கவி (Gavi ) ஒரு தனிப்பயணம் - 1
ஏற்கனவே பார்த்த இடத்தை மறுபடி பார்ப்பதில் என்ன thrill இருக்கிறது என்று கேட்டான் மகிழ்நன். 2022 இல் கவிக்கு நாங்கள் குடும்பத்துடன் போய் இருக்கிறோம். இப்போது மீண்டும் 2026 ஜூன் மாதம் நான் மட்டும் கவிக்கு கிளம்பியதால் இந்த கேள்வி.
உண்மையிலேயே இரண்டு பயணத்திற்கும் பெரிய வேறுபாடுகளும், இப்போது சென்றதில் புதிய அனுபவங்களும் இருக்கின்றன.
சென்ற முறை நாங்கள் சென்றது காரில்,குடும்பத்துடன். இந்த முறை நான் மட்டும் பேருந்தில். சென்ற முறை ஏப்ரல் மே மாதத்தில் கேரளத்தின் கடும் கோடையில் இந்த முறை ஜூன் மாதம் பருவ மழை தொடங்கிய பின்.
அதுமட்டுமல்ல, இது ஒரு பட்ஜெட் பயணம். கதவு முதல் கதவு வரை எடுத்துக்கொண்டால் எல்லாமே பொதுப் போக்குவரத்து மூலம் மட்டுமே. எங்குமே டாக்ஸி அல்லது குறைந்த பட்சம் ஆட்டோ கூட எடுக்கவில்லை.
Getting drenched in Meghalaya என்றொரு சுற்றுலா உண்டு. தீவிர பருவ மழை காலத்தில் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியைச் சுற்றியுள்ள கொட்டும் அருவிகளை சென்று பார்ப்பது. ஆனால் எனக்கு மேகாலயா செல்ல முடியாமல் வேறொரு பயணத் திட்டம் உள்ளது.
அப்படியானால் அதற்கு முன் தென் மேற்கு பருவ மழை காலத்தில் கேரளம் அல்லது கர்நாடகாவின் மலைப்பகுதிகளைப் பார்ப்பது ஒரு மா(ஆ)றுதல் பயணமாக அமையும் என்று நினைத்தேன். அதில் கேரளத்தின் இடுக்கி, வாகமண், கவி(Gavi) மற்றும் கர்நாடகாவின் ஆகும்பே இவையெல்லாம் பட்டியலில் இருந்தன. இதில் கவிதான் குறைந்த செலவில் பயணப்பட ஏற்ற இடம்.
கவி கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்தின் காடுகளுக்கு இடையில் அமைந்துள்ள சூழலியல் சுற்றுலா மையம் (Eco Tourism centre). கேரள வனத்துறை (KFDC) இதை ஏற்று நடத்துகிறது. தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளியில் இருந்து 28 கிமீ தூரத்திலும், மேற்கே பத்தனம்திட்டாவில் இருந்து 95 கிமீ தூரத்திலும் கவி உள்ளது.
ஒருநாள் கவியில் அறைகளிலோ அல்லது கூடாரத்திலோ தங்கலாம். இரண்டு பேருக்கு என்றால் 5600 ரூபாய் கட்டணம். இதில் மூன்று நேர Buffet உணவு, மாலை தேநீர்,தங்குமிடம், உங்களுக்கேயான வழிகாட்டி உதவியுடன் ஒரு trekking , ஒரு படகு சவாரி, மற்றும் வனத்துறையின் பேருந்தில் ஒரு safari இவையெல்லாம் அடங்கும்.
என்னுடைய பயணம் முற்றிலும் பொதுப் போக்குவரத்து என்பதால் வார நாட்களில்தான் சரிப்படும். செவ்வாய் இரவு சென்னையில் இருந்து செங்கண்ணூருக்கு ரயில். புதன் காலை செங்கண்ணூர். அங்கிருந்து பத்தனம்திட்டாவுக்கு 25 கிமீ தூரத்திற்கு பேருந்து. தொடர்ந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் எல்லா நிறுத்தங்களிலும் நின்று ஆட்களை ஏற்றிச் செல்கின்றன. ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலான பயண நேரத்தில் அங்கும் 90-இன் தமிழ் பாடல்கள்தான் பேருந்தில் ஒலித்தன.
பத்தனம்திட்டா KSRTC பேருந்து நிலையத்திற்கு எதிரேயே விடுதி எடுத்திருந்தேன். ஏனென்றால் அடுத்த நாள் காலை 5:30 க்கு கவி வழியாக குமுளி செல்லும் பேருந்தை பிடிக்க வேண்டும். அன்று கொஞ்ச நேரம் இருந்ததால், மதிய உணவுக்குப் பின் தூங்கி எழுந்து, ஆரன் மூலா இல் உள்ள பார்த்தசாரதி கோவிலைப் பார்த்து வரலாம் என்று சென்றேன். எல்லாமே பேருந்துதான். கோவில் தவிர ஆரன் மூலா இரண்டு விஷயங்களுக்கு பெயர் பெற்றது. ஒன்று அங்கு செய்யப்படும் உலோகத்தாலான முகம் பார்க்கும் கண்ணாடி (ஐரோப்பியர்கள் வரும் வரை நமக்கு உலோகம்தான் கண்ணாடி!), இன்னொன்று ஓணம் பண்டிகையையொட்டி அங்கு நடக்கும் படகுப்போட்டி.
