வியட்நாம் பயணம் - Da Nang
அன்று இரவு எட்டு மணிக்கு Da Nang நகருக்கு எங்கள் விமானம். விமான நேரத்திலோ, விமான நிலைய நடைமுறைகளிலோ எந்த பிரச்சினையும் இல்லை.
மூன்று நாட்கள் தங்குவதற்காக Da Nang - இலும் ஒரு HomeStay தான் பதிவு செய்திருந்தோம், HomeStay Halley என்று பெயர். பல முறை booking.com வழியாக தகவல் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை, கொடுக்கப்பட்டிருந்த மொபைல் எண் Whatsapp -இலும் இல்லை. நேரடியாக பேசினாலோ அந்த பக்கத்தில் இருந்து பேசும் பெண்மணிக்கு ஆங்கிலம் தெரியவில்லை.
ஆனால் அவர் சொல்லி அவருடைய 9ஆம் வகுப்பு படிக்கும் அவருடைய மகன் பேசினான், அவனுக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்து இருந்தது. வீடு விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தான்.அதனால் நம்மையே டாக்ஸி பிடித்து வரச் சொல்லி விட்டான். ஆனால் இரண்டாம் முறையே I can't understand too much English என்று சொல்லி விட்டான்.
எது வேண்டுமானாலும் sms அனுப்ப வேண்டும். அவர்கள் அதை Translator செயலி மூலம் மொழி பெயர்த்து, நமக்கும் ஆங்கிலத்தில் பதிலை அனுப்புவார்கள். நேரில் பேசினாலும் மொபைல் போன் கையில் இல்லாமல் பருப்பு வேகாது. எல்லா நாளும் எங்கள் தகவல் தொடர்பு இப்படியேதான் நடந்தது. ஆனால் மிக நல்ல மனிதர்கள்!
நம்ம ஊர் ஓலா , ஊபர் போல அங்கே Grab என்ற செயலி. அதில்தான் டாக்ஸி பதிவு செய்திருந்தோம். நம் டாக்ஸி வருவதற்குள் விமான நிலையத்தில் சில டாக்ஸி ஓட்டுனர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்,நம் சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையம் போல. ஆனால் யாரும் அடாவடி செய்வது இல்லை.
Ha Noi போலவே இங்கும் 4 பேர் தங்கும் அறை, மூன்று இரவுகளுக்கு மொத்தம் 3500 இந்திய ரூபாய்தான். இந்த விடுதி நகரில், மக்கள் குடியிருப்புக்கு நடுவில் உள்ளது. இங்கு தங்க வருபவர்களும் பெரும்பாலும் வியட்நாமியர்கள்தான் போல. நாங்கள் மட்டுமே அந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தனியாக சுற்றி வந்தோம். பக்கத்துக்கு வீடு எதிர் வீட்டில் இருக்கும் மக்கள் எங்களைக் கண்டு புன்னகைக்க ஆரம்பித்தார்கள்.
100 மீட்டர் தூரத்திலேயே Wet Market மற்றும் கடை தொகுதிகள். இந்த மூன்று நாட்களில் இளநீர் கடை, பழக்கடை,மளிகைக்கடை காப்பிக்கடை, பிரட் கடை, சாப்பாட்டுக்கு கடைகள் என்று கடைக்காரர்கள் என்னை கண்டு அங்கீகரிக்க ஆரம்பித்தார்கள். அது என்ன அங்கீகரிக்க...அன்றைய தேதியில் அந்த ஏரியாவிலேயே கருப்பாக, உயரமாக , கரு கருவென மீசை வைத்த ஒரே ஆள் நான்தான். கவுன்சிலர் தேர்தலில் நின்றால் வென்றிருக்கக்கூடும் (தேர்தல் என்று ஒன்று நடந்தால்!!).
