உயிர் கொடுத்த தந்தை

மகாபாரதத்தை படிக்கவில்லை என்றால், நீங்கள் தேவ் தத் பட்நாயக்கின் 'Jaya - An Illustrated Retelling of Mahabharatha ' -ஐப் படிக்க ஆரம்பிக்கலாம், மிக எளிய நடை . நீங்கள் படித்திருந்தாலும் இது வேறு ஒரு பார்வையில் உங்களைப் பார்க்க வைக்கும். தமிழில் விகடன் பிரசுரமாக சாருகேசியின் மொழி பெயர்ப்பில் வந்துள்ளது. எனக்குத் தமிழ்தான் வசதி.

மகாபாரதத்தில் பல இடங்களில் 'Biological Fathers' வருகிறார்கள் . மிக முக்கிய பாத்திரங்களான திருதராஷ்டிரனும் , பாண்டுவும், விதுரனும் வியாஸருக்குப் பிறந்தவர்கள். ஆனால் அவருக்கு அவர் குழந்தைகள் என்று எந்த உரிமையும் இல்லை. அதுபோல் பாண்டவர்கள் ஐவருக்கும் பாண்டு உடல் ரீதியான தந்தை இல்லை.

 மகாபாரதத்தில் இந்த விதி consistent ஆக இருக்கிறது. "விதை விதைத்தவன் யாராக இருந்தாலும், விளைச்சல் நிலஉரிமையாளனுக்கே சொந்தம்". 

எனக்கு அரவிந்த் சாமி - டில்லிக்குமார் உறவு பற்றி பாரதி மணி எழுதியது நினைவுக்கு வந்தது. அவருடைய எழுத்தில் அப்படியே கொடுக்கிறேன்.


தில்லி குமாரின் பூர்வாச்ரமப்பெயர் பஞ்சாபகேசன். அறுபதுகளில் தில்லிக்கு வந்து வேலைபார்த்தார். நடிகர் ஆர்.எஸ். மனோகரின் மருமகன். தில்லி நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். எனது நெருங்கிய நண்பர். இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார். ஆல் இந்தியா ரேடியோவில் பிரதி எடுக்கும் வேலையிலும் இருந்தார். பிறகு VD Swami & Co.,வில் கிளார்க்காக சேர்ந்தார்.

வி.டி. ஸ்வாமி சென்னையில் டாட்டா ஸ்டீல்ஸ் வினியோகஸ்தராக இருந்து சுயமாக காவேரி ஸ்ட்ரக்சுரல்ஸ் போன்ற பல எஃகு கம்பெனிகளுக்கு சொந்தக்காரர். சென்னை சங்கர நேத்ராலயா நிறுவனர்களில் ஒருவர். அவருக்கு சென்னை, தில்லி, கல்கத்தா, பம்பாய் ஆகிய இடங்களில் கிளைகள் இருந்தன. சென்னையிலிருந்த முதல் மனைவிக்கு மேல் மற்ற இடங்களிலும் அவருக்கு மனைவிகள் இருந்தனர். A Captain has a wife in every Port! மற்றவர்களைப்போல் மறைமுகமாக “வைத்து’க்கொண்டிருக்கவில்லை. மற்ற மூவரையும் நாடறிய திருமணம் செய்திருந்தார்.

ஸ்வாமியின் மனைவி அழகான நாட்டிய நங்கை CVS வசந்தா. அவருக்கு இன்னும் அழகான ஒரு தங்கையும் கூட இருந்தார். தில்லி ஜோர்பாக்கில் ஒரு பெரிய பங்களாவில் குடியிருப்பு. ஸ்வாமி தில்லி வரும்போது வேலை விஷயமாக குமார் அவரை சந்திப்பது வழக்கம். தெரிந்தும் தெரியாமலும் லேசாக ஒன்றரைக்கண் இருந்தாலும், குமார் ஒரு ஆணழகன். மச்சினியைப்பார்த்தார் காதல்வயம் கொண்டார். இது தெரிந்த முதலாளி ஸ்வாமி “பிச்சுப்புடுவேன்!’ என்றார். ஆனாலும் தெய்வீகக்காதல் அல்லவா?....... தோற்கலாமா? ஒரு நாள் ஸ்வாமிக்கு பிடிக்காமலேயே அவருக்கு “சகலை” ஆகிவிட்டார் குமார்!

கிளார்க்காக இருந்த சகலையை தில்லி ஆபீசின் இன் சார்ஜாக மாற்றினார் ஸ்வாமி அவர்கள். குமாருக்கு அழகான இரு ஆண் குழந்தைகள். பாவம்....பெரியவர் ஸ்வாமிக்கு நான்கு மனைவியரிடமிருந்தும் ஒரு குழந்தை பிறக்கவில்லை! அந்த ஏக்கம் அவருக்கிருந்தது!

ஒருமுறை தில்லி வந்தபோது, குமாரின் குழந்தை அரவிந்த் பெரியப்பா ஸ்வாமியின் மடியில் போய் உட்கார்ந்தான். என்ன ஒரு மாயமோ? பெரியப்பா தான் சாப்பாடு ஊட்டணும்....தூங்கப்பண்ணணும் என்று அவரை விட்டு அம்மாவிடம் கூட போக மறுத்தது குழந்தை! சென்னை போக ஏர்போர்ட் கிளம்பும்போதும் குழந்தை அவரிடம் பெவிக்கோல் போட்டு ஒட்டிக்கொண்டது. ‘சரி... அங்கே போய் கூடவரும் சந்துருவிடம் குழந்தை போறதானு பார்க்கிறேன். இல்லையென்றால் என்னோடு மதராஸ் வரட்டும். குழந்தைக்கு டிக்கெட் வேண்டாம். அடுத்தவாரம் நீங்க தான் வரீங்களே!” என்று சென்னைக்கு அழைத்துப்போனார். அடுத்த வாரம் சொந்த அப்பா அம்மா சென்னைக்கு வரும்போது குழந்தை அவர்களை மறந்திருந்தது! அன்றிலிருந்து ஸ்வாமி தம்பதியர் தான் அரவிந்தின் அம்மா அப்பா! பிறகு சட்டப்படி ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டார்.

பெரியவர் ஸ்வாமியின் மறைவுக்குப்பிறகு அரவிந்த்ஸ்வாமி தான் பூரா சொத்துக்கும் அதிபதி. பிறகு தான் அவர்களுக்குள் மனஸ்தாபம். குமாரை கம்பெனிப்பொறுப்புக்களிலிருந்து நீக்கினார். தில்லிகுமார் சென்னை வந்து சீரியல்களில் நடிக்கத்தொடங்கினார். மேல் விவரங்கள் இப்போது வேண்டாம்! நமக்குத்தேவையில்லாதது!

இது தான் குமார்--ஸ்வாமியின் -- குமாரஸ்வாமி அல்ல -- சிறுகதை!"

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1