வியட்நாம் பயணம் - Ha Noi மற்றும் Nin Binh



            ஒரு வெளி நாட்டு பயணம் போகலாம் ஆனால் நமக்கு ஆங்கிலம் தெரியாது என்று தயங்குகிறீர்களா, அப்படியானால் நீங்கள் வியட்நாம் போகலாம், அங்கு தமிழிலேயே பேசலாம். ஏனென்றால் ஆங்கிலமோ, தமிழோ நீங்கள் எது பேசினாலும் அவர்களுக்குப் புரியாது. பெரும்பாலான உரையாடல்கள் சைகை மொழியிலும்,google Translator செயலியின் உதவியுடன்தான்.

            இந்த முறை வியட்நாம் போகலாம் என்று முடிவு செய்ததற்கு எந்த சிறப்பு காரணங்களும் இல்லை,  கொஞ்சம் குறைத்த பட்ஜெட்டில் அழகான இடங்கள் பார்க்கலாம் என்பது தவிர. சென்ற இரண்டு முறையும் இமய மலையைத் தொட்டுவிட்டு வந்ததால் இம்முறை மருதமும், நெய்தலும்! இந்த பயணமும் நாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்டதுதான். பயண முகவர்களிடம் செல்லவில்லை.

            வியட்னாம் நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு.  உலக வரைபடத்தில் சென்னையில் இருந்து நேர் கிழக்காக ஒரு கோடு கிழித்தால் தெற்கு வியட்நாமின்  ஹோ சி மின் சிட்டி (Ho Chi Min City) என்றால்,கல்கத்தாவில் இருந்து அதே போல ஒரு கோடு போட்டால் வடக்கு வியட்நாமில் ஹனோய் (Ha Noi). 

            எங்கள் பயணத்  திட்டத்தில் வடக்கு வியட்நாமும், மத்தியில் Da Nang என்ற நகரமும் இருந்தன. சென்னையில் இருந்து Ha Noi செல்வதற்கு நேரடி விமானம் இல்லை.  மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட இண்டிகோ-வின் விமான கட்டணம் குறைவாக இருந்தது. இரண்டு மாதங்கள் முன்பே இண்டிகோவில் டிக்கெட் முன் பதிவு செய்து விட்டோம். சென்னையில் இருந்து கல்கத்தா சென்று அங்கிருந்து ஹனோய் செல்ல வேண்டும்.  Online -இல் சுற்றுலா விசா விண்ணப்பித்தால்  மூன்று நாட்களில் கொடுத்து விடுகிறார்கள்.

            Booking.com தளத்தில் நல்ல review உள்ள Home Stay விடுதிகளாகப்  பார்த்து முன்பதிவு செய்து கொண்டோம். இதெற்கெல்லாம் முன் பணம் எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை. தங்கும் தேதிக்கு முதல் நாள் வரை பதிவை ரத்து செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

            சனிக்கிழமை விடிகாலை 2 மணிக்கு Ha Noi வந்து சேர்ந்தோம். விமான நிலையத்தில் இருந்து எங்களை அழைத்து வர Home Stay Owner ( அவள் பெயர் Ms.Perfume!)  கார் ஓட்டுநரை அனுப்பி இருந்தாள்.  எங்கள் விடுதி Old Quarters என்று அழைக்கப்படும் நகரத்தின் மையத்தில் இருந்தது. குறைந்த பட்ச வசதிகளுடன் கூடிய,மிக சுத்தமான  4 பேர் தங்கும் அறை எங்களுக்கு கொடுக்கப்பட்டது.  பொதுவாக வியட்நாம் மிக சுத்தமாகவே இருக்கிறது.

            காலை உணவாக "Pho Ga".  அரிசியில் செய்யப்பட நூடுல்ஸ் -ஐ அவர்களின் வாசனை மசாலா, வேக வைத்த கோழி சேர்த்து செய்த clear சூப்புடன் சேர்த்துக் கொடுக்கிறார்கள். இது எந்த நாட்டவருக்கும் பிடித்து விடும் ஒரு எளிமையான சுவையான உணவு. 


                                      


             உணவுத் தேடல் உள்ளவர்களுக்கு வியட்நாம் ஒரு சொர்க்கம். உண்மையில் ஐரோப்பியர்கள் தான் புதிய உணவை திறந்த மனதுடன் முயன்று பார்ப்பார்கள். எங்கள் பயணம் முழுவதும் எங்களால் முடிந்த அளவு நாங்களும் சில உணவுகளை முயற்சி செய்தோம். 

