கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - நிறைவுப் பகுதி



        நண்பர்களில் பலர் என்னிடம் இப்படி பயணங்கள் செல்வதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கேட்கிறார்கள்.  எப்போதுமே நம்மிடம் இருக்கும் பட்ஜெட்டில் எங்கு போகமுடியுமோ அங்கு போகலாம்.  ஆனால் பெரிய பயணங்களுக்கு முக்கியமாக வேண்டியது உடல் தகுதி.  ஒவ்வொரு அடுத்த பயணத்திலும் நம் வயது கூடிக்கொண்டே செல்கிறது என்பதை உடல் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்,  முக்கியமாக முழங்கால்களும் , கீழ் முதுகும்.



        உதாரணமாக என்னால் மேகாலயாவில் இருக்கும் Double Decker Living  Root Bridge -க்கு போய்வர முடியும் என்று தோன்றவில்லை. கடினமான பாதை, 3500 -க்கும் மேற்பட்ட படிகள். அதெற்கெல்லாம் போக வேண்டும் என்று விரும்புபவர்கள் 35 வயதுக்கு முன் அல்லது உடல் எடை குறைவாக இருக்கும்போதே சென்றுவிட வேண்டும்.

    இனி..

மறுநாள் காலையில் யாரும் குளித்தது போல் தெரியவில்லை. மின்சாரம் வேறு இல்லை. over head tank -இல் இருக்கின்ற தண்ணீரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.  மழை விட்டு விட்டு பெய்து கொண்டேதான் இருந்தது. 



        காலையில் உணவை முடித்த பின் முதலில் சென்றது  மாவு (Mawu) அருவி. அதுவும் ப்ரூனி செல்லும் வழியில் தான் உள்ளது. சாலையில் இருந்து பிரிந்து ஒரு 20 நிமிடம் கவனமாக trekking செய்ய வேண்டும். அங்கு ஒரு சிறிய மேடையில் நின்று அருவியை அருகில் பார்க்கலாம். 



        அருகில் செல்ல செல்ல அருவியின் சத்தம் அதிகமாகிக் கொண்டே வந்தது.  மக்கள் அதிகம் வராததால் வருகின்ற பாதையில் பல இடங்கள் ஈரத்தால்  பாசி படர்ந்து இருக்கின்றன, சற்று கவனம் குறைந்தாலும் வழுக்கி விடுபவை. உதவி தேவைப்படும் இடத்தில் அமிஷியும் , தோபாவும் கை கொடுத்தார்கள்.



அருவியை எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல்தான் இருக்கிறது. 

        இன்றைய தினத்தின் highlight , River-Rafting. ஆனால் மாவு அருவியில் இருந்து rafting point வரை (மொத்தம் 17கிமீ ) செல்வதற்கு 5 சைக்கிள்கள் வந்திருந்தன. எழுவரில் 5 பேர் சைக்கிள் ஓட்ட மீதி இரண்டு பேர் சைக்கிள் வந்த டிரக்-யிலேயே ஏறிக்கொண்டார்கள். களைப்பாக இருந்தால் அடுத்த ஆள் rotation -இல் சைக்கிள் ஓட்டுவார். 



        நதியின் பாதையிலேயே வருவதால் பெரும்பாலும் இறக்கம்தான். சில இடங்கள் மட்டும்  கொஞ்சம் மேடாக இருக்கும். நான் ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டேன்,கொஞ்ச தூரத்திலேயே சிகு என்றொரு ரிசார்ட் இருக்கிறது, அங்கு வந்து டீ குடிக்க ஒரு நிறுத்தம்.




        சிகு ரிசார்ட் இருக்கும் இடம் திபாங் வனவிலங்கு சரணாலயத்துக்கு உள்ளே உள்ளது. அது சட்டப்படி கட்டப்பட்டதல்ல என்று நிக் சொன்னான். ஆனால் அது அமைந்திருக்கும் இடம் கொள்ளை அழகு. மிகப்பெரிய திறந்த வெளி, அதைத் தொடர்ந்து சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, பக்கத்திலேயே மிக உயர்ந்த மலை, மலையினின்று கொட்டுகின்ற அருவி, எல்லாமும் ஒரே இடத்தில். மழை இப்போது சாரலாக பெய்து கொண்டிருந்தது. இந்த வானிலையில் வெங்காய பக்கோடாவுடன் ஒரு டீ குடித்தால் சுகமோ சுகம். ஆனால் டீ மட்டும் தான் கிடைத்தது.



        அந்த இடத்தை ரசித்துக்கொண்டே, டீயைக் குடித்து விட்டு cycling -ஐ மீண்டும் தொடர்ந்தோம். நான் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் சைக்கிள்-ஐப் பெற்றுக்கொண்டேன். மொத்தம் 10 கிமீ சைக்கிள் செலுத்தியிருப்பேன். அந்த மழைச்சாரலில் சைக்கிள் சவாரியும் கூட சிறப்பாக இருந்தது.




அடுத்து நாங்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த River-Rafting. காலையிலேயே எங்கள் campsite -க்கு boat வந்துவிட்டது. எல்லாப்புறமும் காற்றடைத்து தயார் செய்துகொண்டிருந்தார்கள்.



        தேவையான Wet suit, Life Jacket, ஹெல்மெட் எல்லாம் போட்டு தயாரானோம். 15 நிமிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வழிமுறைகள் விளக்கமாக சொல்லப்பட்டன. நாங்கள் இதற்கு முன் குல்லு மணாலியில் Rafting போய் இருக்கிறோம் என்றாலும், அங்கு நாங்கள் பார்வையாளர்கள் மட்டுமே. இங்கு எங்களுக்கு துடுப்புகள் கொடுக்கப்பட்டது. நாங்களும் ஒரு வகையில் படகைச் செலுத்துவதில் பங்கு கொண்டோம்.