Da Nang -இல் நீங்கள் மோட்டார் சைக்கிளோ அல்லது ஸ்கூட்டரோ வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இந்திய ரூபாயில் 300 இல் இருந்து 400 வரைதான் ஆகும். பெட்ரோல் விலையும் கூட குறைவுதான். எங்கள் விடுதியிலேயே ஐந்தாறு வண்டிகள் இருந்தன. நாங்கள் போக வேண்டிய இடங்கள் எல்லாம் ஒரு வழிக்கே 30-40 கிமீ தொலைவு போகவேண்டும். எங்களுக்கு அது சரிப்படாது என்பதால் டாக்ஸிதான்.
மறுநாள் காலையில் நாங்கள் Da Nang கடற்கரைக்குப் போனோம். மாலையில் வேறு ஒரு இடம் முடிவு செய்திருந்ததால் காலையிலேயே அங்கு போய் விட்டோம். 36 டிகிரி செல்சியஸ்-சரியான வெயில். இந்த வெயிலிலும் உடல் முழுதும் sun screen தடவிக்கொண்டு கடல் நீரில் குளிக்கும் வெள்ளைக்காரர்கள்!
உடுப்பி போனபோது தவறவிட்ட Parasailing-ஐ இங்கு பிடித்துவிடலாம் என்று நினைத்தோம். Parasailing என்பது படகில் நம்மையும், பாராசூட்டையும் கட்டி வேகமாக படகை ஓட்ட, பாராசூட் நம்மை மேலே கொண்டு சென்றுவிடும், மெதுவாக வேகத்தைக் குறைத்து படகை நிறுத்தும்போது பாராசூட்டும் நாமும் கீழே வந்து கடலில் விழுவோம்.
கட்டணம் எல்லாமே மிக அதிகம். பெரும் தயக்கத்திற்குப் பிறகு வந்தது வந்து விட்டோம், எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இவ்வளவு பணம் வாங்குகிறார்கள், மொத்தமே 5 நிமிடங்கள்தான் நாம் காற்றில் இருக்கிறோம். சும்மா கொஞ்ச தூரம் சுற்றி விட்டு இறக்கி விட்டு விடுகிறார்கள். வானில் பறந்தது நல்ல அனுபவம்தான், ஆனால் காசுக்கேத்த தோசை இல்லை.
வெயில் தாளவில்லை, 12 மணிக்கு விடுதிக்கு வந்து விட்டோம்.பக்கத்துக்கு மார்க்கெட்டில் போய் இளநீர் வாங்கி வந்தேன். நம்மூர் காசில் 80 ரூபாய்க்கு தாய்லாந்து இளநீர். ஒரு இளநீரில் ஒரு லிட்டர் தண்ணீர் இருக்கும். எல்லா சுற்றுலா இடங்களிலும் சிறிய இளநீரே 250 ரூபாய் வரை விலை, இது மட்டுமல்ல வியட்நாமில் எல்லா சுற்றுலா இடங்களிலும் அதை சுற்றியுள்ள கடைகளிலும் இரண்டு மடங்கு விலை இருக்கிறது. ஊருக்குள் இருக்கும் கடைகளில் 40 ரூபாய்க்கு ஒரு வியட்நாம் காப்பி குடிக்கலாம் என்றால், சுற்றுலா தலங்களில் 150 ரூபாய்.
3 மணிபோல கிளம்பி Marble Mountain என்னும் புத்த ஆலயம். இதுவும் மலை மேலே இருக்கிறது. நல்ல வேளையாக ஒரு குறிப்பிட்ட தளம் வரை இங்கு லிஃப்டும் தனியாக இருக்கிறது, அதற்கு தனியாக கட்டணம் உண்டு. இங்கும் குகைகள் தான் அதன் சிறப்பு.
அங்கும் ஒரு வடஇந்திய குழு போட்டோ எடுத்துவிட்டு "பாரத் மாதாக்கி ஜே" என்று கோஷமிட்டது.
அங்கிருந்து நாங்கள் Hoi An போனோம். Hoi An - என்பது அப்போதைய பிரெஞ்சு அதிகாரிகளின் பழைய குடியிருப்பு. நடுவிலே Thu Bon ஆறு, இரு புறமும் பெரிய வீதிகள், அதில் இருந்து உள்ளே செல்லும் தெருக்கள். வீடுகளை எல்லாம் பழைய பாணியில் இப்போதும் வைத்திருக்கிறார்கள்.
