எங்கேயோ கேட்ட குரல் ....


இப்போதெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளி கல்லூரி நண்பர்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் எந்த position-இல் இருந்தார்களானாலும் ஆச்சர்யமாக இருப்பதில்லை, அதை விட அது பற்றி ஒரு அக்கறை இருப்பதில்லை.எனக்குக் கொஞ்சம் முதிர்ச்சி வந்து விட்டதென்று நானே நினைத்துக்கொண்டிருந்தேன், சென்ற வாரம் வரை. ஏனென்றால், என் பள்ளி கல்லூரி நண்பர்களில் CEO, CTO முதல் சைக்கிள் ரிக்சா இழுக்கும் நண்பன் வரை எல்லா தரப்பினரும் உண்டு.
2ஆம் வகுப்பில் என்னுடன் படித்த முருகன், பெரியார் நிலையத்தில் ரிக்சா இழுத்துக் கொண்டிருந்தான். மதுரையில் இருந்த காலங்களில் பெரியார் நிலையம் வரும்போது என்னைப் பார்த்துவிட்டால் வாயில் கஞ்சா புகையும் , சிவந்த கண்களில் பாசமும் பொங்க "உதயா, எப்படி இருக்க, டீ சாப்பிடு உதயா" என்று கூப்பிடும்போது என்ன செய்வதென்று தெரியாது. அதற்கு காரணம் அவனுடன் சேர்ந்து டீ சாப்பிட எனக்கு தயக்கம் எல்லாம் இல்லை. என் கையில் இருக்கும் காசு பெரியார் நிலையத்தில் பேருந்து ஏறினால் தீக்கதிர் ஆபீஸ் வந்து இறங்கும் வரைதான் இருக்கும்.
சென்ற முறை ஒரு வழக்கறிஞரிடம் பேசும்போது, என் பள்ளி நண்பன் ஒருவனுக்கு இந்த முறை நோபல் பரிசு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதென்று சொன்னார் . அது உண்மையாக இருக்கலாம் , ஆனால் எனக்கு ஆச்சர்யமெல்லாம் இல்லை.
இப்படியிருக்க, சென்ற வாரம் நான் சந்தித்த அந்த பள்ளி நண்பன் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தான்.
ஒரு வங்கி வேலையாக GN செட்டி சாலையில் நானும் என் மகனும் நடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போதுதான் கண்ணதாசன் சிலை சிக்னல் அருகே, பார்வையற்ற அந்த பள்ளி நண்பனைப் பார்த்தேன்.
பேசலாமா, பேசக்கூடாதா என்ன செய்யலாம் என்று இரண்டு நிமிடங்கள் தயங்கி நின்றேன்.
எவர் ஒருவருமே தனக்குத் தெரிந்தவர்கள் தன்னை இந்தக் கோலத்தில் பார்ப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் உண்மையிலேயே, இந்த சூழ்நிலையில் யாரேனும் தெரிந்தவர் உதவியை அவன் எதிர் பாத்திருக்கலாம் அல்லவா ?
துணிந்து அவனைப் பெயர் சொல்லி அழைத்து விட்டேன்.
"யாரு , யார் அது"
"நான் பிரிட்டோ ஸ்கூல், உதயசங்கர், நீங்க எப்படி இருக்கீங்க ? "
"நான்.. நான் .. நீங்கதான் பார்க்குறீங்கல்ல"
"என்னை தெரியுதா, ஞாபகம் இருக்கா?"
"நல்லா ஞாபகம் இருக்கு, நல்லா இருக்கீங்களா? வித்யா சங்கர் என்ன செய்யறார்?"
எனக்கு இது ஒரு பெரிய அங்கீகாரம். 31 வருடங்கள் முன்பு வகுப்பில் முதலிடத்துக்குப் போட்டி போடும் இரண்டு நண்பர்களை, வெறும் குரலை மட்டுமே கேட்டு நினைவில் வைத்திருப்பது.
