பயணங்கள் தொடர்கின்றன - 8 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) Final - காசா (Kaza) - சந்திரதால் - மணாலி

ஆறாம் நாள் காலை காசா-வில் இருந்து காலை 9:00 மணிக்குக் கிளம்பிவிட்டோம். காஸாவில் இருந்து இன்னும் கொஞ்ச தூரம் போய் விட்டால் மணாலி வரும்வரை எந்த தொலைபேசி சேவையும் இருக்காது. குறைந்தபட்சம் 27 மணி நேரம் நம்மை யாரும் தொடர்பு கொள்ள முடியாது. முதலில் கீ பௌத்த மடாலயம் (Key Monastery). ஆயிரம் வருடங்கள் பழமையான ஒன்று. ஸ்பிட்டி சமவெளியில், மிகப் பெரிய திறந்த வெளிக்கு நடுவே, சற்றே உயரமான குன்றின் மேல் அமைந்துள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரு castle - போலத் தெரியும். பல்வேறு படையெடுப்புகளால் அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டது இந்த மடாலயம் . உள்ளே நுழைந்தவுடன் எல்லோருக்கும் ஒரு பால் இல்லாத தேநீர் - (cinnamon பட்டை தூக்கலாகப் போட்டு!) கொடுக்கிறார்கள். உள்ளே வெளிச்சம் குறைவாக இருக்கிறது. நாங்கள் போன நேரத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது, அதனால் அந்த இடத்துக்குள் மட்டும் நாங்கள் அனுமதிக்கப் படவில்லை. வெளியில் உள்ள நவீன கட்டடங்கள் தவிர உள்ளே இருக்கும் அறைகள் எல்லாம் மலையைக் குடைந்து உருவாக்கி இருக்கலாம். உள்ளே துறவிகள் தனியே அமர்...