வீதியெங்கும் சாப்பாட்டுக்கடைகள், மதுபான விடுதிகள், Night Market என்று ஒரு தெரு முழுதும் கடைகள். ஆற்றின் இரு புறமும் திரு விழா போல சுற்றுலா பயணிகளின் கூட்டம்.
மதுபான விடுதிகளில் இன்னிசைக் குழுக்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.மிக நல்ல பாடகர்கள், இனிமையான சூழலுக்கேற்ற பாடல்கள்.நாங்களும் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு, பாடல்கள் கேட்டுக்கொண்டு இருந்தோம்.
Thu Bon ஆற்றில் படகுப் பயணம், 20 நிமிடம் துடுப்புப் படகில் கூட்டிச் செல்கிறார்கள். இருபுறமும் உள்ள கடை வீதிகளை வேடிக்கை பார்க்கலாம். பலர் மெழுகுவர்த்தியை ஏற்றி ஒரு அட்டைத்தடுப்புக்குள் வைத்து நேர்த்திக்கடன் போல ஆற்றில் விட்டார்கள்."ராக்கம்மா கையத்தட்டு" பாடலில் ஷோபனா குளத்தில் விளக்குகளை விடுவாரே அது போல!
Hoi An வீதிகளில் எல்லா நாடுகளின் உணவுகளும் கிடைக்கிறது.நண்பர் ஒருவர் இலங்கை உணவகம் ஒன்றின் முகவரி கொடுத்து இருந்தார். நாங்கள் வேறு பக்கம் வந்து விட்டோம். மறுபடி அந்தப் பக்கம் போக வேண்டுமானால் இன்னும் நடக்க வேண்டும். அதனால் அங்குள்ள இந்திய உணவகத்தில் இரவு உணவு. ஐந்து நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் இந்திய உணவு, நன்றாக இருந்தது.
தெருக்களில் பல இடங்களில் பழக்கடைகள். நாங்கள் இங்கு(ம்) டூரியன் பழம் சாப்பிட்டோம். சிங்கப்பூரில் இருக்கும்போது, சீசன் இருந்தால் வாரம் இரண்டு முறை டூரியன் வாங்கி விடுவோம். நீண்ட நாட்களுக்குப் பின் Ha Noi , Da Nang , Hoi An மூன்று இடங்களிலும் டூரியன் சாப்பிடும் வாய்ப்பு இருந்தால் தவறவிடவில்லை.
டூரியன் வாங்கினால் அங்கேயே சாலை ஓரமாக வைத்து சாப்பிட்டுவிட வேண்டும். டாக்ஸி-யில் கொண்டு போகவிடுவார்களா என்று தெரியாது, சில சமயம் விடுதியில் கூட உள்ளே கொண்டுபோக விட மாட்டார்கள். அவ்வளவு மணம் (சிலருக்கு துர்நாற்றம்!). சாப்பிட்டால்தானே ருசி தெரியும்!
அன்றைய நாளை முடித்துக்கொண்டு விடுதிக்கு வந்துவிட்டோம்.
Mi Quang என்பதும் நூடுல்ஸ் தான், அதனுடன் கொடுக்கப்படும் கோழி என்பது தேங்காய் போடாமல் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் நம்மஊர் கோழிக்கறி போல சுவை. அதே கோப்பையில் இன்னும் பல சேர்மானங்கள் நிலக்கடலைப் பருப்பு, வெங்காயத் தாள், அவித்த முட்டை என்று . இது தவிர தனியாக வேக வைக்காத பச்சைக் கீரையும் கொடுக்கிறார்கள். நாங்கள் அவர் கடைக்கு சென்றதில் கடைக்கார பெண்மணிக்கு சந்தோசம், எங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார். பச்சைக் கீரையையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்.
உணவை முடித்த பின் உடனடியாக கிளம்பி Ba Na Hills போனோம். இது அந்த காலத்தில் பிரெஞ்சு அதிகாரிகளின் கோடை வாசஸ்தலம். மத்திய வியட்நாமின் கொடுமையான வெய்யிலில் இருந்து தப்பிக்க துரைமார்கள் தேர்ந்தெடுத்த இடம். இந்த இடத்தை கொஞ்சம் அழகுபடுத்தி, நவீனப்படுத்தி அதில் ஒரு தீம் பார்க்கையும் அமைத்துள்ளார்கள்.
இதில் எல்லோரையும் கவரும் முதல் attraction அதன் கேபிள் கார், 2013 இல் உலகிலேயே நிற்காமல் நெடுந்தூரம் செல்லும் கேபிள் கார் என்ற சாதனை படைத்தது. கடல் மட்டத்தில் இருந்து 1500மீட்டர் உயரம் உள்ள அந்த இடத்தை அடைய 6 கிமீ கேபிள் காரில் செல்ல வேண்டும். நல்ல thrill இருக்கும்.
பசுமையான காடுகள், கொட்டும் அருவிகள்,மேக மூட்டங்கள் இவற்றுக்கு மேலே நாம் கேபிள் காரில் செல்வோம்.
Ba Na Hills -இல் தற்போது உருவாக்கிய சுற்றுலா இடங்களில் மிக முக்கியமானது Golden Bridge என்னும் பாலம்.
இரண்டு பெரிய கைகள் இந்தப் பாலத்தை தங்கியிருப்பது போன்ற ஒரு அமைப்பு. எல்லோரும் வந்து தங்களை புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இடம். அங்கிருந்து பார்த்தால் தெரியும் பசுமையான வெப்ப மண்டலக் காடுகள்,தொலைவில் தெரியும் மேகம் மூடிய மலைகள் அற்புதம்!
வியட்நாம் அல்லது சீனாவின் உட்பகுதியில் இருந்து வருபவர்கள் இதுவரை நம்மைப் போன்ற சற்றே மாநிறமான இந்தியர்களை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் கண்களில் நாம் எல்லாம் அதிசய பிறவிகள் போல. சிலர் எங்களை சுட்டிக்காட்டி தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரு பெண் அவருடைய கேமராவில் எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 40 வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருவில் யாரவது ஒரு வெள்ளைக்காரர் வந்தார் என்றால் மொத்த சிறுவர் கூட்டமும் அவர் பின்னாலேயே செல்லும் என்பது நினைவுக்கு வந்தது.
125 வருடங்கள் பழமையானது இந்த பிரெஞ்சு கிராமம். எல்லாம் பழைய பாணி கட்டிடங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள்.
ஆங்காங்கே திறந்த வெளி மேடைகளில் ஐரோப்பிய சர்க்கஸ், தென் அமெரிக்க நடனம் என்று நிகழ்ச்சிகள். உள்ளரங்குகளிலும் 4D திரைப்படங்கள் போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருந்தன. எதையெல்லாம் பார்க்க முடியுமோ, அதையெல்லாம் கண்டு ரசித்தோம்.
மறுபுறம் தீம் பார்க் அமைப்பில் பல்வேறு விதமான சவாரிகள். ரோலர் கோஸ்டர் - பராமரிப்பு காரணமாக வேலை செய்யவில்லை, ஆனால் வேறு நிறைய சவாரிகள், வீடியோ விளாயாட்டுகள். எவ்வளவோ த்ரில் கொடுக்க கூடிய சவாரிகள் இருந்தாலும் சிறுவர்கள் குழுமியிருப்பது என்னவோ வீடியோ விளையாட்டுக்களில்தான்! கட்டாயப்படுத்தியதால் மகிழ்நனும் இன்பாவும் Space Shot ride சென்றார்கள்.
மறுபடி கேபிள் காரில் ஏறினால் திரும்ப கொண்டு கீழே கொண்டு வந்து இறக்கி விடுகிறார்கள்.
மொத்தத்தில் Ba Na Hills எங்களை ஏமாற்றவில்லை!
நல்ல களைப்பு, எப்போது போய் படுக்கையில் விழலாம் என்று மனம் ஏங்கியது..!!
