சொர்க்கத்தில் சேராது...!

முதலில் சலீம்தான் என்னைப் பார்த்தான். நான் பெங்களூர் போய்விட்டு சென்னை  திரும்பி வரும்போது சாப்பிடுவதற்காகப் பேருந்தை நிறுத்தியிருந்தார்கள். அவன் வேறொரு பேருந்தில் பெங்களூர் போகிறான்.

சலீம் எனக்கு 2 வருடம் கல்லூரி இளையன். கொஞ்சம் உருளைக்கிழங்கு போல இருந்தாலும் smart ஆக இருப்பான். முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும். அவனுக்கும், அவனுடைய வகுப்புத் தோழி சுகுணாவுக்கும் காதல். கல்லூரி நாட்களில்,   அட்மின் பிளாக்-ஐச் சுற்றி வந்தால் எப்படியும் ஒரு முறை இரண்டு பேரையும் சேர்த்துப் பார்த்து விடலாம். விடுமுறையாக இருந்தால்,இரண்டு பேரும், ஜங்சன் போவதற்கு, திருக்குறுங்குடியிலிருந்து  வரும் பத்தரை மணி  கணபதி பஸ்சைப் பிடித்துவிடுவார்கள்.

சுகுணாவும் அழகுதான். எனக்குத் தெரிந்து, சலீமைத் தவிர 13 பேர் அவளைக் காதலித்தார்கள்.... ஒருதலையாக, அவளுக்கும் கூடத்  தெரியாமல்!

"எப்படி இருக்கீங்க "

என் பெயர் அவனுக்கு ஞாபகம் இல்லை என்பது தெரிந்தது..

" நான் நல்லா இருக்கேன் சலீம் .பெங்களூர் site inspection, முடிச்சுட்டு சென்னை போய்க்கிட்டு இருக்கேன், நீ எப்படி இருக்க"

"நல்லா இருக்கேன்"

"உன் wife எப்படி இருக்கா?'

அவன் சற்று நேரம் என்னை உற்றுப்பார்த்தான்

""நல்லா இருக்காங்க"

கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னான்.

"என் wife சுகுணா இல்ல"

அதற்குப் பிறகு நான் அதைப்பற்றிக் கேட்கவில்லை.  வேறு என்ன பேசினோம் என்பது ஞாபகம் இல்லை. அதற்குள் பேருந்து கிளம்பி விடவே விடை பெற்றோம்.

அதற்கு சில வாரங்களுக்குப் பிறகு என்னுடைய கல்லூரி வகுப்புத் தோழர்கள் இருவரைப்  பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன் . நான்  சலீமைப் பார்த்ததையும் , விஷயத்தையும் சாதாரணமாகச் சொன்னேன்.

 அப்போது வரை அமைதியாக இருந்த அந்த நண்பர்களில் ஒருவன்  கோபமாக

" ஏண்டா இவனுங்க இப்படி பண்ணுறானுங்க....அவங்களும் கல்யாணம் பண்ண மாட்டாங்க ... அடுத்தவனோட சான்ஸ் -ஐயும் கெடுத்துக்கிட்டு...சேய் !"

இத்தனைக்கும், இதைச் சொல்லும்போது அவனுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன.

முக்கியமாக, அந்த 13 பேர் லிஸ்டில் இவனது பெயர் இல்லை!

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1