பயணங்கள் தொடர்கின்றன - 5 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 2 - சிட்குள் முதல் நாக்கோ வரை

மூன்றாம் நாள் காலை 5 மணிக்கே எழுந்து விட்டோம் டார்ஜிலிங் போனால் Tiger Hills சூரிய உதயம் என்று ஒன்றைத் தனியாக கூட்டிப்போய் காண்பிப்பார்கள். சிட்குளில் நாங்கள் தங்குமிடத்தில் இருந்து பார்த்தால் சற்றே சிறிய அளவில் அது சாதாரணமாகக் காணக் கிடைக்கிறது! மலையில் காலை 4 மணிக்கெல்லாம் வெளிச்சம் வந்து விடுகிறது. வெளியில் 9 டிகிரி குளிர், பாஸ்பா நதியைச் சென்று பார்த்தோம். தண்ணீர் இரு கரை புரண்டெல்லாம் போகவில்லை என்றாலும் வேகமாக ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர் உயரத்திலிருந்து தாழ்வான பகுதிக்குப் போவதுதான் காரணம். காலை உணவுக்கு முன் சிட்குள் கிராமத்தின் உள்ளே சென்றோம். இது இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படுகின்றது. அப்படிப்பார்த்தால் கடலோரம் இருக்கும் எல்லா கிராமும் கூட கடைசி கிராமந்தானே! ஆனால், இந்த கிராமத்திற்கு அப்பால் வேறு சாலைகள் இல்லை. ஒரு பக்கம் ஆறு, ஒரு பக்கம் மலை, அடுத்த புறம் திபெத் -சீன எல்லை என்பதால் இந்த ஊருக்கு வந்துவிட்டு வேறு ஊருக்குப் போக வேண்டும் என்றால் வந்த சாலையிலேதான் திரும்ப வரவேண்டும். அதனால் கடைசி கிராமம் என்று சொல்லிவி...