மறுநாள் காலை My Son (மை சன் அல்ல, மீ சான் என்று சொல்ல வேண்டும்) போக வேண்டும், எங்கள் விடுதியில் இருந்து 40 கிமீ தூரம். ஆனால் அங்கு கன மழை இருக்கிறது என்று வானிலை முன்னறிவிப்பு சொன்னது. ஆனால் சும்மா உட்கார்ந்திருந்து என்ன செய்வது, homestay சொந்தக்காரரிடம் குடையை வாங்கிக்கொண்டு கிளம்பி விட்டோம். வியட்நாமின் கிராமங்கள் வழியே நாங்கள் போக வேண்டியிருந்தது, எல்லாமே நம்ம ஊர் போலவேதான் இருக்கின்ற உணர்வு.
My Son அமைந்துள்ள இடம் மலையை ஒட்டியுள்ள அழகிய காடு, மலையில் இருந்து பெருகி வரும் ஒரு நீரோடை அதன் நடுவே செல்கிறது.நம்ம ஊராக இருந்தால் இந்த இடமே ஒரு முக்கிய picnic spot ஆக ஆகி இருக்கும்.நாங்கள் செல்லும்போது மழை விட்டு விட்டது, அவ்வப்போது லேசான தூறல் மட்டுமே.
My Son என்பது பழைய இந்து சைவக்கோவில் அல்லது கோவில்கள். 4 ஆம் நூற்றாண்டில் இருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட பல கோவில்களின் தொகுப்பு இந்த இடம். உலகின் மிகப்பெரிய இந்துக் கோவில் கம்போடியாவில் இருப்பது பலருக்கும் தெரியும். கம்போடியாவைப் போலவே மத்திய வியட்நாமிலும் இந்து மதம் இருந்திருக்கிறது . Champa அல்லது Cham பேரரசு மத்திய வியட்நாமை ஆட்சி செய்யும்போது கட்டப்பட்ட கோவில் இது.
சைவக்கோயில் என்றாலும் அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் ஒரு சிறு சிலையும் இருந்தது.
பத்ரேஸ்வரர் என்ற பெயரில் லிங்க வடிவில் சிவன் வழிபடப்பட்ட இடம். இப்போது மிகவும் அழிந்து பட்டு, சிதிலமாகி நிற்கிறது.
தமிழ் நாட்டில் பல்லவர் காலம் (கி.பி.7 ஆம் நூற்றாண்டு) வரை கோவில்கள் மரத்தாலோ அல்லது செங்கல்லாலோ மட்டுமே கட்டப்பட்டன.தமிழ் நாட்டின் முதல் கற்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில்தான். My Son -இல் உள்ள இந்தக்கோவிலும் செங்கல்லால் கட்டப்பட்டதுதான். செங்கல் கட்டிடங்கள் காலத்தைத் தாண்டி நிற்பது கடினம்.
இது மட்டுமில்லாமல் வியட்நாம் போரில் அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சினாலும் சில கோவில்கள் இடிந்து தரை மட்டமாகி இருக்கின்றன. போரில் குண்டு விழுந்த இடங்கள் இன்னும் பெரிய குழிகளாக உள்ளன.
இப்போது இந்த இடம் யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களின் பட்டியலுக்குள் உள்ளது. இத்தாலி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பல்கலை கழகங்கள் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்கின்றன. மேலும் இந்திய அரசின் உதவியுடன் தற்போது இருக்கும் கட்டிடங்களை காப்பாற்றி பராமரிக்கும் பணியும் நடக்கிறது. குறைந்த பட்சம் மேலும் அழிந்து போகாமல் தடுப்பதற்கான நன் முயற்சிகள் .
1700 ஆண்டுகள் பழமையான ஒரு இடம். கோவில் வழிபாட்டில் இன்றும் இருந்திருந்தால் பழமையான இந்துக்கோவில்களில் ஒன்றாக இருந்திருக்கும்!
விடுதி திரும்புவதற்கு மாலை 4 மணி ஆகிவிட்டது. 9 மணிக்கு Ha Noi செல்ல விமானம் பிடிக்க வேண்டும்.
- அடுத்து Ha Noi - நிறைவுப்பகுதி
Comments
Post a Comment