தத்தனேரி மயானம்

பள்ளி கல்லூரி நாட்களிலும், மதுரை வைகை ஆயில்ஸ் -இல் வேலை பார்த்தபோதும், பொதுவாக எங்கள் உறவினர் வீடுகளில் துக்கம் என்றால் நானோ என் அம்மாவோதான் போவோம். பெரும்பாலும் நேரம் இருந்தால் நான் தத்தனேரி மயானம் வரை போவது வழக்கம்.

படிச்ச பையனாச்சே....நான்தான் போய், மயானத்தில் இருக்கும் அந்த மாநகராட்சி அலுவலரிடம் சீட்டு வாங்கி வருவேன் "மாரியம்மாள், வயது 75, மரணத்திற்கான காரணம் முதுமை " - இது போல...

சுடுகாட்டில், எங்கள் உறவினர்களுக்கு, அர்ஜுனன்தான் வெட்டியான். அர்ஜுனனும் எங்கள் தூரத்து உறவினர் வேந்தன் சித்தப்பாவும் திருவாப்புடையார் கோவில் ஸ்கூலில் classmates. வேந்தன் சித்தப்பாவின் அப்பா, அதாவது எங்கள் தாத்தா ஒரு சுதந்திர போராட்டத் தியாகி. 1990-களில் அவருக்கு வயது 95-க்கு மேல் இருக்கும். படுத்த படுக்கையாக இருந்தார். சந்திக்கும்போதெல்லாம் அர்ஜுனன் அடிக்கடி சித்தப்பாவிடம் சொல்வது, "வேந்தா , உங்க அப்பா செத்தார்னா, என்கிட்டத்தான் வரணும், நான் பஷ்பமா எரிச்சுக் குடுத்திடறேன்."

அப்போதெல்லாம் மின் மயானம் வந்திருக்கவில்லை. ஒரு நாளைக்கு சராசரியாக அர்ஜுனனுக்கு 3-க்கும் மேற்பட்ட customers வருவார்கள் (வாடிக்கையாளர்கள் அல்ல!). கலெக்டர் உத்தியோகம் போலத்தான் 24 X 7. எப்படியும் மாதம் 20,000-க்கும் மேல்தான் வருமானம் இருக்கும். அப்போதைய கலெக்டர் கிரிஜா வைத்தியநாதனின் அதிகாரபூர்வ சம்பளத்தைவிட மிக அதிகம்.

அடுத்தமுறை ஒரு துக்கத்திற்கு மயானத்துக்குப் போனபோது, அர்ஜுனனுக்குப் பதிலாக வேறு ஒரு வெட்டியான் வந்திருந்தார்.  அர்ஜுனன்  இறந்து 2 வாரமாகி விட்டதாகச் சொன்னார்கள்.

தாத்தா அதற்குப்பிறகும்  5 ஆண்டுகள் உயிரோடு இருந்தார்.

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1