால் வீட்டுப்பத்திரம் மீட்கப்பட முடியும் என்ற நிலைமை.

அப்போது ஒரு connection கிடைத்தது. அந்த நபர், என்  நண்பரின் வீட்டுக்கு 5 வீடுகள் தள்ளி குடியிருக்கிறார்.அவருடைய  தொழில் பிச்சை எடுப்பது (மதுரையின் ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று!).

அவர் மூலமாக, வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு நபரைச் சந்திக்கச் சென்றோம்.  மதுரை சக்கி மங்கலத்தில் வீடு, ஓரளவு வசதியான வீடுதான், டீவி , பிரிட்ஜ்  என்று பொருட்கள் இருந்தன. வீட்டில் அவருடைய   மனைவியும் , வளர்ந்த பையன்கள் இரண்டு பேரும் இருந்தார்கள். 

அந்த வீட்டுக்காரர், முழுப்பணத்தையும்  தன்னால் கொடுக்க முடியும் என்றும், . மேற்படி இரத்தல் தொழில் செய்பவரின் reference இருப்பதால்தான் தான் பணம் கொடுக்க முன் வந்ததாகவும்  கூறினார்.  நண்பருக்கு சந்தோஷம், ஆனால்வட்டி வீதம் என்ன என்று தெரிய வேண்டுமே, அது மட்டும்தான் இப்போது deciding factor. ஆனால் கடைசிவரை அவர் மாத  வட்டி 5%-க்கு குறையாது என்று சொல்லி விட்டார். Terms ஒத்துவரவில்லை. நாங்கள் வந்து விட்டோம்.

அந்த 5% வட்டி நபருக்கு கண் தெரியாது... ஒருவேளை நீங்கள் அவர் மதுரை அண்ணா பேருந்து நிலையம் வந்திருந்தால்  அவரைப்  பார்த்திருக்கலாம், பரிதாபப்பட்டிருக்கலாம் , உங்கள் ஈகைத் திறனை வெளிப்படுத்த அவரும் உங்களுக்கு ஒரு வாய்ப்புக்கு கொடுத்திருக்கலாம். 


அன்று ஆதித்யா சேனலில் 'கொஞ்சம் நடிங்க பாஸ்' என்று ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நகைச்சுவையாக நினைத்து ஒரு 'கமெண்ட் சொன்னார். " பிச்சை எடுக்கிறவங்கதான் வட்டிக்கு விடறாங்களோ "-ன்னு ...இந்த சம்பவம் என் நினைவுக்கு வந்தது....

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1