கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - அணினி உள்ளூர்
சில நாட்களுக்கு முன் என்னுடைய ஆபீஸ் சீனியர் ஒருவர் என்னுடைய பயணத்தைப் பற்றி விசாரித்தார். அவரது எண்ணம் இப்படி என்னைப்போல் பயணிப்பதற்கு பணம் செலவழிப்பது சரியல்ல என்பது. பலரது எண்ணமும் அதுதான். நான் என்னுடைய பட்ஜெட்-க்குள் மட்டுமே எண்ணி எண்ணி செலவழிக்கிறேன் என்றாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரிடம் பேசியபின்தான் உண்மையில் நான் கொஞ்சம் பணத்தை புதிய அனுபவமாகவும் , மகிழ்ச்சி நிறைந்த நினைவுகளாகவும் பரிமாற்றி வைத்துக் கொள்கிறேன் என்று எனக்கே புரிந்தது.
மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்ட பின், நடந்தே சென்றோம் , மொத்த அணினி நகரத்தையும் மேலே இருந்து பார்க்க. என்ன மொத்த நகரம் ( மக்கட் தொகை 2000 பேர்! 6 தெருக்கள், மிஞ்சிப்போனால் 500 வீடுகள்!! ).
இன்று எங்கள் டிரைவர் ஆஷிக்கிற்கு கொஞ்சம் ஓய்வு. எங்களுடன் அணினியில் chalohoppo -வின் உள்ளூர் பிரதிநிதியாக அமிஷியும் சேர்ந்துகொண்டாள். நாங்கள் அணினியிலிருந்து கிளம்பும் வரை அவள் எங்களுடன் இருந்தாள்.
45 நிமிடம் மேட்டில் ஏற வேண்டியிருந்தது. அதன்பின் view point இல் இருந்து நாம் பார்க்கும் அணினி வேற லெவல்! யாராவது அணினி-யின் சில போட்டோக்களை காண்பித்து இது ஸ்விட்சர்லாந்து என்றோ ஆஸ்திரியா என்றோ சொன்னால் நம்பி விடுவோம்.
போட்டோக்களைப் பாருங்களேன்! நேரில் பார்க்கும்போது இன்னும் பல மடங்கு பிரமிப்பை உருவாக்கும் இடம். இன்னும் வணிகமயமாக ஆகாததால், பெரிய கட்டிடங்கள் ஏதும் இங்கு இல்லை. அதனால் அதன் இயற்கை அழகு கொஞ்சமும் குறையாமல் உள்ளது.
நீல நிற வானம், கொஞ்சம் வெண்ணிற மேகங்கள் , அதன் கீழ் அடர் நீல நிற மலைத்தொடர், தூரத்தில் கரும்பச்சை மரங்கள். பக்கத்தில் உள்ள தாவரங்கள் எல்லாம் அடர் மஞ்சள் நிறத்தில். நடுவில் தெரியும் அணினியின் சில வீடுகள் அல்லது கட்டிடங்கள்!
த்ரி (Dri) மற்றும் மத்து (Mathu) இரண்டு நதிகள் இரு புறமும் அமைந்த சிறிய சமவெளிதான் அணினி. இங்கு ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது . 2021-இல் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் ஒரு தளம் அணினி நகரத்தில் உள்ளது.
வடகிழக்கில் வசிக்கும் கணிசமான பழங்குடிகள், திபெத் அல்லது அதற்கும் வடக்கே இருந்து நெடுங்காலம் முன்பே இடம்பெயர்ந்து வந்தவர்கள். திபெத் முதல் மங்கோலியா வரை பெரும் பாலைவனம் தான். ஒரு வளமான வாழ்விடம் தேடி இமயமலையை கடந்து தெற்கு நோக்கி வரும்போது அணினி சமவெளியில் தங்கி விட்டவர்களின் வழித்தோன்றல்கள்தான் இங்கு இப்போது இருக்கும் மக்கள். இவர்களில் பலர் இன்னும் இடம் பெயர்ந்து ரோயிங் நகரத்திலும் வாழ்கிறார்கள்.
இங்கு வசிப்பவர்கள் அனைவருமே "இது-மிஷ்மி" பழங்குடிகள். ஆனால் சிலர் நினைப்பது போல அவர்கள் வண்ண வண்ண பழங்குடி உடைகள் அணிந்து இருப்பதில்லை. பொதுப்பழக்கத்துக்கு வந்து விட்டார்கள்.
அன்று மதிய உணவு, அணினியின் இருக்கும் "இது-மிஷ்மி" ஒருவரின் வீட்டில். இந்த பயண நோக்கங்களில் ஒன்றாக இதை Chalohapppo அமைத்திருந்தது.
பெரும்பாலும் மூங்கில்கள் கொண்டு செய்யப்பட்ட ஒரு வீடு. வெயிலுக்கு இதமாகவும், குளிருக்கு சற்று வெதுவெதுப்பாகவும் இருக்கிறது. மூங்கில் இவர்களின் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது. வீடு தவிர பாய், கூடைகள், சிறு பாலங்கள், உணவை உள்ளே வைத்து சமைக்க, சில சமயம் மூங்கிலே உணவாக , ஏன் மீன் வலை கூட மூங்கிலில் செய்கிறார்கள்.