![]() |
| ஆரன் மூலாபார்த்தசாரதி கோவில் |
கோவிலின் நிசப்தம் மிகுந்த வியப்பைக் கொடுத்தது. மாலை 6 மணிக்கு அவ்வளவு பெரிய கோவிலில் 5 அல்லது 6 பேர்தான் இருந்தார்கள். அவர்களும் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள். கேரளாவில் நிறையப்பேர் என்னைப்போல் இறை நம்பிக்கை இல்லாதவர்களாக மாறிவிட்டார்களா என்ன? ஒருவேளை ஐயப்ப சீசனில்தான் கோவில் களைகட்டும் என்று நினைக்கிறேன்.
கோவிலின் பக்கவாட்டில் படி இறங்கிச் சென்றால் பம்பா ஆறு இரு கரையும் தொட்டு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் பரப்பில் திடீரென ஏற்ற இறக்கங்கள் இல்லாவிட்டால் நதி ஒழுகிச்செல்வது சலனமில்லாமல்தானே இருக்கும். அதனால் மறுபுறம் தெரியும் மரங்களின் பிம்பங்கள் தண்ணீரில் தெளிவாகத் தெரிந்தன. என்னைத் தவிர யாரும் இல்லை, யாரும் வருகின்ற அறிகுறியும் இல்லை. நேரம் போவது தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.
![]() |
| பம்பா நதி |
கிளம்பி வரும்போது ஒரு கடையில் உலோகக் கண்ணாடி விலை கேட்டேன். மிகச்சிறிய கண்ணாடி நான்காயிரம் சொன்னார்கள். வேலைப்பாடு இருப்பதால் விலை இருக்கத்தான் செய்யும். எவ்வளவு இருந்தால் என்ன...நான் போனது விலை கேட்க மட்டும்தானே!
மீண்டும் பத்தனம்திட்டா...கேரளம் வந்துவிட்டு பரோட்டா - பீப் சாப்பிடாமல் செல்வது பாவம் என்பதால் அதன்படியே இரவு உணவை முடித்துவிட்டு படுத்துவிட்டேன்.
காலை நான்கரை மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து கிளம்பி விட்டேன். 5 மணிக்கெல்லாம் பேருந்து நிலையம் சுறுசுறுப்பாக இருந்தது. குமுளி செல்லும் பேருந்தைப் பிடிக்க பலர் காத்துக்கொண்டிருந்தார்கள்.
விடுமுறை நாட்களில் இந்த பேருந்து டெப்போவில் இருந்து கிளம்பும்போதே நிறையப் பேர் ஏறி விடுவார்களாம். இது வியாழக்கிழமை என்பதாலும் பள்ளிகள் தொடங்கி விட்டன என்பதாலும் இருக்கைகள் கிடைத்தன. அதிர்ஷ்ட வசமாக ஓட்டுனருக்கு பக்கத்துக்கு இருக்கையே எனக்கு கிடைத்தது.
பேருந்தில் இருப்பவர்கள் எல்லாம் Gavi Eco Tourism செல்பவர்கள் அல்ல. சிலர் மட்டுமே போகும் வழியில் உள்ள ஊர்களுக்கு செல்பவர்கள். நிறையபேர் journey is more important than destination என்ற கொள்கையுடன் பத்தனம்திட்டாவில் இருந்து கவி வழியாக குமுளி வரை செல்பவர்கள். வெறும் 208 ரூபாய் கட்டணத்தில் 75 கிமீ தூரத்திற்கு அடர்ந்த காட்டுக்குள் செல்லும் ஒரு சாகசப்பயணம் என்றே அவர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள் (இளைஞிகள் யாரும் என்னுடைய பேருந்தில் வரவில்லை என்பது ஒரு சோகம் !).
செல்லும் வழியில் பாய்ந்தோடும் ஆறுகள், கொட்டும் அருவிகள், அணைகள், காட்டு விலங்குகள் மான், காட்டெருமை, யானை, மலபார் அணில், பறவைகள் இருவாட்சி (Horn Bill), மீன்கொத்தி, பலவகை மலர்கள் கனிகள் என்று பார்ப்பதற்கு பலப் பல.... விபரம் தெரிந்த யாரும் இதை விரும்பாமல் இருக்க முடியாது!
