உடுப்பி பயணம்-2
பொதுவாக எந்த ஊருக்குச் சென்றாலும் அதிகாலை நடையை நான் தவற விடுவதில்லை. எப்படிப்பட்ட சாதாரண ஊரானாலும் அதிகாலையில் அது அழகாகத்தான் தோன்றும் என்பது என் கருத்து. சுற்றுலா என்று வந்து விட்டு இரவெல்லாம் குடித்துவிட்டு அதிகாலையில் உறங்குபவர்கள் எதைப் பெறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் மிக மிகப் புத்துணர்வான அதிகாலை அனுபவத்தை இழக்கிறார்கள். நாங்கள் தங்கி இருந்த விடுதியில் உணவு செய்து கொடுக்கும் வசதியெல்லாம் இல்லை. அதிகாலை நடையுடன் தெருவோர டீக்கடையில் ஒரு காப்பியும் குடிக்கலாம் என்று நினைத்து நடந்தேன். உடுப்பியில் நான் அப்படி ஒரு டீக்கடையைப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் மிக அரிதாகத்தான் இருக்கும். உடுப்பி ஊரின் நிலஅமைப்பு கேரளா போலத்தான். அடுக்கு மாடி குடியிருப்புகள் தவிர தனி வீடுகள் எல்லாமே தேக்கு,பலா,மா உள்ளிட்ட மரக்கூட்டங்களுக்கு உள்ளே இருக்கின்றன. ஒரு சுவரைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீடுகள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன்.ம்ஹூம் அப்படி எதுவும் தென்படவில்லை. காலை 8 மணிக்கெல்லாம் கார் வந்து விட்டது. இன்று உடுப்பி உள்ளூர் கடற்கரைகள்தான்...