அவர்கள் வீட்டில் தயார் செய்யப்பட சிவப்பு அரிசியினால் ஆன பீர்-ஐ சிறு குவளைகளில் கொடுத்தார்கள். கோழிக்கறியை அல்லது காய்கறிகளை மூங்கிலில் அடைத்து, வெளியில் இருந்து மூங்கிலை சூடு செய்து ஒரு பதார்த்தம். அதில் எல்லோரும் பங்கெடுத்தோம். இந்த உணவை மட்டும் நடு வீட்டில் வைத்து செய்தார்கள்.
![]() |
சிவப்பு அரிசியில் செய்யப்பட உள்ளூர் பீர் |
மதிய உணவில் அரிசி மற்றும் மிகச்சிறிய உள்நாட்டு கிணுவா அரிசி இரண்டும் கலந்து செய்யப்பட சோறு, நொதிக்க வைக்கப்பட்ட மூங்கிலுடன் (Fermented Bamboo ), பீன்ஸ் சேர்த்து செய்யப்பட ஒரு சோயா சாஸ் கூட்டு. ஒரு கிழங்கு பொரியல், சட்டினி இவற்றுடன் மூங்கிலில் வைத்து வேக வைக்கப்பட்ட கோழிக்கறி அல்லது காய்கள். இந்த உணவின் சுவை சற்று புதியது, இதில் நொதிக்க வைக்கப்பட்ட மூங்கில் ஒரு ஆல்கஹால் சுவையை கொடுக்கிறது.
![]() |
மதிய உணவு |
வீட்டில் அமர்ந்து அந்த குடும்பத் தலைவியுடன் பேசிக்கொண்டிருந்தோம். வடகிழக்கு மாநிலங்களில் ஹிந்தி பொதுவாக எல்லோரும் பேசுகிறார்கள். பெரும்பாலும் எனக்கு அவர்கள் உரையாடல் புரிந்தது. மிகுந்த நகைச்சுவை உணர்வுடையவள் , மழைக்காலத்தில் வீட்டுக்குள் பூச்சிகள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று யாரோ கேட்டார்கள். பிடித்து சாப்பிட்டு விடுவோம் என்று பதில் வந்தது. நிக் அவன் பங்குக்கு சிலந்தி பூச்சி மிகுந்த சுவையானது என்று சொன்னான் :)
இது-மிஷ்மி கலாச்சாரம் பற்றிய பேச்சும் வந்தது. முன்பெல்லாம் பெரியவர்கள் பேசி முடிவு செய்யும் திருமணம்தானாம். இப்போது நிறைய மாறி இருக்கிறது, காதல் திருமணங்கள் தங்கள் இனத்துக்குள் மட்டுமல்லாது அடுத்த இனங்களிலும் கூட நடக்கிறது.
அவர்கள் தங்களுக்குள் அவர்கள் மொழியை பேசுகிறார்கள். வெளியில் மற்ற இனத்தாருடன் பேசுவது ஹிந்தி. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுவதால் இதுமிஷ்மி குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குளாகின்றனர் என்று அமிஷி சொன்னாள்.
இந்திய அரசியல் சட்டத்தில் சில மதங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பழங்குடிகள் பின்பற்றும் மதங்கள் பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. தோன்யி - போலோ (Dhonyi - Polo) என்ற சூரிய சந்திரனை முதன்மையாகக் கொண்ட ஒரு மதத்தை திபெத் -அசாம் -அருணாச்சலில் உள்ள கணிசமான பழங்குடியினர் பின்பற்றுகின்றனர்.
இது-மிஷ்மி மக்கள் பின்பற்றும் மதம் அதுவல்ல, அவர்களின் மதம் Animism என்ற வகையின் கீழ் வருகிறது. இவர்களுக்கென்று தனிப்பட்ட நம்பிக்கைகளும் வழிபாடுகளும் உள்ளன. Shaman என்னும் பூசாரி சமூகத்தில் மதிப்பு மிக்கவராக கருதப்படுகிறார். அவருக்கு மந்திர சக்திகள் உள்ளதாக நம்பப் படுகிறது. இறந்தவர்களை புதைப்பது இவர்களின் வழக்கம்.
![]() |
மீன் வலை |
அன்று மாலை வரை அவர்கள் வீட்டில் இருந்தோம். அதன் பின் அணினியின் கடைவீதிக்கு சென்றோம். ஒரே ஒரு தெரு, எண்ணி 15 கடைகள் மட்டுமே இருக்கும். எந்தக்க கடையிலும் கூட்டம் இல்லை. அணினியின் Fridge Magnet - கூட கிடைப்பதில்லை. மக்கள் கூட்டம் இன்னும் அதிகம் வரவில்லை என்பது அதில் இருந்தே தெரிந்தது. பழங்கள் மற்றும் நொறுக்குத் தீனி வாங்கிக் கொண்டு எங்கள் விடுதி வந்து விட்டோம்.
அன்று இரவு Camp-Fire ஏற்பாடு செய்திருந்தான் நிக். கொஞ்ச நேரம் குளிர் காய்ந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். ஹோட்டல்-இல் வேலை செய்யும் ஒரு உள்ளூர் பெண் கிடார் எடுத்து வந்து பாட ஆரம்பித்தார். கொஞ்சம் கூட்டம் சேர்ந்தது. சற்று நேரத்தில் நான் என் அறைக்கு வந்து தூங்கி விட்டேன். பாடலுடன், ஆடலும் சேர்ந்து கொண்டது. நான் தூங்கும்போதும் அந்த மகிழ்ச்சிக் கூச்சல் கேட்டுக்கொண்டே இருந்தது.
நாளை த்ரி சமவெளி (Dri Valley) -இல் இருக்கும் ஒரு campsite போக வேண்டும்
- போகலாம்.
Comments
Post a Comment