காலை ஐந்தரை மணிக்கு கிளம்பிய பேருந்து சித்தார், சீத்ததோடு வழியாக 7 மணிவாக்கில் 40கிமீ தூரத்தில் இருக்கும் அங்கமூழி (Angamoozhy) வந்தடைகிறது. தமிழ் நாட்டில் இருந்து செல்பவர்களுக்கு அந்த 40 கிமீ தூரமே அடர்ந்த காடு போல் தெரிகிறது. அங்கமூழியில் ஒரு சிறிய உணவகத்தில் காலை உணவை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்பின் வழியில் எதுவும் கிடைக்காது. காலையிலேயே ஆப்பம், இட்லி, பரோட்டா தொட்டுக்கொள்ள பீப் , முட்டை மற்றும் கடலைக்கறி இவையெல்லாம் கிடைக்கின்றன. சேட்டன்கள் காலை உணவிலேயே புரோட்டீன் எடுத்துக் கொள்வது சிறப்பு.
உணவகத்தை ஒட்டியே பம்பாவின் துணை ஆறான (tributory). காக்கட் (kakkad) ஆறு நல்ல சப்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
![]() |
| காக்கட் ஆற்றின் பாலத்தில் |
அங்கமூழி செக் போஸ்ட் -இல் முன் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. 75 கிமீ காட்டுப்பயணம் எல்லோருக்குமானதல்ல. இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காட்டு விலங்குகளினால் நமக்கும், நம்மால் அவற்றிற்கும் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. 2025 அக்டோபர் மாதத்தில் Forest Watcher ஆக இருந்த பழங்குடி இளைஞன் ஒருவனை புலி அடித்துக் கொன்றுவிட்டது.
அங்கமூழிக்குப்பின் அடர்ந்த காடு தொடங்குகிறது. சாலை ஒரு பேருந்து மட்டும் செல்லும் சாலை ஆகி விடுகிறது. முதல் நாள் அடித்த காற்று மழையில், நிறைய இடங்களில் மூங்கில் மரங்கள் சாலையில் சாய்ந்திருந்தன. சினிமாவில் barricade-ஐ உடைத்துக்கொண்டு வாகனங்கள் செல்வது போல எங்கள் பேருந்து சென்றது.
பல இடங்களில் இதில் பேருந்து போக முடியுமா என்றே நினைக்க வைத்தது. சில இடங்களில் கீழே இறங்கி உடைந்திருந்த மரக்கிளைகளை அகற்றிவிட்டு பேருந்து மீண்டும் புறப்பட்டது.
![]() |
| சாலையின் குறுக்கேயுள்ள மரங்களை அகற்றும் பயணிகள் |
பல நேரங்களில் மேகங்களுக்கு உள்ளேதான் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். சாலையின் இருபுறமும் இருக்கும் மரங்களே கண்ணுக்குத் தெரியவில்லை. சென்னையின் கடும் அனல் காற்றில் இருந்து வந்த எனக்கு இவையெல்லாம் பேரானந்தம். ஆனால் இதில் ஒரு குறை என்னவென்றால் பல விலங்குகளை நம்மால் பார்க்க முடியாது. செல்லும் வழியெல்லாம் பல இடங்களில் "fresh" ஆன யானையின் சாணங்கள் கிடந்தன. ஆனாலும் ஒரு யானை கூட காணக் கிடைக்கவில்லை.
![]() |
| Nilgiri Langur |
வானம் கொஞ்சம் தெளிவான நேரத்தில் ஓட்டுநர் பேருந்தை கக்கி (kaki)அணையின் ஓரத்தில் 5 நிமிடம் நிறுத்தினார், போட்டோ எடுத்துக்கொள்ள.. நாங்கள் பார்த்துக்கொண்டிரும்போதே ஒரு ஜோடி இருவாட்சிகள் பறந்து வந்து மரக்கிளையில் அமர்ந்தன. நான் படம் எடுப்பதற்குள் பறந்து விட்டன.
![]() |
| இருவாட்சி - இணையத்தில் கிடைத்த படம் |
கேரளத்தின் மாநிலப் பறவை இருவாட்சி. இதன் ஜோடிகள் பிரிவதில்லை என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அடைகாக்கும் காலத்தில், பெண் பறவைக்காக இரை தேடிச்செல்லும், ஆண் இருவாட்சி திரும்பவில்லை என்றால், பெண் இருவாட்சி உயிர் துறக்கும் என்று சொல்கிறார்கள். தெய்வீகக் காதலின் சின்னமாக இப்பறவை கருதப்படுகிறது
அங்கிருந்து கிளம்பினால் 10 மணி வாக்கில் கவி KFDC stay - இல் என்னை மட்டும் இறக்கிவிட்டு பேருந்து சென்றது.
![]() |
| Gavi Dam |
















Super.
ReplyDeleteNice flow of information and interesting to read and inspiring to visit places after reading your journal
ReplyDelete