பட்டப்பெயர்கள்!
அந்த பெரியண்ணன்தான் , 'டேய் சங்கர், கரடியை நான் கூப்பிட்டேன்னு கூப்பிடுடா' என்று சொன்னான். எனக்கு கரடியைத் தெரியும், அடுத்த தெருப்பையன். என்னுடைய வயதுதான். உடம்பெல்லாம் முடியாக இருப்பான். 'கரடி, உன்னை குணா அண்ணன் கூப்பிடுது'. அவன் கோபத்துடன் இடது கையால் என்னை ஓங்கி அறைந்து விட்டு குணாவைப் பார்க்க ஓடிவிட்டான். கன்னத்தைத் தடவிக்கொண்டு, நான் விசாரித்ததில் யாருக்கும் கரடியின் உண்மையான பெயர் தெரியவில்லை. பிறகு, எங்கள் ஆச்சிதான் அவன் அம்மாவிடம் விசாரித்து விட்டுச் சொன்னாள் அவன் பெயர் சுந்தர் ராஜன் என்று. பட்டப்பெயர்கள் வைப்பது இப்போது இருக்கிறதா என்றே தெரியவில்லை. இருந்தாலும் பெரிதாக வெளியே தெரிவதில்லை போலும். ஆனால் நாங்கள் படிக்கும்போது நிறையப் பேருக்குப் பட்டப்பெயர் இருக்கும். அதற்கு முன் இதைவிட அதிகமாக இருந்திருக்க வேண்டும். கல்வி பரவலான பிறகு, பட்டப்பெயர்கள் குறைந்து விட்டனவா? அது என்னவோ தெரியவில்லை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வைக்கும் பட்டப்பெயர்கள் எல்லாமே மொன்னையாக, சுவாரஸ்யம் இல்லாமலே இருக்கும். சில ஆசிரியர்கள் தேர்வி...