கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - Dri Valley
மறுநாள் காலை நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு எங்கள் உடமைகளை எல்லாம் தயாராக வைத்திருந்தோம்.
அணினியில் இருக்கும் வரைதான் ஏர்டெல் வேலை செய்யும். இன்னும் சில கிலோமீட்டர் நகர்ந்தாலே, தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடுவோம். என்னுடைய இரண்டு சிம் கார்டுகளும் (ஒன்று ஜியோ, இன்னொன்று வோடபோன்) இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தொடர்பில் இல்லை. நானே ஒவ்வொரு முறையும் பிறரிடம் கொஞ்சம் hotsopt பிச்சை எடுத்துத்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் நாங்கள் கிளம்பும் காலையில் அணினியிலேயே ஏர்டெல்லும் முற்றிலும் செயலிழந்தது. இன்று முதல் மூன்று நாட்கள் எந்த நெட்ஒர்க்கும் வேலை செய்யாது.
இன்று Dri Valley செல்லும் வழியில் கிப்புளின் (Gipuline) என்ற கிராமம் உள்ளது. போகும் வழியில் ஒரு Detour ஆக அந்த இது-மிஷ்மி இனத்தில் ஒரு முக்கியஸ்தரின் வீடு ஒன்றிற்கு செல்லும் திட்டம் இருந்தது. அந்த வீட்டில் உள்ள சுவாரஸ்யங்களை விட, அதற்குப் போகும் பழைய பாதையின் சாகஸத்தன்மை இன்னும் சிறப்பாக இருந்தது.
த்ரி நதி சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. நதியின் நடுவே ஒரு தொங்கு பாலத்தைக் கடக்கவேண்டும். அதன் பின் ஒரு காட்டுப்பாதையில் 30 நிமிடம் ட்ரெக்கிங். அதன் பின் மீண்டும் ரோடு , படிக்கட்டுகள் என்று ஏறி அந்த வீட்டை அடைய வேண்டும்.
தொங்கு பாலத்தில் 10 அடிகள் நடந்த உடனேயே எங்கள் குழுவில் இருந்த மணலிக்காரர் திரும்பி ஓடி வந்து விட்டார். அவருக்கு உயரம் என்றால் பயம் என்று சொன்னார், எனக்கும்தான்! நான் Tread Mill -இல் நடக்கவே பயப்படுவேன். ஆனால் எதையும் விட்டுவிட எனக்கு மனம் வரவில்லை. கீழேயே பார்க்காமல் இரு புறமும் கம்பிகளைப் பிடித்தவாறே கடந்து விட்டேன். ட்ரெக்கிங் பாதையும் சற்று கடினம், ஆனால் தூரம் குறைவுதான்.
கிப்புளின் இல் உள்ள அந்த இது-மிஷ்மி பழங்குடி நபரின் வீட்டில் பலிகொடுக்கப்பட்ட காட்டெருமைகளின் தலைகள், வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றிகளின் தாடைகள் ,அந்த இனத்தவர்களின் வாள், கரடித்தோலால் செய்யப்பட ஆடைகள், அம்புகள் வைக்கும் கூடை, அம்பில் தடவும் விஷத்தை எடுத்து செல்லும் சிறு குடுவை போன்ற ஒன்று, மரத்தாலான உடை என்று ஒரு குட்டி மியூசியம் இருந்தது.
![]() |
காட்டெருமையின் தலைகள் |
![]() |
காட்டுப்பன்றியின் கீழ்த்தாடைகள் |
![]() |
கரடித்தோல் சட்டை |
மூங்கில் தொப்பியைப் புகைப்போட்டு கடினமாக்கி அதை ஹெல்மெட் போல தலையில் அணிகிறார்கள். கையில் வைத்திருக்கும் வாளை வைத்து ஒரு பழங்குடி எந்த இனத்தை சேர்ந்தவன் என்று கண்டு பிடித்துவிட முடியுமாம். சில காட்டெருமைத் தலைகளில் ஓட்டை இருந்தது. காட்டெருமைகள் மிகுந்த ஆக்ரோஷத்தோடு இருந்தால் பலி கொடுக்குமுன் தலையில் துப்பாக்கியால் சுட்டு விடுவார்களாம். அந்த பழங்குடிதான் இதையெல்லாம் எங்களுக்கு விளக்கினார்.
![]() |
மரவுரி ஆடை |
அதை முடித்து மீண்டும் அதே பாதையில் திரும்பி வரும்போது த்ரி ஆற்றில் தண்ணீரின் மட்டம் அதிகரித்து இருந்தது. மேலே மலையில் மழை கடுமையாகப் பெய்கிறது என்பது புரிந்தது.
அங்கிருந்து கிளம்பி த்ரி சமவெளியில் உள்ள எங்கள் campsite -க்குப் போகவேண்டும். மேலே செல்ல செல்ல குளிர்ந்த காற்று அதைத்தொடர்ந்து சாரல் என்று ஆரம்பித்து நாங்கள் campsite-ஐ அடைந்த போது மழை நன்றாகப் பெய்ய ஆரம்பித்து விட்டது.
இந்த இடம் த்ரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இரண்டு பேர் தங்கும் அளவுக்கு கூடாரங்கள் இருந்தன. பின் கதவைத் திறந்தால் கரை புரண்டு ஓடும் ஆறு. தூங்கும் போதும் ஆற்றின் ஓட்டம் மெல்லிய சப்தமாக ஒலித்துக்கொண்டேயிருந்தது.