"நான் நல்லா இருக்கேன் ...வித்யா டாக்டரா இருக்கார், உங்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கா "
"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு"
தொடர்ந்து அவனே அவனுக்கு மிகவும் பிடித்த, அவனை மிகவும் பிடித்த ஆசிரியர் பற்றி பேசினான். அவனுடைய நண்பர்கள் பலரைப் பற்றிக் கேட்டான். சொல்லிக்கொண்டு வந்தேன். பார்வையற்ற மற்ற நண்பர்களைப் பற்றி அவன் சொன்னான்.அவனைப் பெயர் சொல்லி அழைத்ததில் அவனுக்கு ஆச்சர்யம்.

அவன் தன் மனைவியை (அவரும் பார்வை இழந்தவர்தான்) அறிமுகப்படுத்த, நான் என் மகனை அறிமுகப்படுத்திய போது கையைத் தொட்டுப்பார்த்து நெகிழ்ச்சி அடைந்தான்.
சேப்பாக்கத்தில் 5000 ரூபாய் வாடகையில் ஒரு மேன்ஷனில் தங்கி இருப்பதாகச் சொன்னான்.
பேசுவதில் அவனுக்குத் தயக்கமெல்லாம் இல்லை, நான் எதிர்பார்த்த கூச்சம் இல்லவே இல்லை.
" சரி ஏன் இப்படி?, இந்த சூழல்ல உங்களுக்கு நான் என்ன உதவி பண்ண முடியும் ? "
" BA history 2வது வருஷம் discontinue பண்ணிட்டேன், என் wife BA English Literature முடிச்சுருக்காங்க... அவங்களுக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும் "
"சரி, உங்க கிட்ட போன் இருக்கா? இல்ல போன் நம்பர் ஏதாவது இருக்கா?"
" என்கிட்டே இல்லையே"
சிக்னல் பச்சை வந்து வாகனங்கள் நகரும் அந்த இடைவெளியில் அவன் மனைவி வந்து...
"இதெல்லாம் temporary தான் .. permanent-ஆ ஒரு solution கிடைச்சுதுன்னா நாங்க அதுக்குப் போய் விடுவோம்"
சிக்னலில் நிற்பவர்கள் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். சிலர் கையில் காசு எடுத்து வைத்துக்கொண்டு, நண்பனின் மனைவி கையில் இருக்கும் உண்டியலில் போடத் தயாராக நின்றார்கள்.
நானும் என் பங்களிப்பைச் செய்துவிட்டுக் கிளம்பும்போது முதலில் தொடர்பு எண் இல்லை என்றவன், என்ன நினைத்தானோ , பைக்குள் இருந்து ஒரு போனை எடுத்தான். என்னை missed call கொடுக்கச் சொல்லி எங்கள் எண்களை நாங்கள் பரிமாறிக்கொண்டோம்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்படி ஒரு நிலைமைக்கு வந்திருக்கலாம். ஆனால், பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கிய அவன் இப்போதும் புத்திசாலிதான். எனக்கு என்னவோ அவர்கள் இதற்குப் பழகி விட்டது போலத் தெரிந்தது. நான் அவர்களைக் குறை சொல்லவில்லை. நான் அதிக பட்சம் 10 நிமிடங்கள் நின்றிருப்பேன். அதற்குள் எவ்வளவு வசூல் ! எல்லாமே ரூபாய் நோட்டுகள்தான்.இதை விட்டு வர மனம் வராது என்பது என் கணிப்பு.
நண்பன் கொடுத்த கைபேசி எண்ணை நினைவில் வைக்காமல், என்னுடைய கைபேசியில் இருந்து அழித்து விட்டேன்.
என்னுடைய தொலைபேசி எண் அவனிடம் இருந்தது, இப்போதும் கூட இருக்கலாம்...எனக்குத் தெரியும், அவனிடமிருந்து எந்த ஒரு அழைப்பும் வராது என்று....! ஒரு வேளை வந்தால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1