வியட்நாம் பயணம் - மீண்டும் Ha Noi - நிறைவுப் பகுதி




Ha Noi - இல் மீண்டும் அதே Homestay. 

        சென்னையில் இருந்து கிளம்பி இன்று ஒன்பதாம் நாள்.  வியட்நாமின் வரலாற்றுப் பக்கங்களைக் கொஞ்சமேனும் பிள்ளைகள் பார்க்க வேண்டும் என்றுதான் Hoa Lo சிறையின் மியூசியம் சென்றோம்.



            பிரெஞ்சு காலனி காலகட்டத்தில் கட்டப்பட்டது இந்த சிறை.  விடுதலைக்காகப் போராடியவர்களுக்குக் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு அடைக்கப்பட்ட இடம். ஆண் கைதிகள் எந்நேரமும் கால்களை நீட்டி பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். சிறிய சிறைதான் இது,  சில நேரங்களில் மிக அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 


        1908 இல் நிகழ்ந்த Hanoi Poison Plot - என்பது விடுதலைப் போராட்டக்குழுவின் ஒரு முக்கியமான ஒரு சதித் திட்டம். சமையல்காரர்கள் உதவியுடன் 200 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு சிப்பாய்களின் உணவில் விஷம் கலந்து கொன்று ஒரு கோட்டையைக் கைப்பற்றும் முயற்சி. இரண்டு வகையில் அது தோல்வியில் முடிந்தது. ஒன்று, கலக்கப்பட்ட விஷம் சிப்பாய்களைக் கொல்லவில்லை, இரண்டு குற்றவுணர்வு கொண்ட ஒரு சமையல்காரர், தேவாலய பாதிரியாரிடம்  பாவமன்னிப்பு கோரியதால்  - ரகசியம் உடனடியாக பிரெஞ்சு அதிகாரிகளுக்கு போனது . 

        இதில் பிடிபட்ட குற்றவாளிகளுக்கு, கில்லட்டின் மூலம் தலை தனியாக வெட்டப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. அந்த கில்லட்டினும்  பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை நான் இங்கு கொடுக்கவில்லை. இணையத்தில் தேடினால் கிடைக்கும்.


     1945 முதல் 1975  தொடர்ச்சியாக    போரை எதிர் கொண்ட ஒரு சமூகம்.  அதுவும் அமெரிக்காவுடன் நடந்த போர் தீவிரமானது.  தொடர்ந்து குண்டு வீச்சுகள்.  50 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு வியட்நாமியருக்கும் சொல்வதற்கு தனிப்பட்ட சோகக் கதை இருக்கும். 

        ஹனோய் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசும்போது கூட 5 லட்சம் மக்கள் வெகு கட்டுக்கோப்பாக வெளியேறிய காட்சியை ஆவணப்பட இயக்குனர்கள், வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    இதே சிறையில்தான் அமெரிக்கா- வியட்நாம் போரின் போது அமெரிக்க போர்க்கைதிகள் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள். அமெரிக்க கைதிகளை வியட்நாம் மிக மரியாதையாக நடத்தியதாக காட்டியுள்ளார்கள், அது உண்மையாகவும் இருக்கலாம்.

            பொதுவாக இந்த இடத்தில் நமக்கு சொல்லப்படும்  வரலாறுகள் எல்லாமே வியட்நாமிய கம்யூனிச அரசின் பார்வையிலே இருக்கின்றன என்பது வெளிப்படை. 

       

        மதியத்துக்கு மேல் வியட்நாமிய கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் அதிபருமான ஹோ சி மின் -நினைவிடம் சென்றோம்.  வியட்நாமில் கோவில்களில்தான் கால் முட்டி தெரியாதபடி உடை அணியவேண்டும் என்று ஒரு விதி உள்ளது என்று நினைத்தோம், ஆனால் இங்கும் அப்படித்தானாம். அதனால் இன்பாவை உள்ளே விட மாட்டேன் என்றார்கள். நானும் மேகலாவும் மட்டும் உள்ளே சென்றோம்.அவருடைய சமாதியைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.  கொஞ்ச நேரம் மட்டும் அங்கே இருந்துவிட்டு கிளம்பி விட்டோம்.


நாங்கள் கிளம்புவதற்கு நேரம் இருந்ததால் மீண்டும் Hoàn Kiếm ஏரிக்கரைக்கு சென்றோம். நம்ம ஊர் பீச் போல  ஊரில் உள்ள கூட்டம் எல்லாம் அங்கேதான் வருகிறது. 

        வியட்நாமில் இப்போதுள்ள பள்ளிக்குழந்தைகள்தான் கொஞ்சமாவது ஆங்கிலம் படிக்கிறார்கள்.அதுவும் கூட வெளியில் கோச்சிங் சென்டர் போல நடத்தும் இடங்களில் படித்தால்தான் கொஞ்சமாவது பேச முடியும் போல!சில இடங்களில் அதுபோல சென்டர்களைப் பார்த்தேன். 