        நிக்கையும் சேர்த்து 8 பேர். ஒரு பக்கத்துக்கு 4 பேர், தோபா தான் கேப்டன்.  பின்னாலிருந்து அவன் என்ன சொல்கிறானோ அதன்படி செய்ய வேண்டும். பெய்திருந்த மழையில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை பள்ளம் வரும்போதும், சுழல் வரும்போதும்  தண்ணீர் படகுக்கு மேல் வருவது போல இருக்கும்.  ஒருமுறை அடுத்த பக்கத்தில் இருப்பவர்கள் ஆற்றில் கவிழ்ந்து விட்டார்கள் என்றே  நாங்கள் நினைத்தோம்.  உண்மையிலேயே  த்ரில் -ஆன அனுபவம். மொத்தம் 45 நிமிடங்கள் இருக்கலாம்.  அப்படியே எங்கள் campsite -இன் கரையோரமாக இறக்கி விட்டார்கள். 



        இப்போதே மணி மூன்றரை ஆகி விட்டது.  செயல்களில் லயித்து விட்டதால் பசி எடுக்கவில்லை. மதிய உணவை சாப்பிட்டு முடிக்கவே 5 மணி ஆகி விட்டது. நெருப்பை மூட்டி கொஞ்ச நேரம் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம். 

        உடல் களைப்பாக இருந்தது. இரவுக்கு கொஞ்சமாக பருப்பும் சோறும் மட்டும் எடுத்துக்கொண்டு எல்லோரும்  தூங்க போய் விட்டோம். இன்று நான் தனியாகப் படுத்துக்கொண்டேன். இருட்டும், இடமும் பழகி விட்டன.



            அடுத்த நாள் எந்த ஒரு திட்டமும் இல்லை. போகும் வழியில் அச்சேஸோ( Acheso) கிராமத்தில் கொஞ்சம் போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். கிராமம் என்றால் மொத்தம் 5-10 வீடுகள் மட்டுமே, அவற்றில் பெரும்பாலோர் அணினி-யில் வாழ்கிறார்கள்.  ப்ரூனி -யை விட அச்சேஸோதான் திபெத்துக்கு மிக அருகில் இருப்பதாக நிக் சொன்னான்.




வேனில் இருந்து இறங்கி சுமார் 2 கிமீ நடந்தே வந்தோம். அச்சேஸோ அப்படி ஒரு அழகு. இன்னும் அழகான இடங்களைப் பார்க்க பார்க்க, பிள்ளைகளையும், மேகலாவையும் விட்டுவிட்டு வந்த  குற்ற உணர்வு அதிகரித்துக்கொண்டே வந்தது.




        அணினி வந்தவுடன் mobile network வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. முதல் வேலையாக ஹோட்டலில் வந்து வெந்நீர் போட்டு குளித்தேன்.  மதியம் ஒரு குட்டி தூக்கம்.   அடுத்த நாள் காலை 5 மணிக்கே கிளம்ப வேண்டும் என்று நிக் சொல்லி இருந்தான். . அணினி-யில் இருந்து  நேராக திப்ருகார் போக வேண்டும். மொத்தம் 12 மணி நேரத்திற்கும் மேல் பயணம்.

அன்று இரவு முழுவதும் மழை கொட்டிக்கொண்டே இருந்தது.

        சொன்னது போலவே அதிகாலை 5 மணிக்கு  நாங்களும் கிளம்பி விட்டோம். கிளம்பி 10 கிமீ இறங்கியிருப்போம்.  பெரும் மழையினால் பாறைகள் விழுந்து சாலை ஸ்தம்பித்து இருந்தது.  இதை சரி செய்ய குறைந்தது 2 மணி நேரம் ஆகும் என்று கணித்தார்கள். நாம் மறுபடியும் ஹோட்டல் -க்கே போய் கொஞ்சம் தூங்கி விட்டு , complimentary காலை உணவையும் முடித்துவிட்டு வரலாம் என்று நிக் சொன்னான். அந்த டீல் எல்லோருக்கும் பிடித்துப்போகவே வண்டியைத் திருப்பினோம்.

I, Aushik, Kunjan and Nick

    மீண்டும் காலை 9 மணிக்கு கிளம்பினோம், அதன் பின் எங்கும் தடைகள் இல்லை.   திப்ருகார் வந்து சேர இரவு ஒன்பதரை மணி.  எங்களுக்கு Home Stay ஒன்றில் அறைகள் ஏற்பாடு ஆகி இருந்தது.  எங்களுக்கு அன்று இரவு விருந்து Chalohoppo-வின் sponsor. சிறப்பு!



    எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் அதிகாலை 7 மணிக்கே கிளம்ப வேண்டும். இரவே நண்பர்கள் அனைவரும் உருக்கமாக விடை கொடுத்தார்கள்! 

அடுத்த நாள் காலையில் ஆஷிக் என்னை விமான நிலையத்தில் கொண்டுவந்து  இறக்கி விட்டான்.

பள்ளி நாட்களில் சுற்றுலா கட்டுரை எழுதும்போது சம்பிரதாயமாக cliche ஒன்றை எழுதுவோம், " இந்த நினைவுகள் என்றும் பசுமையாக எங்கள் நினைவில் இருக்கும்" என்று.  இந்த பயணத்தில் அது சம்பிரதாயமான ஒரு வாக்கியம் அல்ல!

- நிறைவு பெற்றது 

Comments

Popular posts from this blog

வியட்நாம் பயணம் - Ha Noi மற்றும் Nin Binh

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை