வியட்நாம் பயணம் - Ha Long Bay
Nin Binh போலவே Ha Long Bay-க்கும் , தொகுப்பு பயணம் என்றால் Old Quarters லிருக்கும் விடுதி வாசலிலேயே வந்து அழைத்துச் செல்கிறார்கள். 8 மணிக்கு கிளம்பினால் Ha Long Bay - படகுத்துறையில் 11 மணி போல இறக்கி விடுகிறார்கள்.
இந்தியர்கள் என்றால் எல்லாமே சைவமாக இருப்பார்கள் என்று ஒரு புரளியை வடக்கிந்தியர்கள் உருவாக்கி விட்டார்கள் போல. check-in சோதனையின் போதுதான் கவனித்தோம். எங்கள் உணவுத் தேர்வாக "சைவம்" என்று போட்டிருந்தார்கள். என்னடா இது மதுரக்காரனுக்கு வந்த சோதனை என்று நாங்கள் கொந்தளித்து விட்டோம்! நீங்கள்தான் இந்தியராயிற்றே, அசைவம் சாப்பிடுவீர்களா என்று ஒரு தடவைக்கு மூன்று தடவை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பிறகு மதிய உணவின் போது மேசையில் முதலில் வந்த வாத்துக்கறியைப் பார்த்த பிறகுதான் நிம்மதி பிறந்தது!
check in - கடமைகளை முடித்த பின் ஐந்து நிமிடம் சிறிய படகில் பயணித்து நம்முடைய கப்பலைச் சென்று சேர்ந்தோம். நாங்கள் முதலில் பதிவு செய்திருந்தது சற்றே விலை குறைவான ஒரு cruise package தான். ஆனால் இரண்டு நாட்கள் முன் அது 5 நட்சத்திர அந்தஸ்துக்கு(!) உயர்த்தப்பட்டுள்ளதாக Ms. Perfume சொன்னாள். எங்களுக்கு cruise வசதிகள் பற்றி முதலிலேயே பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. அதனால் எது கிடைத்ததோ அது மிக நன்றாகவே இருந்தது.
Ha Long Bay- இல் நடுக்கடலின் அந்த சூழல், அது கொடுக்கும் பரவச உணர்வுகள் தான் எங்கள் எதிர்பார்ப்பு. அதிலும் இரவையும், அதிகாலையையும் அமைதியாக அமர்ந்து ரசிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் இரு நாள் ஓர் இரவு (24 மணி நேரம்) package எடுத்தோம். இது தவிர Ha Long Bay வருவதற்கு ஒரு நாள் (6 மணி நேரம்), 3 நாள் 2 இரவு (48 மணி நேரம்) என்றெல்லாம் பிரிவுகள் உண்டு.
கப்பல் உடனே கிளம்பி விட்டது. பெட்டி படுக்கைகளை எல்லாம் அறையில் வைத்து விட்டு, நேராக உணவு மேசைக்கு வரச்சொன்னார்கள். மிகத் தரமான, சுவையான மதிய உணவு. கப்பலில் இருந்த வரை, வகை வகையான புதிய உணவுகள். நாக்குக்கும், வயிற்றுக்கும் ஒரு குறைவும் இல்லை.
வியட்நாமின் நட்சத்திர சுற்றாலாத் தலம் என்பது தென் சீனக் கடலில் அமைந்திருக்கும் Ha Long Bay - தான். இந்த இடம், பிலிப்பைன்ஸ்-இன் பலவான் தீவு, தாய்லாந்தின் ஜேம்ஸ் பாண்ட் தீவு இவை இடையே பல ஒற்றுமைகளைக் காணலாம். இரண்டு நிமிடம் செலவு செய்து google செய்து பாருங்களேன், உங்களுக்கே புரியும்.!
பச்சை நிறத்தில் கடல் நீர் , சுண்ணாம்பு பாறைக் குன்றுகள், குகைகள் எல்லாமே ஒரே போல. அதிலும் சுண்ணாம்புப் பாறை குகைகள் (limestone caves) வடக்கு அந்தமானில் பராத்தாங் தீவிலும், மலேசியாவின் பத்து மலையிலும் கூட ஒன்று போலவே இருக்கிறது. (இதில் அந்தமான் மற்றும் மலேசியா மட்டும்தான் நான் போய் இருக்கிறேன் , மற்றதெல்லாம் google தேடல்கள் தான்)
சாப்பிட்டு முடித்த அரைமணி நேரத்தில் Sung Sot Cave அல்லது Surprise Cave போக வேண்டும் என்று எல்லோரையும் கிளம்பி தயாராக இருக்க சொன்னார்கள். அதெற்கென்று தனி படகில் கூட்டிச் செல்கிறார்கள்.
