யாழ்ப்பயணம்

9 நாட்கள் இனிய  இலங்கைப்பயணத்தில் 1 நாள்தான் யாழ்ப்பாணம். அங்கே பார்ப்பதற்குக் கூட மிக அழகிய இடங்கள் எல்லாம் இல்லை. ஆனால் இன்னமும் யாழ்தான் மனதில் நிரம்பி வழிகிறது. ஏனென்றால் அது மட்டுமே உணர்வு பூர்வமாக அமைந்தது.


உடன் வந்த நண்பர்  குடும்பத்தாரின் ஆர்வங்கள் வேறாக இருந்ததால் யாழ்ப்பாணம் வரவில்லை. இரண்டு குடும்பமும் தம்புலா  குகைக் கோயில் பார்த்தபிறகு, அவர்கள் தெற்கே போய்விட, நாங்கள் மட்டும் கிளம்பி அனுராதபுரம் வந்து, யாழ்ப்பாணத்துக்கு தொடர்வண்டி (புகையிரதம்!) பிடித்தோம். மீட்டர் கேஜ் பாதையில் 3 மணி நேரம் பயணம். அனுராதாபுரத்திலிருந்து வடக்கே செல்லும் ரயிலில் பெரும்பாலும் தமிழர்கள்தான் கூட வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா? அதில் தம்புலா, அனுராதாபுரம் எல்லாம் வருகிறது. அந்த இடங்கள் பற்றி எழுதுவதற்காகவே  1950-களில் கல்கி இலங்கை சென்று திரும்பியிருக்கிறார்.

லண்டன் ஹவுன்ஸ்லோ ,வெம்பிலி , ஈஸ்ட் ஹாம், சிங்கப்பூர் லிட்டில் இந்தியா எல்லாம் நீங்கள் வெளி நாட்டில் இருப்பதைப்போல ஒரு உணர்வையே கொடுக்கும். ஆனால் வட இலங்கை அப்படி அல்ல. நீங்கள் தமிழ்நாட்டின் உள்ளே ஒரு ஊரில் இருப்பது போலவே  உணர்வீர்கள்.

யாழ்ப்பாணம் ஊர் மதுரை போலவே இருப்பதாக பின்னர்  மகிழ்நன் சொன்னான்.அது ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போதே தெரிந்து விட்டது. 3 கிலோ மீட்டர் ஆட்டோவில் போவதற்கு 500 ரூபாய் கேட்டார்கள். 300 ரூபாய்க்கு ஒத்துக்கொண்ட ஒரு வேன் ஓட்டுனரை மற்றவர்கள்  கழுவிக்  கழுவி ஊற்றினார்கள்

 "தட்டாதெரு ஜங்சனுக்கு 300 ரூபாய்க்கு போறீயே , இதுக்கு நீ, நல்லூர்க் கோயில்ல பிச்சை எடுக்கலாம்!"

மறுநாள் காலையில் வெளியில் கிளம்பிப் போய் தமிழ் தினசரி செய்தித் தாள்கள் வாங்கி வந்தேன். 2009 கடைசிப் போரில் காணாமல் போனவர்களைப்  பெற்றோர்களும், உறவினர்களும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். போர் முடிந்தும் தீராத கொடுமை ! முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை யார் ஒருங்கிணைப்பது என்று ஒரு சர்ச்சை வடக்கு மாகாண அரசுக்கும், யாழ் பல்கலை மாணவர்களுக்கும் போய்க்கொண்டிருந்தது

இலங்கையில்  (அல்லது எந்த ஒரு நாட்டிலும்)  தமிழ் மக்களின்  சாதிக்கலாச்சாரத்தைத் தெரிந்து கொள்ள எளிய வழி, அவர்களுடைய matrimonial பக்கத்தைப் பார்ப்பதுதான். matrimonial பக்கங்களில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. தமிழ் நாட்டு அளவுக்கு சாதிகளும், அதன் உட்பிரிவுகள் இல்லை, அவ்வளவுதான். மற்றபடி தமிழன் அங்கேயும் அப்படித்தான்.

அப்படியே நடந்து போனால், தெருமுனைக் கடையில் சூடாக சுசியமும், பருப்பு வடையும் கிடைக்கிறது. ஆகா, இதுவல்லவா தமிழ் மண் !

நாங்கள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் எங்களுக்காக, ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு 55 வயது இருக்கும். நிறைய பேசிக்கொண்டே வந்தார். அவரைப்போல ஒருவரைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.

யாழ்ப்பாணக் கோட்டையைக் காண்பிக்கும்போது சொன்னார். "இந்தக் கோட்டையைப் பிடிக்கத்துக்கு எத்தன பொடியன்கள் உசிரக் கொடுத்துதுகள், இப்போ ஏதாவது பிரயோசனம் உண்டா "

நாங்கள் போகும்போது யாழ்க் கோட்டைக்குள் விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. அழகு தமிழில் அறிவிப்புகள். தமிழில் இது போல அறிவிப்புக் கேட்டே பல நாட்கள் ஆகி விட்டன, காதிலே  தேன்! .