            தரை வாழ் விலங்குகளில் பன்றி, மாடு, கோழி தவிர, வியட்நாமியர்கள் நாய், தவளை, நத்தை, மண்புழு, பாம்பு என்று எல்லாம் சாப்பிடுகிறார்கள். மிகப் பஞ்ச காலங்களில் உணவு கிடைக்காமல் அலையும் போது உருவான உணவுப் பழக்கம் இது. நம்மூரில் கூட எலிக்கறி, ஈசல் சாப்பிடுவார்கள், அவை எல்லாம் கடும் பஞ்ச காலத்தில் உருவாகும் உணவுகள்தான். 

            காலையில் அறையில் இருந்து கிளம்பி நடந்தே புனித ஜோசப் தேவாலயத்திற்குப் போனோம். 1887 -இல் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.



             வியட்நாம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு. பல நூறாண்டுகளாக கிறித்தவ மதமும் பரப்பப் பட்டிருக்கிறது.இப்போதும் வியட்நாமிய மக்களில் 9% பேர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள். மற்றபடி குறிப்பிடும்படி இந்த தேவாலயத்தில் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.



                Old Quarters -இன் மையத்தில் அழகான  Hoàn Kiếm ஏரி உள்ளது. ஏரியில் உள்ளே உள்ள ஒரு சிறிய தீவில் Ngoc Son கோவில் உள்ளது.  அமைதியான சூழல், அழகான கோவில்! 



        தொடக்கத்தில் இந்தக் கோவில் மூன்று ஞானிகளின் நினைவாக உருவாக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியில் கோவில்கள்  National Hero -க்களை வழிபடும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இறை பக்தியை தேச பக்தியாக மாற்றும் முயற்சி! (உங்களுக்கு வேறு ஒரு நாடு நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)!   அதன் அடிப்படையில் இதுவும் அவ்வாறே! ஆனால் மேலதிக தகவல்கள் தெரியவில்லை. யாரும் நமக்கு ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லவில்லை. அதைவிட மிக முக்கியம், யாரும் பேசத் தயாராக இல்லை என்பது. 


            அன்று முழுவதும் நடைதான். நடந்தே கடை வீதிகள் சுற்றினோம். வியட்நாமின் புகழ் பெற்ற முட்டை காபி, Salt  Coffee சாப்பிட்டோம். ஈழத்தில் மாமியார் வீட்டுக்கு மாப்பிள்ளை வரும்போது முட்டை காபி கொடுப்பார்கள் என்று எங்கோ படித்ததாக நினைவு.  Salt  Coffee என்பது உண்மையில் Cold Salt Cream Coffee. மிக நன்றாக இருந்தது .




             மதிய உணவுக்கு நான் வாங்கி கொண்டது  Bun Cha என்னும் உணவு, தீயில் வாட்டப்பட்ட  பன்றி இறைச்சியும், நூடுல்ஸும். இதில் கொடுக்கப்படும் அரிசி நூடுல்ஸ்-ஐ தனியாக எடுத்து தேங்காய் பாலும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் அது நம்ம ஊர் இடியாப்பம்தான். 



            ஏரியின் அருகிலேயே water puppet show ஒரு தியேட்டரில் நடக்கிறது. மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சி.அதன் பின் உள்ள உழைப்பும், பயிற்சியும் பிரமிக்க வைக்கின்றன. ஆனால் முதல் நாள் சரியான தூக்கம் இல்லாதது, வெயிலில் நடையாய் நடந்த அலைச்சல்,தாலாட்டுப் போல அமைந்த வியட்நாமிய பாடல்கள் எல்லாம் சேர்ந்து நல்ல தூக்கத்தைக் கொண்டு வந்தது. மேகலா தவிர நாங்கள் மூன்று பேரும் நன்றாகத் தூங்கி விட்டோம்.

            நாங்கள் தங்கியிருந்த Home Stay, ஹனோய் நகரின் புகழ் பெற்ற Train Street -இன் பின்புறம்தான் இருந்தது. திரும்பி வரும் வழியில் Train Street சென்றோம்.  தொடர்வண்டி வரும் நேரத்தில் அங்கு செல்ல வேண்டும் என்றால், ஏதாவது ஒரு கடையில் காபி, பானங்கள் என்று வாங்கிக் கொள்ள வேண்டும்  என்று கட்டாயப் படுத்துகிறார்கள். 