இன்று மதியம் நாங்கள் இங்கிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ள ப்ரூனி (Bruni) என்ற இடம் வரை செல்லவேண்டும். மழை தொடர்ந்து பெய்தால் அன்றைய திட்டம் ரத்தாகிவிடும். மதிய உணவை சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டே காத்திருந்தோம். மூன்றரை மணி போலத்தான் மழை நின்றது.
புதிதாகப் போடப்பட்ட அழகிய சாலை. சற்று தூரத்தில் வெள்ளிக் கம்பி போல ஒரு அருவி. முதல் அருவியைப் பார்த்தவுடன் எல்லோரும் கூச்சலிட்டோம். ஆனால் அதைத் தொடர்ந்து எத்தனை பெரிய, உயரமான அழகிய அருவிகள்.
எல்லோரும் வாயடைத்துப் போய்விட்டோம். சேயா என்றொரு அருவி, நெடிதுயர்ந்த மலையில் இருந்து பேரிரைச்சலுடன் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. இன்னொரு புறம் மேகங்கள் எல்லாம் கொஞ்சம் எம்பிக் குதித்தால் தொட்டு விடலாம் போல இருந்தது.
அங்கு கொஞ்ச நேரம் வேனை நிறுத்தி பார்த்துக் கொண்டிருந்தோம். என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு. கொஞ்ச நேரத்திற்கு எந்த எண்ணமும் இல்லை என்பது போன்ற பிரமை.
எங்கோ இருந்த நான் இந்த நாட்டின் ஒரு ஓரத்தில் உள்ள ஒரு மழைக் காட்டில், முற்றிலும் பழகாத நண்பர் குழுவுடன், மிகுந்த இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன், என் வாழ்நாளில் இந்த இடத்துக்கு நான் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. எவ்வளவுதான் கேமெராவில் படம் பிடித்தாலும் மனதில் தோன்றும் உணர்வுகளை எப்படிப் பதிவு செய்வது!
![]() |
@Bruni |
இன்னும் சில கிமீ தூரம் போன பிறகு ப்ரூனி வந்து சேர்ந்தோம். இந்த இடம்தான் இந்தியாவின் கீழ்க் கோடியில் நாம் சாலை வழியாகச் செல்ல முடிந்த இடம். இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. ராணுவத்தின் முகாம் மட்டுமே உள்ளது. இன்னும் கொஞ்ச தூரத்தில் சில மலைகளைக் கடந்தால் திபெத் (சீனா) வந்து விடும். அங்கு சில போட்டோக்கள்.
![]() |
@Bruni |
எங்கள் campsite இல் இருந்து ப்ரூனி வரை மொத்தம் 22 அருவிகள். த்ரி சமவெளியை Valley of Water falls என்றும் குறிப்பிடுகிறார்கள். எல்லாமே த்ரி ஆற்றில் சென்று சேர்கின்றன.
த்ரி ஆற்றை விக்கிப்பீடியாவில் நீரோடை (Dri Stream) என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஒவ்வொரு அருவியும் நிறுத்தி வைக்கப்பட்ட நீரோடை அல்லவா ? அகலம் சற்று குறைவுதான் என்றாலும்ஆற்றில் தண்ணீர் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இத்தனை அருவிகள் சென்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் ஒரு ஆற்றை யார் இப்படி எழுதினார்கள் என்று தெரியவில்லை. சரிதான், பிரம்மபுத்திராவை ஒப்பிட்டால் காவிரி கூட நீரோடைதானே!
அந்த 30 கிலோமீட்டர் தூரத்திலும் திகட்ட திகட்ட பார்த்தாயிற்று. அதன் பிறகு ஓய்வுதான் என்று நினைத்திருந்தேன். Chalohoppo குழுவினர் இரவு (ஆறரை மணியே அங்கு இரவு தான்!) ஆற்றங்கரையில் camp fire ஐ தயார் செய்துவிட்டார்கள். ஆற்றங்கரை என்பது பெரிய இடம் அல்ல ஒரு 80 X 60 இருக்கும் ஒரு மணல் திட்டு மட்டுமே.
உரித்து மசால் தடவப்பட்ட கோழி தீயில் வாட்டப்பட தயாராக இருந்தது. அதனுடன் சைவம் சாப்பிடுவர்களுக்காக கொஞ்சம் உருளைக்கிழங்கும் !
அந்த இருட்டில் ஆற்றில் கால் நனைக்கலாம் என்று நீரை நோக்கி சென்றேன். கையில் இருக்கும் டார்ச்சை அடித்து ஆற்றங்கரையில் பார்த்தேன். நண்டு சைசில் ஒரு பெரிய சிலந்தி. என் உடம்பு ஒருமுறை குலுங்கியது. மீண்டும் டார்ச்சை அடித்துப் பார்த்தேன் அது நண்டு அல்ல, சிலந்திதான். அமைதியாக நகர்ந்து வந்துவிட்டேன்.
பின் நெருப்பின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே எட்டரை மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். பல்வேறு சினிமாக்கள் பற்றிய பேச்சும் ஓடியது. ஆவேஷம் படம் பார்த்து பஹத் பாசிலுக்கு மணலிக்காரர் fan ஆக ஆகி விட்டிருந்தார். இரவு உணவை முடித்து எங்கள் கூடாரம் செல்ல 10 மணி ஆகி விட்டது.
அடுத்த நாள் சில முக்கிய திட்டங்கள் இருந்தன.
- பார்க்கலாம்.
Comments
Post a Comment