ஒட்டப்பந்தயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கான சாப்பாட்டுப் போட்டி. கையைப் பின்னால் கட்டிக்கொண்டு வாயால் கவ்வி 'பன்' சாப்பிடும் போட்டி. ஐயோ, இதையெல்லாம் மதுரை மேலப்பொன்னகரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது.

அடுத்து யாழ்ப்பாண நூலகம். மிகப் புகழ் பெற்ற யாழ் நூலகம் பல அரிய நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் கொண்டிருந்தது.அது அப்போதைய அமைச்சராக இருந்த  லலித் அதுலத் முதலி உட்பட்ட  இன வெறியர்களால் 1981 இல்  முற்றிலுமாக எரிக்கப்ப் பட்டது.  இப்போது  மீண்டும் புனரமைக்கப் பட்டுள்ளது.  இப்போதும் நூலகத்தின் Physical Record Management - மிகச் சிறப்பாக இருக்கிறது.

நூலகத்தின்  பெண் ஊழியர்கள் என் மனைவியுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"இதுக உங்க பிள்ளைகள் தானே ?"

"ஆமா "

"அவர் உங்க husband ஆ?"

"ஆமா"

"கல்யாணமாயிட்டு, உங்க ஊரிலே  நெற்றியில் கறுப்புப் பொட்டு வைப்பாங்களா ?"

"அதிலே என்ன அதுவும் ஒரு கலர் தானே!"

"இங்க உங்க உறவுக்காரங்க யார் இருக்காங்க?"

"யாரும் இல்லையே.. நாங்களாத்தான்  டூர் வந்தோம்"

அவர்களின் வியப்பு எங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உறவினர் யாரும் இல்லாமலே, தமிழ்நாட்டில் இருந்து  சுற்றுலாவாக வந்தோம் என்பது.

அதன்பின் சங்கிலியான் கோட்டை பார்த்தோம். ஒரு 3 படுக்கையறை வீட்டை விட சற்றே பெரிய கட்டிடம். இடிபாடுகளுடன் பராமரிப்பு அதிகமில்லாமல் இருக்கிறது.

யாழ் பல்கலைக் கழகம் வழியாக எங்கள் ஆட்டோ போனது. இங்கு வைத்துதான் குட்டிமணியும், தங்கதுரையும் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்று ஓட்டுநர் சொன்னார்.

1996-க்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் சண்டை இல்லை என்றாலும், போரின் பாதிப்பு அதிகமாகவே இருந்திருக்கிறது.  சரக்குகள் எல்லாம் சாலை வழியாகவோ , ரயில் மூலமாகவோ  வர முடியாது. மக்களின் கொழும்பு பயணமும் கடல் வழியாகத்தான். அப்போதெல்லாம் ஒரு கிலோ சக்கரை 500 இலங்கை ரூபாய். மாலை 5 மணிக்குள் கடைகள் எல்லாம் மூடப்பட்டு விடுமாம்.  போருக்குப் பின் நிலைமை மாறி இருக்கிறது.

மாலை நல்லூர் கோவிலுக்குச் சென்றோம். புகழ் பெற்ற கோவில்தான் ஆனால் அவ்வளவு பெரிதாகவோ, கலைச் சிறப்புடன்  இருப்பதாகவோ தோன்றவில்லை.பொதுவாக எல்லா தமிழர்களும் தங்களை ஒரு கோவிலுடன் இணைத்துக்கொண்டு வாழ்கிறாற்போல தோன்றியது.

இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். தமிழ் பேசும் முஸ்லீம்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை.

பின்னவாலாவில் இருந்து தம்புலா நோக்கி வரும்போது எங்கள் கார் பழுதாகி நின்று விட்டது. எங்களுக்கு வேறு ஒரு கார் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த ஓட்டுநர் தமிழில் பேசினார்.

"ஓ அண்ணா,  நீங்க தமிழா?"

"இல்ல சார் நான் முஸ்லீம்"

விடுதியிலேயே அன்று இரவு கொழும்பு செல்ல ஈஸ்வரன் டிராவல்ஸ் இல் பதிவு செய்து கொடுத்தார்கள். ஆட்டோ ஓட்டுநரே எங்களைக் கூட்டிக் கொண்டு வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டார்.

ஆட்டோ ஓட்டுனருடனான உரையாடல்களை நினைத்துப்பார்க்கும்போது நடுவில் அவர் சொன்னது

" என்ன இருந்தாலும் மஹிந்த (ராஜபக்சே) செஞ்சது சாதனைதான், உலக நாடுகளோட துணையோட எப்படியோ சண்டையை நிறுத்திட்டாருல்ல!"

அது சரியா தவறா என்பதில்லை, ஆனால் தன் இளம்பிராயத்தை பெரும்பாலும் போரையொட்டிய சிக்கல்களிலேயே கழித்து விட்டு , இப்போது முதுமையை எதிர்கொள்ளும் ஒரு மனிதனின் கருத்தாக இது இருக்கக்கூடும்.


Comments

Post a Comment

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1