இந்த இடத்தை பார்த்து ரசிப்பதற்கு எங்கள் வழிகாட்டி 45 நிமிடம்தான் கொடுத்திருந்தான்.
இங்கும் படி ஏற வேண்டும். ஏற,இறங்க என்று மொத்தம் 350 படிகள். சிறு நுழைவாயில்,அதனால் முதலில் கூட்ட நெரிசலாகத் தெரிகிறது. இங்கிருந்து Ha Long Bay -ஐ எடுக்கும் படங்கள்தான் கணினியில் MS Windows -background படமாகவோ screen saver படமாகவோ வருகிறது.
ஆனால் உள்ளே நுழைந்தால் Hotel Transylvania படத்தில் ஒரு இடம் காண்பிப்பார்களே அது போல ஒரு பிரம்மாண்டம், ஆச்சர்யம் (அது அனிமேஷன் என்பதால் மிகப் பெரியது). இதற்காகத்தான் Surprise Cave என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
Over millions of years, acidic groundwater or underground rivers dissolve away the limestone, leaving cavities which grow over time. இப்படி ஒரு குகை உருவாவதற்கே பல மில்லியன் ஆண்டுகள் வேண்டும். அப்படி ஒரு இடத்தில் நாம் நிற்கிறோம் என்பதே ஒரு பரவசம்! வெளியில் இருந்த வெயிலின் கசகசப்பு மாறி இயற்கை அமைத்துக்கொடுத்த A/c -ஐ அனுபவிக்கும் தருணம்!
இது சற்று பெரிய குகை என்பதால் நடந்து செல்ல நேரம் வேண்டும்.எந்த இடத்தைப் பார்த்தாலும் அழகாக இருக்கிறது. நிறைய விளக்குகள் போட்டு வைத்திருப்பதால் அங்கு நின்று ஒரு புகைப்படம் மட்டுமாவது எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.
நம்மூரில் உள்ளது போலவே அங்கும் ஒரு புகைப்படக் கலைஞர்கள் குழு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி போட்டோ எடுக்கிறது. வெளியில் செல்லும்போது நீங்கள் விரும்பினால் மட்டும் frame போட்ட உங்கள் புகைப்படத்தை வாங்கிக் கொள்ளலாம், கட்டணம் ஒரு லட்சம் வியட்நாம் டாங்குகள் (நம்மூர் ரூபாய்க்கு 330!).நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
45 நிமிடம் போதவில்லை, நாங்கள் மேலும் 10 நிமிடங்கள் எடுத்துக் கொண்டோம். படகில் எங்களுடன் வந்த எல்லோரும் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
அடுத்து அதே படகில் எங்களை டி டாப் (Ti Top) தீவுக்கு கூட்டிக்கொண்டுசென்றார்கள். இந்த தீவு ரஷ்ய விண்வெளிவீரர் Gherman Stepanovich Titov, 1962 இல் இங்கு வந்ததன் நினவாகப் பெயரிடப்பட்டது. அவருக்கு ஒரு சிலையையும் அங்கு வைத்திருக்கிறார்கள்.
சிறு தீவு, சுத்தமான ஆனால் சிறிய கடற்கரை மணற்பரப்பு, அலையில்லாத ஆழமில்லாத தண்ணீர்.அங்கிருந்து படிகள் ஏறி மேலே சென்று View Point இல் இருந்து Ha Long Bay -ஐப் பார்க்க முடியும். களைப்பினால் நாங்கள் செல்லவில்லை.
ஒரு பெருங்கூட்டம் நாங்கள் போகும்போதே தண்ணீருக்குள் விளையாடிக்கொண்டு இருந்தது. மேகலாவும் இன்பாவும் அங்கு சேர்ந்து கொண்டார்கள்.
அந்த சிறிய இடத்திலும் ஒரு குழு வாலிபால் விளையாடியது, ஒரு சிறு குழு கால்பந்து விளையாடியது. மகிழ்நன் கால்பந்து அணியில் உடனடியாக சேர்ந்து விளையாட தொடங்கி விட்டான். வேறு வேறு நாட்டை சேர்ந்தவர்கள் ஒன்றாக விளையாடினார்கள். இசைக்கும் காதலுக்கும் மட்டுமல்ல, விளையாட்டுக்கும் மொழி தேவையில்லை போல. விளையாட்டே ஒரு மொழிதான்!
இந்த இடத்திற்கு எங்கள் வழிகாட்டி ஒரு மணி நேரம்தான் கொடுத்திருந்தான். நாங்கள் சரியாக வந்து விட்டாலும் உடன் வந்த மக்கள் நெடு நேரம் எடுத்துக்கொண்டார்கள்.