            இரண்டு முறை ரயில் எங்களைக் கடந்து சென்றது. வண்டி வருகிறது என்றால் இருபுறமும்   உட்கார்ந்து இருப்பவர்கள் எழுந்து ஒதுங்கி கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து மூன்று அடி தூரத்தில் ரயில் வண்டி செல்கிறது.  அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்! 

            வியட்நாம் முழுவதும் எல்லா இடங்களிலும் நுழைவுக்கட்டணம் என்று நல்ல தொகையை வசூலித்து விடுகிறார்கள். வெளிநாட்டுக்காரர்கள் புழங்கும் இடங்களில் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகம். வியட்நாம் ஒரு ஏழை நாடு என்று ஒரு தவறான எண்ணம் சிலருக்கு இருக்கலாம். அப்படி இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். வியட்நாமின் தனி நபர் உற்பத்தி (GDP per capita)  இந்தியாவை விட 70% அதிகம். உணவுப் பொருட்களின் விலைகளிலும் அதே அளவு அது எதிரொலிக்கிறது.

அன்று Ms .Perfume எங்களை அவள் குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட  அன்புடன் அழைத்திருந்தாள்.   எங்களுடன் உடன் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய தம்பதியினரும் இணைந்து கொண்டனர். குழைய சமைக்கப்பட்ட சோறு,  சூப், spring rolls, இறைச்சி என்று எல்லாம் தரமாக இருந்தது.  




நெடு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.  Perfume எப்போதுமே எளிதில் அணுகக் கூடிய,  உதவி செய்பவளாக இருந்தாள். 

வடக்கு வியட்நாம் சுற்றுலா வருபவர்கள் இரண்டு இடங்களை தவற விடக் கூடாது. அதில் ஒன்று Nin Binh. அடுத்த நாள் காலை Nin Binh போக  Perfume ஒரு நாள் package tour ஏற்பாடு செய்து கொடுத்திருந்தாள் .

நாம் Old Quarters  -இல் தங்கி இருந்தால்  காலை நம் விடுதிக்கே வந்து நம்மைக் கூட்டிக்கொண்டு செல்கிறார்கள், அது போலவே இரவு திரும்ப கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். இதில் நுழைவுக் கட்டணம் ,மதியம் Buffet உணவு எல்லாம் அடக்கம். 




15 பேர் அமரக்கூடிய தரமான வேனில் சுற்றுலா வழிகாட்டி  எங்களை அழைத்துச் சென்றார். காலையில் அரைமணி நேரம் நம்ம ஊர் மோட்டல் போல ஒரு இடத்தில நிறுத்துகிறார்கள். அங்கேயே பட்டு நூலில் செய்யப்படும் வண்ண ஓவியங்கள், பலவிதமான கலைப் பொருட்கள் விற்கும் பெரிய கடையும் உள்ளது. எல்லாமே கொள்ளை விலை. முக்கியமாக நண்பர்களுக்கு சிறு பரிசுப் பொருட்கள் வாங்குபவர்கள் இங்கே வாங்கவே கூடாது.

போகும் வழியில்தான் ஹூண்டாய் கார் தொழிற்சாலை. பல முன்னணி நிறுவனங்கள் வியட்நாமில் அவர்களுடைய Assembling plant -ஐ நிறுவி உள்ளனர். தானியங்கி தொழில் துறையில் தமிழ்நாடு தான் அவர்களுக்குப் போட்டி.  இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வியட்நாமின் மிகப்பெரிய உள்ளூர் கார்  நிறுவனமான Vinfast தூத்துக்குடியில் அதன் தொழிற்சாலையை தொடங்குகிறது.

 Nin Binh என்பது வயல்களும், ஆறுகளும், மலைகளும் அமைந்திருக்கும் அழகிய கிராமம். இதில் நாங்கள்  முதலில் போனது Bai Dinh - புத்த ஆலயம்.  சிறிய ஆலயமாக இருந்ததை 20 ஆண்டுகள் முன்பு மிகப் பெரிதாக விரிவுபடுத்தி சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறார்கள்.