        அன்று ஏரிக்கரையை சுற்றியும் குழுக்கள், குழுக்களாக பள்ளி மாணவர்கள்.  சுற்றுலா பயணிகளிடம் ஆங்கிலம் பேசிப்பழக வருகிறார்கள்.  ஆரம்பப் பள்ளியில் படிக்கும் அவர்களுக்கு ஒரு கேள்விகள் அடங்கிய பட்டியலைக் கொடுத்து விடுகிறார்கள். அதில் பதிலாக வரக்கூடிய வாய்ப்புள்ள வார்த்தைகளும் இருக்கும். எடுத்துக்காட்டாக Which drink do you like ? என்றால் Coffee, tea, Milk என்ற பதில்களும் இருக்கும்.

    அதை நம்மைப் போன்ற பயணிகளிடம் கேட்கிறார்கள். நாம் பேசுவதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். ஆனால் கொடுக்கப்பட்ட பதில் இல்லையென்றால் குழம்பி விடுகிறார்கள். Which drink do you like ?  என்ற கேள்விக்கு மேகலாவின்  passion fruit Juice என்ற பதிலும் . which sports do you like the most? என்ற கேள்விக்கு ஹாக்கி என்று நான் சொன்னதும் அவர்களைக் குழப்பிவிட்டது என்று பிறகுதான் தெரிந்தது.

    பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் மட்டுமல்ல, சில பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை  ஆங்கிலம் பேச அழைத்து வந்திருந்தார்கள். வெள்ளைக்காரர்களிடம் தங்கள் பிள்ளைகள் பேசுவதில் அந்தத் தாய்க்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி!  ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தாயை நான் அங்கு பார்த்தேன்!!



 

            தனிநபர் வருமானம் இந்தியாவை விட 1.7 மடங்கு உள்ள ஒரு நாடு. இங்கு மக்கள் தொகையைப்போல இரண்டு மடங்கு இருசக்கர மோட்டார் வாகனங்கள் உள்ளன. வியட்நாமியர்களின் வசதிகள் பெருகி வருகின்றன. ஆனாலும்  அவர்கள் எளிமையான மனிதர்கள். ஏமாற்றுபவர்கள் என்று சிலர் இருக்கலாம், ஆனால்  யாரையும் நாங்கள் பார்க்கவில்லை. 

         அழகிய விரிந்த சாலைகள்  அங்கு பெரிய பெரிய சாலை சந்திப்புகள் , சிக்னல்கள். ஆனால் எங்குமே போக்குவரத்து போலீசாரை நாங்கள் பார்க்கவில்லை.  அதிகாலை 3 மணிக்கு யாருமே இல்லாத சிக்னலில் சிவப்பு விளக்குக்கு கார்கள் நின்று செல்கின்றன.

        ஆனால் இவர்களிடம் எதோ குறைவதாக மேகலா சொன்னாள். அது சுதந்திரம்! உண்மைதான், சத்தம் போட்டு பேசிய எந்த ஒரு ஆளையும் நாங்கள் அங்கு பார்க்கவில்லை.  கூட்டமான மார்க்கெட் கூட ஓசையின்றியே இருந்தது.யாரும் அரசாங்கத்தைப் பற்றி எங்களிடம் பேச வாய்ப்பேயில்லை, அது மொழி ஒரு தடை என்பதால் மட்டுமல்ல.

     பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் ,பத்திரிக்கை சுதந்திரம் இவையெல்லாம்  கடுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு நாடு என்றால்  அதன் மக்கள் அப்படித்தானே இருக்க முடியும்!! 

        நாங்கள் கிளம்பும்போது Ms.Perfume எங்களுக்காக இரண்டு பாக்கெட் - ஒரு கிலோ வியட்நாம் காபிதூள் பரிசாக கொடுத்தாள். நாங்கள் போகும்போது கிராண்ட் ஸ்வீட்ஸில் அவர்களுக்கு கொஞ்சம் இந்திய நொறுக்குத்தீனிகள் வாங்கிச் சென்றிருக்க வேண்டும். அப்போதெல்லாம் அந்த ஞாபகம் இல்லை. நாங்கள் தங்கப் போவது  ஒரு ஹோட்டல்தானே  என்றே நினைத்திருந்தோம்.  

         விமான நிலையத்தில் எங்களைக் கொண்டு விடுவதற்காக ஒரு Toyota Fortuner ஐ ஏற்பாடு செய்திருந்தாள் Perfume.  வீட்டுக்கு வந்த விருந்தினரைப் போல கார் வரைக்கும் கூடவே வந்து, வழியனுப்பியும் வைத்தாள்!

        மனிதர்கள் தங்கள் அன்பைக் காட்டி (நாம் இன்னா செய்யாவிட்டாலும் கூட) நம்மை நாணச் செய்துவிடுகிறார்கள்! 

மிகுந்த மன நிறைவுடன் இண்டிகோ விமானத்தில் ஏறினோம் !


வியட்நாம் பயணம் - நிறைவுற்றது.

Comments

Popular posts from this blog

வியட்நாம் பயணம் - Ha Noi மற்றும் Nin Binh

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

வியட்நாம் பயணம் - Ha Long Bay