மறுபடி கப்பல், 7 மணிக்கு இரவு உணவு தயாராகி விடும். அதற்கு முன் 6 மணிக்கு கப்பலின் மேல் தளத்தில் சமையல் வகுப்பு, Spring Roll செய்யக் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆறரை மணிக்கெல்லாம் பொன் அந்தி வானம் , கப்பலின் மேல் தளத்தில் இருந்து அதை ரசிப்பது ஒரு சுகானுபவம் !
மதியம் போலவே இரவு உணவும் அருமை. உணவை முடித்தவுடன் மறுபடி மேல் தளத்துக்கு வந்து விட்டோம். ஒரு தைவான் பெண்மணி பாட்டுக்கு ஆட ஆரம்பித்து விட்டார். கூடவே அவருடன் வந்த பலரும் ஆடினார்கள்.
எங்களுக்கு பக்கத்து (உண்மையில் தூரத்து) கப்பலில் இருந்து ஹிந்தி குத்துப்பாடல்கள் காற்றில் மிதந்து வந்தது. அரை மணி நேர ஆட்டத்துக்கு பிறகு எல்லோரும் போய் விட்டார்கள்.
நான் நெடுநேரம் மேலே நின்று கொண்டிருந்தேன். கயிற்று கட்டில் போட்டு அங்கேயே தூங்கி விடலாம் போல இருந்தது!
காலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது. 5 மணிக்கெல்லாம் விடியத் தொடங்கி வெளிச்சமாக இருந்தது, சிறு மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்ததது. அப்போதும் கூட கப்பலின் மேல்`தளத்தில் இரண்டு பேர் அமர்ந்து இருந்தார்கள். 6 மணிக்கு Taichee வகுப்புகள்இருந்தது மழை காரணமாக ரத்தாகி வித்திட்டது.
காலை ஆறரை மணிக்கே காலை உணவு. அதை முடித்தவுடன் Luon Cave - க்கு கூட்டிச் சென்றார்கள். நாங்கள் சாப்பிட்டு வருவதற்குள் மழை நின்று விட்டது.
அங்கு நாம் மட்டும் தனியாக துடுப்பு படகை எடுத்து (kayaking) செல்லலாம். ஆழம் மிகக் குறைவுதான். பயமெல்லாம் இல்லை. அபாயமாக ஏதும் இருந்தால் அனுமதிக்க மாட்டர்கள். அப்படி வேண்டாம் என்றால் குழுவாக சிறு படகில் நம்மைக் கூட்டிச் செல்வார்கள்.
கொஞ்ச தூரத்தில் Luon Cave, இது சற்றே அகலமான குகை. படகில் அந்த குகையைக் கடந்து சென்றால் சுற்றிலும் மலைக்குன்றுகள் சூழ அழகான இடம், ஆளில்லா தீவு என்றும் சொல்லலாம். காலை இளம் வெளிச்சத்தில், மேக மூட்டத்துடன் இருந்த வானிலையில் மெய் மறக்கலாம்.
அத்தீவில் மனிதர்கள் இல்லை என்றாலும் குரங்குகள் அதிகம் உள்ளன. நாம் நிறைய குரங்குகளை பார்த்து பழகி விட்டோம், ஆனால் ஐரோப்பியர்களுக்கு குரங்கைப் பார்த்தால் அப்படி ஒரு சந்தோசம். முதலிலேயே காலை உணவில் இருந்து எடுத்து வந்த வாழைப்பழத்தை குரங்குகளுக்கு வீசினார்கள். ஒரு 45 நிமிடங்கள் அங்கே இருந்திருப்போம். மீண்டும் கப்பல்.
10 மணிக்கெல்லாம் Brunch என்ற பெயரில் மீண்டும் குறைந்த வகைகளுடன் உணவு. 11 மணிக்கு எங்களை மீண்டும் படகுத் துறையில் இறக்கி விட்டார்கள். வேன் தயாராக இருந்தது, இரண்டரை மணிக்கே விடுதி வந்து சேர்ந்து விட்டோம்.
திரும்பி வந்து யோசித்ததில் இந்த 24 மணி நேரத்தில் யாரும் எங்களுடனும், நாங்கள் யாருடனும் , பெரிதாக பேசிக்கொள்ளவில்லை;பழகவில்லை. ஒரு அழகான இடத்தை அமைதியாய் ரசித்த அனுபவம் என்று (மட்டும்) சொல்லலாம். ஆனால் அதுவும் ஒரு வகையான நிறைவே!
அன்றைய இரவே Da Nang செல்ல விமானம்.
- அடுத்து Da Nang
Comments
Post a Comment