             சுற்றுப் பிரகாரத்தில் அமைந்த புத்தர் சிலைகள் மட்டுமே 500. இது ஒரு சிறிய குன்றின் மேலே இருப்பதால் ஏறி ஏறி செல்ல வேண்டும். கோவிலின் நடுவே 36 டன் எடையில்  வெண்கல மணி ஒன்றைச் செய்து வைத்திருக்கிறார்கள். அழகிய இடம்!




            தொடர்ந்து மதிய உணவுக்கு எங்களை இறக்கி விட்டார்கள். Buffet உணவு, ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று நமக்கு பிடித்தது போல இருக்கும். இதில் நிறைய உணவுகள் நன்றாகவே இருந்தது.  நீங்கள் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் கவலையே இல்லை. 

            ஒரு இடத்தில நம்ம ஊர் பையன் வந்து ஒரு கடைக்கார பெண்ணிடம் ஒரு பிஸ்கட்டை காட்டி இதில் முட்டை சேர்த்திருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தான்! Eggless என்றெல்லாம் அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்!


    அதற்கு அடுத்து, அனைவரும் எதிர் பார்த்திருந்த Trang An  படகுப் பயணம். Nin Binh பயணத்தில் இதுதான் நட்சத்திரம்.  சிவப்பு ஆற்றில் ( ஆற்றின் பெயரே அதுதான்) சுண்ணாம்பு பாறை குன்றுகளுக்கு இடையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படகில் கூட்டிச் செல்கிறார்கள். 


                                     


மலைக்குன்றுகளுக்கு அடியில் இயற்கையாய் அமைந்து இருக்கும் மூன்று குகைகளை கடக்க வேண்டும்.  திறந்த வெளி வெயிலில் படகில் செல்லும்போது, நடுவில் வரும் குகைகள் குளிர்ச்சியாக,  சிறிது நீர் சொட்டிக்கொண்டு இருப்பதை உணர்வது சிறப்பான அனுபவம். இன்னும் கொஞ்ச நேரம் குகைக்குளேயே இருக்கலாம் என்று தோன்றுகிறது.



 கரையில் இடையிடையே சில கோவில்கள் உள்ளன. அவற்றில் இறக்கி விடுகிறார்கள் பார்த்துவிட்டு வரலாம்.  எல்லா புத்த கோவில்களும் ஒன்று போலவே உள்ளன என்பதால் பெரிய ஆர்வம் வரவில்லை. ஆனால் அந்த இயற்கை காட்சியை  நேரில் பார்ப்பது மிக அழகு. படத்தில் பார்த்ததை விட பன்மடங்கு மனம் மயங்கும் காட்சி. 



எங்கள் படகுக்காரர் கொஞ்சம் வயதானவர். அவர் பிரெஞ்சு மொழியில் ஏதோ பேசினார். மதாம் , முஷியே என்று எங்களை கூப்பிடுகிறார் என்று மட்டும் தெரிந்தது.


அடுத்து எங்களை Mua Cave என்னும் இடத்தில இறக்கி விட்டார்கள். 500 படிகள் மலை என்ற வேண்டும். மிகுந்த களைப்பு, மழை வேறு தூறல் போட தொடங்கிற்று. என்றாலும் முயற்சியைக் கை விடவில்லை. 



காற்றில் ஈரப்பதம் அதிகம்,மழை , அடித்த வெயிலின் புழுக்கம் இவற்றின் காரணமாக வியர்த்து ஊற்றியது. மேலே சென்றால் காணும் காட்சி பரந்த வயல் வெளிகள் , சுற்றிலும் மழைக் குன்றுகள், நடுவே ஓடும் சிவப்பு ஆறு, அதில், அந்த மழையிலும் குடை பிடித்துக்கொண்டு படகுப் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள். கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். 



வியட்நாமில் எல்லா இடங்களிலும் பயணிக்கும் இந்தியர்கள். இந்திக்கு இணையாக செந்தமிழ் , சுந்தர தெலுங்கு , களி மலையாள குரல்கள். 

மறுபடி எங்களைக் கொண்டு வந்து விடுதிக்கு அருகிலேயே இறக்கி விட்டார்கள்.அன்று இரவு கடையில் சாப்பிட்டு விட்டு களைப்புடன் வந்து படுத்து விட்டோம். நாளை காலை Ha Long Bay - Cruise இல் செல்ல வேண்டும்.

- அடுத்த நாள்  Ha Long Bay 









Comments

Popular posts from this blog

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை